அன்பில் மயக்கம்


சிலர் தங்கள் கணவர்/மனைவி மிகவும் மோசமானவனா/ளாக இருக்கிறார்களே மாறவே மாட்டார்களா? என்று புலம்பலாம். முள்ளை முள்ளால் தான் எடுக்கவேண்டும். எனவே சண்டையிடும் கணவனோடு/மனைவியோடு சண்டையிட்டால் தான் முடிவு வரும்,   வீட்டைப் பற்றி கவலைப்படாத கணவனைப் போன்று நாமும் வீட்டைப் பற்றிக் கவலைப்படாமல் சுற்றி வந்தால் தான் திருந்துவார் என்று மனைவி முடிவு கட்டினால் திருந்தி விடுவாரா? எதிர்மறையான அணுகு முறையால் குடும்பம் தான் பாதிக்கப்படும். நாம் பயணம் செய்கிற படகை நாமே சேதப்படுத்துவது போல் ஆகிவிடும்.

அன்பு ஓன்று தான் மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை புரிந்து செயல்பட வேண்டும். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாநிலத்தில் ஒரு சிறைச்சாலை இருக்கிறது. இதன் பெயர் 'சிங் சிங்' என்பதாகும். இந்த சிறைச்சாலையில் கொடிய தவறு செய்தவர்களை அடைத்து வைப்பார்கள். இந்த சிறைச்சாலை 1826 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 19ம் மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் இங்கு உள்ள கைதிகள் மிகவும் கடினமாக நடத்தப்பட்டார்கள். இந்த சிறைச்சாலையின் இயற்பெயர் மவுண்ட் பிளசென்ட் சிறைச்சாலை (Mount Pleasant Prison) என்பதாகும். இந்த சிறைச்சாலை சிங் சிங் என்ற கிராமத்தில் கட்டப்பட்டதால் இந்த பெயரே விளங்கியது. இதில் ஏறக்குறைய 800 அறைகள் 1826லே கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு உள்ள கைதிகள் மிகவும் பயங்கரமானவர்களாக இருப்பதால் இந்த சிறைச்சாலையில் பணியாற்ற அதிகாரிகள் யோசிப்பார்கள். இச்சூழலில் 1921ம் ஆண்டு சிறைச்சாலையின் பொறுப்பை லூயிஸ் லாஸ் என்ற அதிகாரி பொறுப்பேற்றார். 

பொறுப்பேற்ற உடனே அவரது மனைவி கேத்ரினிடம் கவனமாக நடந்துக் கொள்ளுமாறு சிநேகிதிகள் கூறினார்கள். ஆனால் கேத்ரின் அதைப் பொருட் படுத்தாமல் கைதிகளின் குறைகளைக் கேட்டு சரிச்செய்வதிலே கருத்தாக இருந்தார். கைதிகள் ஒருவருக்கு பார்வை திறன் இழந்திருந்த போது பிரைலி எழுத்துக்களைக் கொண்டு படிக்க கற்றுக்கொடுத்தார். காது கேளாத ஒருவருக்கு (Sign language) சைகை மொழி மூலம் கற்றுக்கொடுத்தார். ஒரு தாயைப் போன்று இருந்து அனைத்து கைதிகளின் தேவைகளை சந்தித்து வந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக விபத்தில் காலமானார்.

இறுதி அஞ்சலி செலுத்த கைதிகள் தங்களுக்கு அனுமதி வேண்டும் என்றனர். 16 ஆண்டுகள் எங்கள் தாயைப் போன்று இருந்து அன்புக் காட்டினார்கள் என முறையிட்டனர். இதை ஏற்று சிறை துறை அனுமதிக் கொடுத்தது. கைதிகள் ஒரு மைல் தூரம் நடந்துச் சென்று மரியாதைச் செய்து விட்டு சிறைக்குத் திரும்பினர். யாரும் தப்பிச் செல்லவில்லை. காரணம் மிருகம் போன்று கொலை, கொள்ளை, தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் அன்பு என்ற மந்திரச் சொல்லுக்கு மயங்கினர். ஆகவே தான் திருமறையும் கூறுகிறது அன்பே பெரியது. அந்நிய பாஷைகளானாலும், தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்து போம் (1கொரி 13:8). இவைகளெல்லாம் குறைவுள்ளது. ஆனால் நிறைவானது வரும் போது குறைவானது ஒழிந்து போம். அந்த நிறைவானது எது வென்றால் அன்பு.

இன்று பலரிடம் தீர்க்கதரிசன வரம் இருக்கிறது. அந்நியபாஷைப் பேசும் வரம் இருக்கிறது. சுகம் அளிக்கும் வரம் இருக்கிறது. ஆனால் அன்பு மட்டும் இல்லை. திருச்சபையில் ஆவியின் நிறைவு, ஆனால் வீட்டில் அன்புக்கு குறைவு. வெளியே பரிசுத்தவான், உள்ளே அன்புத்தாழ்ச்சி. அந்நிய பாஷையை பேசுவற்காகவும், தீர்க்கதரிசனம் வரம் வேண்டும் என்பதற்காகவும் உபவாசம் எத்தனை எத்தனை நாட்கள்! என்றாவது அன்பு செலுத்த பெலன் தாரும், என்னால் என் மனைவி அல்லது கணவர் அல்லது பிள்ளைகளை நேசிக்க முடியவில்லையே எனக்கு பெலன் தாரும் என்று எத்தனை நாட்கள் உபவாசம் இருக்கிறோம்.

உலகம் பாவத்தில் அழிகிறது என்று புலம்பும் நீங்கள், அன்பில்லாமல் நீங்கள் அழிந்து போவது ஆண்டவர் பார்வையில் எவ்வளவு வருத்தம் என்று நினைக்கிறீர்களா?  

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற "Hi" என type செய்து “93 42 80 71 51” என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும்

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php  

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்