திருமணம்: இன்று உன் முறைப்படி, நாளை என் முறைப்படி
மேற்கு வங்கத்தைச் சார்ந்த பிரபல நடிகையும், பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் நுஸ்ரத் ஜகான் என்பவர், கொல்கத்தாவை சார்ந்த தொழிலதிபரான நிகில் ஜெயின் என்பவரை 2019 ஜூலை மாதம் 19ல் இந்து சடங்குகளின் படி படி துருக்கியில் திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் இரண்டு நாளுக்கு பின் ஜூலை 21 அன்று இருவரும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இரண்டு வருடங்கள் கூட தாக்கு பிடிக்காத இந்த திருமண வாழ்வு பிரிவில் போய் நின்றது. திருமணம் துருக்கியில் அந்நாட்டு சட்டப்படி நடந்ததால் இந்தியாவில் அது செல்லாது. எனது திருமணம் சட்டப்பூர்வமானது அல்ல. இது திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்ததாகத்தான் அர்த்தம் என்று அலட்சியமாக கூறிவருகிறார் நுஸ்ரத் ஜகான்.
திருமண வாழ்க்கை என்பது குடும்ப வாழ்வின் அடித்தளமாக அமைகிறது என்பதை புரியாமல் இருக்கும்போது அலட்சியங்கள் தொடர்கின்றன. திருமறையானது ஒரு கிறிஸ்தவர் மற்றொரு கிறிஸ்தவரை திருமணம் செய்துகொள்ள வலியுறுத்துகிறது. "அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள்" (2 கொரிந்தியர் 6:14 to 16) ஒரு கிறிஸ்தவன் கிறிஸ்துவை உடையவனா/ளாக இருக்க வேண்டும். குறிப்பாக இதே புத்தகத்தில் ஒரு கிறிஸ்தவன்/ள் வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என்று பவுலடியாரே கூறுகிறார். "ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின." (2 கொரிந்தியர் 5:17) கிறிஸ்தவர்கள் பிறசமய தெய்வத்தின் முன் திருமணம் செய்து கொள்வதும், பின்பு கிறிஸ்தவ ஆலயத்திற்கு வந்து மீண்டும் ஒரு திருமணம் செய்து கொள்வதும் விகற்பமாக உள்ளது. கடமைக்காக ஒருவருக்கு திருமுழுக்குக் கொடுத்து, செய்த திருமணத்தையே மீண்டும் ஆலயத்திற்குள் வைத்து நடத்தி மன திருப்தியை அடைந்து கொள்வது திருமறையின் பார்வையில் எப்படி ஏற்புடையதாக இருக்கிறது என்பது தெரியவில்லை.
மனந்திரும்புதல் இல்லாத கிறிஸ்தவர்களின் பெருக்கம் கிறிஸ்தவத்துக்கு இழுக்கு. ஒருவன்/ள் கிறிஸ்தவ பெற்றோருக்கு பிறப்பதினால் கிறிஸ்தவனாக/ளாக மாறுவதில்லை. மறுபிறப்பு பெற்றவர்கள் தான் உண்மை கிறிஸ்தவர்கள் என்பதனை இயேசு கிறிஸ்துவே வலியுறுத்துகிறார். வயது வந்தவர்கள் மனந்திரும்புதல் இல்லாமல் திருமுழுக்கை பெற்றுக் கொள்வதில் உள்ள சிக்கலையும் இங்கு காணமுடிகிறது.
கடமைக்காக கர்த்தரின் ஆலயத்தில் வைத்து திருமணம் செய்கிறவர்கள் பார்வையில் திருமறையின் போதனைகள் அற்பமாக எண்ணப்படுகிறது. துருக்கியில் உள்ள ஆலயத்தில் திருமணம் முடித்துவிட்டு, இந்தியாவிற்குள் வந்தால் இறைவன் பார்க்க மாட்டாரா? துருக்கியில் ஒரு கடவுளும், இந்தியாவில் ஒரு கடவுளுமா இருக்கிறார்? கடவுளைப் பற்றிய பயம் இன்று மக்களுக்கு இல்லை? துணிகரமாக கடவுளின் சமூகத்தில் பிரதிக்கணைகளை எடுத்துவிட்டு அதனை துச்சமாகக் கருதி அது living together போன்றது என்பது எவ்வளவு அலட்சியம்?
மனித வாழ்வின் துவக்கத்தில் ஆண், பெண் பாலுணர்வால் ஈர்க்கப்பட்டு உடலுறவு கொண்டு வாழ்ந்தனர். இக்காலகட்டத்தில் யாருக்கும் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருந்திருக்கிறது. பிறக்கிற குழந்தைகள் தாய் யார் என்பதை மட்டும் அறிந்திருந்தனர். ஆனால் தந்தை யார் என்றே தெரியாமல் வாழ்ந்தனர். இதனை பாலுணர்வு கோட்பாடு (sex communion theory) என்று அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த கற்காலத்தை போன்று நமது நவீன காலமும் நகர்ந்து கொண்டு செல்ல விரும்புகிறது.
அதேவேளையில் குடும்பம் என்று ஒன்று தேவையில்லை, திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழ்ந்தால் போதும் என்ற சூழ்நிலை இளவயதினர் சிலருக்கு ஏற்புடையதாக தோன்றும். ஆனால் வயதான காலங்களில் தனித்து விடப்படும் சூழலுக்குள் தள்ளப்படுவர். தனிமையே அவர்களை கொன்று விடுகிறது. நல்ல உடல் இருக்கும் போது அவற்றை விரும்பி ஒருவனோ/ளோ வர இயலும். ஆனால் வியாதி, வறுமை, எதிர்பாராத விபத்துகள், வீட்டுக்குள் முடக்கப்படும் சூழல்கள், கொரோனா போன்ற கொள்ளை நோய்கள் வரும்போது living togetherல் இருந்து எளிதாக விலகிவிடுவார்கள். ஏனென்றால் உண்மையான அன்புறவின் அடிப்படையில் வாழ்வை கட்டி அமைக்காததால் விழுதற்ற ஆலமரமாக காணப்படுவர். காற்றில் விழ நேரிட்டால் தூக்கி நிறுத்த வழியின்றி பரிதாபமாக கிடக்கும் நிலை மனிதனுக்கும் ஏற்படும். கவனமாக திருமறையை படித்து, அதில் நிலைத்திருப்போம்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்
Comments
Post a Comment