பேசாமல் தூங்குங்க
இறைவனின் பணிகளை மேற்கொண்டு வரும் ஒரு இறை ஊழியர் இருந்தார். ஆனால் அவர் உள்ளத்தில் கவலைக்குடிக் கொண்டிருந்தது. ஆகவே அன்று இரவு தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தார். காரணம் சில முக்கியமான தீர்மானங்களை தன்னுடைய திருச்சபையிலே நிறைவேற்ற வேண்டியதிருந்தது. அதற்கு சபைக்குழு சம்மதிக்குமோ? மறுக்குமோ? என்று உள்ளத்தில் சிந்தித்துக் கொண்டே இருந்தார். மெதுவாக வீட்டின் மாடியில் ஏறி அங்கும் இங்குமாக உலாவிக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு சத்தம் அவர் செவியில் தெளிவாய் ஒலித்தது. “Little John go to sleep”(என் சிறு மகன் ஜாண் போய் தூங்கு). அங்கும் இங்கும் பார்த்தார். இது தன் தாயார் குரல் போல் அல்லவா இருக்கிறது! ஆனால் என் தாயார் இறைவனிடம் போய் சேர்ந்து விட்டார்களே என பின்பு தான் உணர்ந்தார். என் ஆண்டவர் தான் என்னை இப்படி அன்புடன் அழைக்கிறார் என்று பின்பு புரிந்துக் கொண்டார். உடனே வேகமாக மாடியில் இருந்து இறங்கி வீட்டிற்குள்ளே வந்தார். அவர் உள்ளமெல்லாம் மிகுந்த சமாதானத்தால் நிரப்பப்பட்டிருப்பதை உணர்ந்தார். படுக்கைக்குச் சென்றார். கவலையை மறந்து அப்படியே நிம்மதியாக உறங்கி விட்டார்.
காலையில் எழுந்து சபைக்கூடுகைக்குச் சென்றார். ஒரு பிரச்சனையும் இல்லாமல் அத்தனை தீர்மானங்களும் நிறைவேறியது. ஆண்டவருக்கு நன்றி செலுத்திக்கொண்டே திரும்பினார். இந்த சம்பவத்தை சகோதரி ஸ்டெல்லா தினகரன் அவர்கள் ஒரு இடத்தில் குறிப்பிட்டுளார்கள்.
குடும்ப வாழ்வில் சில வேளைகளில் பிரச்சனை மிகப் பெரிதாக வரப்போகிறது என்று கற்பனைச் செய்துக் கொண்டு எனக்கு தூக்கமே வரவில்லை என்று சிலர் புலம்புகின்றனர். எதிர்காலத்தில் அப்படி நடந்து விடுமோ அல்லது இப்படி நடந்து விடுமோ? நமக்கு இழப்புகள் வந்து விடுமோ? கொடிய நோய்கள் வந்து விடுமோ? வயதான காலத்தில் நம்மை யாரும் பார்க்காமல் அனாதைகளாக விட்டு விடுவார்களோ? என் பிள்ளை சரியாக LKG யில் படிக்க மாட்டேன் என்று ஓடுகிறானே. இவன் பெரியவனாகும் போது ஒரு வேலையும் கிடைக்காமல் தடுமாறி விடுவானோ என்று பல்வேறு விதத்தில் நடக்காததை நடந்து விடுமோ என்று சிந்தித்து சிந்தித்து தூக்கம் இல்லாமல் வாழ்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் ஒரு விதத்தில் மன நோயாளியாகக் கூட மாறி விடக்கூடும்.
எனவே திருமறை நமக்கு கொடுக்கும் அழைப்பு என்னவென்றால் நாளைய தினத்தைக் குறித்து கவலைப்படக்கூடாது. நாளையதினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதனதன் பாடு போதும் (மத்தேயு 6:34). ஒவ்வொரு நாளும் கடவுளுடைய கரத்திலே நம்மை ஒப்புக் கொடுத்து விட வேண்டும். பொருளாதார சிக்கலா? பிள்ளைகளைக் குறித்த எதிர்பார்ப்பா? வேலையில் நிரந்தரம் இல்லாத சூழலா? எதுவாக இருப்பினும் கர்த்தர் மேல் நம் பாரத்தை வைத்து விட வேண்டும். காரணம் அவர் நம்மை ஆதரிப்பார். நம்மை உருவாக்கியவர், குடும்பமாக இணைத்தவர். நம் தேவைகளை சந்தித்துத்தான் ஆகவேண்டும். அவர் மேய்ப்பர், நாம் ஆடுகள் தான். மேய்ப்பன் தான் கவலைப்பட வேண்டும். கவலைகளை கர்த்தர் மேல் வைத்து விட்டு நிம்மதியாக தூங்குவோம். கர்த்தரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற "Hi" என type செய்து “93 42 80 71 51” என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும்
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment