சோர்ந்து போகாதே மனமே


ஜப்பான் நாட்டின் டென்னிஸ் நட்சத்திரமாக உலாவிவந்த நவோமி ஒசாகாவிற்கு வயது 23 தான் 2வது ரேங்கில்(2021) இருந்து வருகிறார். இவர் டென்னிஸ் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியத்தைக் கொடுத்தார். என்னவென்றால் மனச்சோர்வு காரணமாக பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுகிறேன் என்றார். நடந்துக்கொண்டிருந்த மகளிர் ஒற்றையர் பிரிவின் தொடரின் முதல் சுற்றில் ரூமேனியா நாட்டைச் சார்ந்த பேட்ரிசியா மரியாவை வீழ்த்தி அனைவரின் பாராட்டைப் பெற்றவர் ஆனால் வழக்கம் போல் நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்தார். மீடியாவை சந்திப்பது எனக்கு பதட்டமாக இருக்கிறது. எனவே விருப்பமில்லை என்றார்.

ஒசாகாவின் இந்த செயலானது விதிமுறைகளை மீறுகிற செயலாகவும், இதனால் அபராதமும், கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் கலந்துக் கொள்வதற்கு தடையும் விதிக்க வேண்டியது வரும் என்று பிரெஞ்ச் ஓபன் நிர்வாகம் எடுத்துக்கூறியுள்ளது.

2018 யு எஸ் ஒபனில் இருந்தே தான் மன அழுத்தத்தால் கஷ்டப்பட்டுவருவதாக குறிப்பிட்டுள்ளார். எனவே தற்பொழுது டென்னிஸ் களத்திலிருந்து சிறிது காலம் விலகி இருக்க விரும்புவதாகவும், பிறகு விளையாட்டுப் போட்டியில் கலந்துக்கொள்ள போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மனச்சோர்வு (Depression) என்பது வாழ்வில் பல்வேறு சூழல்களில் ஏற்படுகிறது. குறிப்பாக குடும்பத்தில் வாழும் பெண்கள், மற்றும் ஆண்களும் இதில் பாதிக்கப்படுகின்றனர். சிலருக்கு வரவேண்டிய பணி உயர்வுகள் கிடைக்காமல், தன்னை காட்டிலும் மிகவும் இளம் வயதுள்ளவர்கள் பணி உயர்வு பெறும் போது மனச்சோர்வு அடைந்து பணிகளில் நாட்டம் இல்லாமல் போய் விடுவர். நாம் பணிச் செய்து என்ன பயன், வேலைக்குப் போனால் என்ன? போகாமல் இருந்தால் என்ன? என்று மாறி விடுவர்.

சில வேளை கணவன் அல்லது மனைவி அல்லது பிள்ளைகள் நமது சொற்படிக் கேட்காமல், மதிக்காமல் போகும் போது நம்மை யாரும் இந்த வீட்டில் மதிக்கமாட்டேன் என்கிறார்கள். இந்த வீட்டில் நான் இருந்து என்ன பிரயோஜனம்? என்ற மனச்சோர்வு ஏற்பட்டு விடுகிறது.

நன்றாக படித்தும், திருமணமான பின்பு சரியான வேலையில்லாமல் கணவன்/மனைவி இருக்கும் போது பொருளாதாரத்தில் சுயமாக எதுவும் முடிவெடுக்க முடியவில்லையே என்று நினைக்கும் போதும், மனச்சோர்வு ஆட்கொண்டு விடும். நாம் சம்பாதிக்காததால் தான் நம்மிடம் எதையும் கன்சல்ட் செய்வதில்லை என்று நினைக்க ஆரம்பித்து விடுவர்.

மேற்கூறியது போன்று பல்வேறு சூழல்களில் மனச்சோர்வு வரும்போது வாழ்க்கையே வெறுத்தது போன்று எதிலும் நாட்டம் இல்லாமல் ஆகிவிடுவர். சிலவேளைகளில் தூக்கம் இல்லாமல் தவிப்பர், சாப்பிட மனமற்று காணப்படுவர். சுகதுக்க காரியங்களுக்குச் செல்வதில் ஆர்வமில்லாதவராகவும் சரியாக குளிக்காமல் உடையை மாற்றாமலும் இருக்கும் போது மற்றவர்கள் அறிந்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால் அந்த குறிப்பிட்ட நபர் மன அழுத்தத்தில் உள்ளார் என. மேலும் இவர்கள் தற்கொலை எண்ணமுடையவர்களாகவும், குடும்பத்தினருடன் சேர்ந்து பழகாமல் தனித்திருக்கிறவர்களாகவும் இருந்தால் மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாம் அல்லது ஆற்றுப்படுத்தினரிடம் (Counselor) அழைத்துச் செல்லலாம்.

மன அழுத்தத்திற்குள்ளானவர்களை சரியாக புரிந்துக் கொண்டு அந்த சூழலில் இருந்து வெளியே வர உதவிச் செய்துக் குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்க உதவிட வேண்டும். அதற்கு பதிலாக அவர்களை குறைக் கூறி மேலும், மேலும் மன அழுத்தத்திற்குள்ளாக மாற்றி விடக்கூடாது. உண்மையான கரிசனையுடைய உரையாடல் மிகுந்த பலனைக்கொடுக்கும். மனகாயங்கள் ஆறுவதற்கு உதவிடவேண்டும்.

ஒரு வீட்டில் உள்ள ஜன்னல்களைத் திறந்து விடும் போது எப்படி வீடானது காற்றோட்டம் உடையதாக சுவாசிப்பதற்கு இனிமையாக இருக்கிறதோ அதைப்போன்று தான் பிரச்சனைகள், காயங்கள் உள்ளவர்களுக்கு ஆற்றுப்படுத்துதல் பயனளிக்கும். பின்னர் குடும்பங்களில் சகஜமாக பழகி மகிழ்வர்.

திருமறையில் எலியாவைப் பார்க்கும் போது கர்த்தருக்கென்று வைராக்கியம் கொண்டவனாக செயல்பட்டான். பாகால் தீர்க்கதரிசிகளை மக்கள் உதவியுடன் கொன்றுப் போட்டான். கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம் என்று மக்கள் எல்லாரும் கூறி கர்த்தரிடமாய் திரும்பியபோது எலியா மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பான். இஸ்ரவேல் தேசமே கர்த்தரிடமாய் திரும்பிவிட்டது என்று ஆனந்தம் அடைந்த போது யேசபேலிடம் இருந்து கொலை மிரட்டல் வந்தது. அதனை எதிர்பார்க்காததால் எலியா சோர்ந்து போகிறான். பெரிய எதிர்பார்ப்புக்கு பின் எதிர்பாராத கொலை மிரட்டல் அவனை மருளச் செய்தது. யாருடைய கண்களிலும் படாமல் இருக்க சூரைச் செடியின் கீழ் படுத்துக் கொள்ளுகிறான். சாப்பாடு, தண்ணீர் என்பதைப் பற்றி கவலையில்லாமல் சாவதை விரும்பினான்.

மனச்சோர்வின் உச்சக்கட்டமாகத்தான் எலியா சாவை விரும்புகிறான். அவனை ஆற்றுப்படுத்த யாரும் இல்லை. நான் மட்டும் தான் கர்த்தருக்காக இருக்கிறேன். எனவே நான் யேசபேலின் கையினால் மடிவதை விட தானே மடிந்துப் போகிறது நல்லது என்று நினைக்கிறான். எனவே மனச்சோர்வு (Depression) அதிகரித்து மன இறுக்கத்திற்குள் (Tension) சென்று விடுகிறான். காரணம் எதிர்பார்ப்புக்கு மாறாக நடந்த சம்பவத்தை எலியாவால் ஜீரணிக்க முடியவில்லை.

இறைவனோ எலியாவின் மனச்சோர்வையும், மன இறுக்கத்தையும் மிக நேர்த்தியாக மாற்றி தொடர்ந்து 40 நாட்கள் பயணப்பட செய்து விடுகிறார். அன்பிற்குரியோரே இறை சமுகம் உங்கள் மனச் சோர்வுக்கு மாற்றத்தை கொடுக்க இயலும். எனவே உங்கள் இதயத்தை கர்த்தரிடம் ஊற்றிவிடுங்கள். அவர் ஆறுதலை தந்தருளுவார்.

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி