எதைப்பின் தொடருகிறோம்?
இன்று மனிதர்கள் வெளி உலகில் நேரடியாக பழகித் தெரிந்துக் கொள்வதைவிட WhatsApp, Instagram, Tweeter, Facebook போன்றவற்றின் மூலமே அதிகமான தகவல்களைத் தெரிந்துக் கொள்ளுகிறார்கள். அது சரியா, தவறா என்பதை உணராமல் அதை அப்படியே வாழ்க்கைக்குள் செலுத்தி விடுகின்றனர்.
வெளிநாட்டு நிறுவனம் ஓன்று ஒரு புள்ளி விபரத்தை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால் சமூகவலைத் தளங்களில் அதிகமான பணத்தை சம்பாதிக்கும் பிரபலங்களைப் பற்றியது. வலைத்தளங்கள் என்பது நட்பையும், சமூக அக்கறைகளையும், பாராட்டுகளையும் பகிர்ந்துக் கொள்வதைத் தாண்டி பணம் சம்பாதிக்கும் காரியமாக மாறிவிட்டது. உலக அளவில் அதிகமான பணத்தை சம்பாதிப்பவராக கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ உள்ளார். இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விளம்பரத்தை பதிவிட வேண்டும் என்றால் 11 கோடி ரூபாயைப் பெற்றுக்கொள்ளுகிறார். அதேப்போன்று நமது நாட்டு கிரிக்கெட் வீரர் கேப்டன் விராட்கோலி ரூ 5 கோடி பெற்றுத்தான் விளம்பரத்தை பதிவிடுகிறார். இவரை 132 மில்லியன் மக்கள் பின்தொடர்கிறார்களாம். உலக அளவில் 19 வது இடத்தை பிடித்துள்ளார். அதேப் போன்று பிரியங்கா சோப்ரா என்ற பாலிவுட் நடிகை ஒரு பதிவுக்கு 3 கோடி ரூபாயை பெற்றுக் கொள்ளுகிறார். இவரை 65 மில்லியன் மக்கள் பின் தொடர்கிறார்களாம். இவர் உலக அளவில் 23 வது இடத்தைப் பிடித்துள்ளார். இதைப் போன்று பல பிரபலங்கள், நடிகர், நடிகைகள் தன்னைப் பின்தொடரும் மக்கள் கணக்கிற்கேற்ப பணத்தை சம்பாதிக்கிறார்கள்.
அவர்கள் விளம்பரப்படுத்துவதெல்லாம் பணத்திற்காகவேயன்றி நம் மீது அக்கறைக் கொண்டு அல்ல. பிரபலங்களைப் பின்பற்றி வாழ்க்கையில் முடிவெடுக்க தீர்மானிக்காதிருங்கள். அவர்கள் பணத்திற்காக எதையும் விளம்பரப்படுத்தலாம். நாம் பின்தொடர்வது சரியான நபரா என்பதைத் தீர்மானியுங்கள். சரியான வாழ்க்கையை வாழாதவர்கள் தவறான பாதையைத் தொடர நம்மை உந்தித்தள்ளுவார்கள். அவர்கள் பேச்சு எல்லாம் நம் குடும்பவாழ்வை அசைப்பதாக அமையும். கவனம்!
நல்ல முன்மாதிரியான மனிதர்களை நம் கண் முன் நிறுத்த வேண்டும். நல்ல திருமறை வார்த்தைகளை வாசித்து அசைப் போட்டு வாழ்வை அதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். கிறிஸ்துவானவர், "தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்." (1பேதுரு 2:21) என்று பேதுரு குறிப்பிடுகிறார். இயேசுவின் மாதிரியான வாழ்வு நாம் பின்பற்றுவதற்கு ஏற்புடையதாக இருக்கிறது. அந்த மாதிரியில் எந்த விதமான சுயநலமும் இல்லை. வீணான பிரச்சனையும் இல்லை. ஏன் இயேசுவின் வார்த்தைகளை அடிச்சுவடுகளாக வைத்துக் கொண்டு நம் குடும்ப வாழ்வை நடத்தக் கூடாது. முயன்றுதான் பார்ப்போமே!
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்
Comments
Post a Comment