சிந்தனைச்செய் மனமே

 


உத்திரபிரதேச மாநிலத்த்தில் மக்கள் தொகை எண்ணிக்கை 23 கோடியாகும்.   இந்தியாவின் மக்கள் தொகை தற்பொழுது 138 கோடி. சீனாவின் மக்கள் தொகை 144 கோடி. 2027ம் ஆண்டு சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்திற்கு வந்து விடும் என்று கணிக்கப்படுகிறது. இச்சூழலில் உத்திரபிரதேசத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த புதிய மசோதா கொண்டு வரப்பட உள்ளது.

மக்கள் அரசின் கட்டுப்பாட்டிற்கு கீழ்படிய வேண்டும் என சலுகைகள் வாரிவழங்கப்பட்டுள்ளது.   குறிப்பாக குறைந்த வட்டியில் வீட்டுக்கடன், ஒரு குழந்தையை பெற்றுக்கொள்வோருக்கு ரூ 80,000/- ஊக்கத்தொகை, முதல் குழந்தை பெண் குழந்தையாய் இருக்கும் போது குடும்ப கட்டுப்பாடு செய்துக் கொண்டால் ரூ 1 லட்சம் ஊக்கத் தொகை என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில் குழந்தைகளை அதிகம் பெற்றால் அரசாங்க சலுகைகள் ரத்து என்று அதிர்ச்சி வைத்தியமும் கொடுத்துள்ளார் ஆதித்யநாத். உதாரணமாக இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் உள்ளாட்சி தேர்தலில் நிற்க தகுதியை இழக்கிறார். மூன்றாவது பிள்ளையைப் பெற்றுக்கொண்டால் பதவி உயர்வுக்கு சான்சே கிடையாது.   இதெல்லாம் சொல்லியும் கேட்காவிட்டால் நான்கு பேருக்கு மட்டுமே ரேசன் கார்டில் சலுகை வழங்கப்படும். பலதார மணம் புரிந்த ஆண்களுக்கு அரசு நலத்திட்டங்களுக்கு வாய்ப்பே கிடையாது.

மேற்கண்ட மசோதா மூலம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த விரும்புகின்றனர். இது உத்திரப்பிரதேசத்தின் நிலைமை. ஆனால் இன்றைய சூழல் சற்று மாறுபட்டு வருகிறது. திருமணம் முடிந்தவுடன் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவா அல்லது தள்ளிப்போடலாமா? இப்பொழுது குழந்தைகளைப் பெற்றுக் கொண்டால் நம்மால் கவனிக்க இயலாது அல்லது புரோமசனுக்கு அது இடைஞ்சல் எனவே வேண்டாம். வெளிநாட்டில் போய் இரண்டு பேரும் செட்டில் ஆனப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலைப் பெருகி வருகிறது.

இரண்டு பெற்றால் இன்பமயம், ஓன்று பெற்றால் ஒளிமயம் என்பது மறைந்து "நாம் இருவர் நமக்கு எதற்கு மற்றொருவர்" என்ற மனநிலை மக்கள் மத்தியில் வளர்ந்து வருகிறது. எனவே கருத்தடை மாத்திரைகளை அதிகம் எடுத்து உடலை அநேகர் கெடுத்துக் கொள்ளுகின்றனர். நாட்கள் கடந்த பின் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கின்றனர்.   ஆனால் மருத்துவமனைகளுக்கு அலையும் சூழல் வந்து விடுகிறது.

இன்று எங்குப்பார்த்தாலும் கருத்தரிப்பு மையம் என்ற பெயரிலே மிகப்பெரிய மருத்துவமனைகள் காளான் போன்று முளைத்து வருகிறது.   மிகப்பெரிய செல்வந்தர்கள் தங்கள் பணங்களை மருத்துவமனைகளில் கொட்டி அல்லது கட்டி காசு சம்பாதிக்க நினைக்கின்றனர். எனவே அவர்கள் கனவு நிச்சயம் நனவாக திட்டம் தீட்டியிருப்பர். 

மேற்கண்டவாறு இரண்டு வேறுபட்ட சூழல்கள் மத்தியில் திருமறை என்னக் கூறுகிறது  என்று பார்த்து வாழ்க்கையை சீர்படுத்திக் கொள்வது சாலச் சிறந்தது.   "பலுகிப்பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்" (ஆதியாகமம் 1:28) என்று கர்த்தர் கட்டளையிட்டுள்ளாரே. அப்படி இருக்கும் போது குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதில் தடைச் செய்யலாமா என்று யோசிக்கலாம். பலுகி பெருக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. சந்ததி, சந்ததியாக வாழையடி வாழையாக வளரவேண்டியது அவசியம் தான். குறிப்பிட்ட காலத்தில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது அவசியம். காலம் போன பின்பு மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி இறங்க வேண்டிய சூழலைத் தவிர்க்கலாம்.

அதே வேளையில் மக்கள் தொகை கட்டுப்பாடும் அவசியமாக உள்ளது. இல்லையெனில் இயற்கை வளங்கள் முழுவதும் மனிதனின் சுயநலத்தினால் அழிக்கப்பட்டுவிடும் பேராபத்து இருக்கிறது. அவ்வாறு அழிக்கப்பட்டால் சமச்சீரற்ற சுற்று சூழல் ஏற்பட்டு விடும். இவையெல்லாவற்றையும் தாண்டி நமது உணவு முறைகளால் வருங்காலங்களில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படப்போகிறது. மக்கள் தொகை 138 கோடி உள்ள இந்தியா, 100 கோடியாக மாறுவதற்கும் சாத்தியம் இருக்கிறது. சீனாவில் மக்கள் தொகை வளர்ச்சியானது தற்பொழுது குன்றியது போன்று இந்தியாவிலும் குன்றலாம்.  அப்பொழுது அரசு மீண்டும் பலுகிப்பெருகி பூமியை நிரப்புங்கள் உங்களுக்கு சலுகை அளிக்கப்படும் என்று கூறும் காலங்கள் ஏற்படலாம்!.

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் புத்தகம் : என் ரூபவதியே உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற "Hi" என type செய்து “93 42 80 71 51” என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்