மணமகன் மடியிலா? மணவாளன் மடியிலா?


அன்பே உருவான நண்பருடைய மகனின் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். கடுஞ்சொற்கள் என்றால் என்ன என்று தெரியாத வீட்டிற்கு வரப்போகும் மணமகள் எவ்வளவு கொடுத்து வைத்தவள். மணமகனின் குணமும் தகப்பனின் குணம் போன்றதே. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்ன? இறை பக்தியில் வளர்த்தெடுக்கப்பட்ட குடும்பம். திருமறை ஆய்விலேயும் இறைவனின் பணிகளிலேயும் ஊறிப்போன மணமகன்.

நான் உனக்கு சவுக்கியத்தை தேடாதிருப்பேனோ என்ற நகோமியைப் போன்ற மாமியார். தவறு அம்மா.

வீட்டிற்கு வந்த பின் தான் தெரிந்தது இது ஒரு பரலோகம் என்று. மகளைக்காட்டிலும் மருமகளை பெருமையாகக் கொண்டாடும் மாமனார். எங்குப் பார்த்தாலும் அன்புச் சொட்டும் வார்த்தைகள்.

மாதங்கள் சில தான் உருண்டோடியது. எதிர்பாராத விபத்தில் சிக்கிக் கொண்டாள் மணமகள். எப்படியும் காப்பாற்றி விடவேண்டும் என்று பாடுபட்டார்கள். ஆயினும் கர்த்தரின் மார்பில் சாய்ந்து இளைப்பாற சென்று விட்டாள்.

"ஏதேனில் ஆதி மணம்” பாடிய வாய்களே, "என்றும் கர்த்தாவும் நான் கூடி வாழ்வேன்” என்று பாட ஆரம்பித்தது. சங்கீதம் 128 யை வாசித்த வாய், சங்கீதம் 23 யை வாசிக்கிறது. மணமகனின் மார்பில் சாய வாஞ்சித்தவள், மணவாளன் மார்பில் சாய்வதற்காக சென்று விட்டாள் என்பதை என்னால் கிரகிக்க முடியவில்லை.

இளந்தென்றல் வீசி எல்லாம் கைக்கூடிவிட்டது என்று மகிழும்போது, திடீரென்று எங்கிருந்தோ வந்த சூறாவளி, சுழற்றி சுழற்றி கப்பலை ஆழ்த்தி விட்டதை எண்ணிப்பார்க்க இயலவில்லை.

திருமண வாழ்வு என்பது எப்பொழுதும் மகிழ்ச்சி தான் என்று எண்ணி எண்ணி தூங்காமல் இருந்தது இதற்குத் தானோ! "இந்த காரியம் கர்த்தரால் வந்தது” என்று நினைத்தது ஆறு மாதத்திற்குத் தானோ!! திருமணத்தில் சந்தோஷத்தைப் பகிர்ந்துக் கொள்ள பல்லாயிரம் பேர். ஆனால் துன்பத்தைத் தாங்கிக் கொள்ள நான் மட்டும் தானோ என்று தாரைத் தாரையாக கண்ணீர் வடித்த மணமகனைப் பார்த்த போது திருமறையில் நின்று எப்படி ஆறுதல் கூறுவது என்று புரியவில்லை. 

மகிழ்ச்சியான திருமண வாழ்வில் இப்படி எதிர்பாராத சூழலை சிலர் எதிர்க்கொள்ளுகின்றனர். அப்பொழுது மிகப்பெரிய தடுமாற்றம் ஏற்பட்டு விடுகிறது. இறைவன் என் வாழ்வில் மட்டும் ஏன் இப்படிப்பட்ட காரியங்களை அனுமதிக்கிறார்? என்ற கேள்விகள் எழுகின்றன. இதனால் சிலர் விரக்தி அடைகின்றனர். திருமறைக்கு ஓய்வுக் கொடுக்கின்றனர். சிலர் இறைவன் மீது மிகுந்த வருத்தம் அடைந்து ஆலயத்திலிருந்து ஒதுங்கி வாழ்கின்றனர்.

லாசரு இறந்தபோது மரியாளும், மார்த்தாளும் வேதனையுற்றனர். தாங்க முடியாத துயரம் அடைந்தனர். இயேசுவே நீர் என் சகோதரன் வியாதிப் பட்டபோது வந்திருந்தால் நலமாயிருக்குமே என்று புலம்பினர். ஆயினும் இயேசுவின் பார்வையில் இந்த செயல்வழியாக  கூட தேவனுடைய மகிமை விளங்கும் என்கிறார் (யோவான் 11:4). அப்படியென்றால் எங்கள் வாழ்வில் ஏற்படும் இழப்பின் வழியாக  கடவுள் மகிமைப்பட முடியுமா? என்றுக் கேட்கலாம். இறைவன் துன்பங்களின் வழியாகக் கடந்துப் போகும் போது தானும் கூடவே இருக்கிறார். ஏனென்றால் இயேசு தாமே துன்பப்பட்டதால் துன்பப்படுகிறவர்களின் துயரத்தைப் புரிந்துக்கொள்ளுகிறார். அதோடு மட்டுமல்லாமல் புதிய வழியையும் காட்டி நம்மை வழிநடத்துவதற்கு வல்லவராயிருக்கிறார். ஆகவே எச்சூழல் நம்மை எதிர்த்து வந்தாலும் இறைவனிடம் மன்றாட வேண்டும். புதிய வாசல்கள் திறக்கும் வரையிலேயும் அவர் பாதத்தைப் பிடித்துக்கொள்ளுவோம். அவர் நல்லவர். அவர் கிருபை என்றுமுள்ளது. 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள் 

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி