குடும்ப பொறுப்பு யாருக்கு?
குடும்பத்தை முன்னெடுத்துச்செல்வது ஆணா அல்லது பெண்ணா? குடும்பத்தின் முடிவுகளை எடுப்பது யார்? குடும்பத்தில் வரும் பிரச்சனைகளை, பொருளாதார தேவைகளை சந்திப்பதில் யார் முக்கிய பங்கு ஆற்ற வேண்டும்? போன்ற கேள்விகளை எழுப்பினால் நிரந்தரமான பதிலை அளிக்க இயலுமா என்றால் இயலாது. ஒவ்வொரு குடும்பத்திற்கு ஏற்ப மாறுபடும்.
சில குடும்பத்தின் தலைவர்கள் திருமணமான பின்பும் வாலிபர்களைப் போன்றே அலைவார்கள். அவர்களுக்கு எந்த பள்ளியில் பிள்ளையைப் படிக்க வைக்க வேண்டும்? அடுத்த வாரம் Fees கட்டவேண்டுமே அதற்கு என்னச் செய்ய வேண்டும்! பிள்ளைகள் பெரியவர்களாக மாறிவிட்டார்களே திருமணம் செய்து வைக்க வரன் தேட வேண்டுமே? போன்று எதையும் சிந்திக்கவும் மாட்டார்கள். இது ஒரு விதமான பொறுப்பற்ற குடும்ப தலைவர்கள்.
மற்றொரு புறத்தில் பிள்ளைகளைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் பெற்றோர் வீட்டிற்கு பிள்ளைகளை விட்டு விட்டு நினைத்தவுடன் கிளம்பி விடும் பெண்கள். இவ்வாறு பொறுப்பு இல்லாமல் நடந்துக் கொள்ளும் குடும்ப தலைவர், தலைவி இருக்கும்போது பொறுப்புக்காக போட்டியிடும் குடும்ப தலைவர், தலைவிகளும் அதிகரித்து வருகின்றனர். அகங்காரமும், ஆணவமும், உயர்ந்து தான் என்ற எண்ணம் தலைக்கு மேல் வந்து விடும் போது weight போட்டு பார்க்க முயலுகின்றனர். யார் வீட்டில் அதிகம் சம்பாதிப்பது? யார் குடும்ப வளர்ச்சிக்கு முக்கியமானவர்? யார் அதிகமாக உழைக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பி முடிவு எடுப்போம் என்று நினைக்கிறார்கள். இதனால் குடும்ப வாழ்வில் சலனமே ஏற்படுமேயன்றி விடியல் ஏற்படாது.
பணமும், பொருளாதாரமும் இன்று இளந்தம்பதியினரிடையே சுய சார்பு நிலையில் வாழ முடியும் என்ற நிலைக்குத் தள்ளுகிறது. எனக்கு உடலில் வலிமை உள்ளது, எனக்கு யாரும் தேவையில்லை என்ற மமதை நிலையை அடைந்து விடுகின்றனர். பணம் இருப்பதால் பணிவு மறைந்து விடுகிறது. உடல் அழகாக இருப்பதால் கர்வம் மேலோங்கி இவன்/இவள் இல்லையென்றால் இன்னொருவர் என்ற மனநிலை வளர்ந்து விடுகிறது.
நான் ஒரு ஆண் நான் ஏன் ஒரு பெண்ணுக்கு கீழ்படிய வேண்டும் என்றும், நான் ஒரு 21ம் நூற்றாண்டு பெண் நான் ஏன் ஆண் சொன்னபடியெல்லாம் கீழ்படிந்து நடக்க வேண்டும்? நான் அடங்கி நடக்க வேண்டிய அவசியம் இல்லை என்று இருவரும் புதுமைப் பித்தர்களாக மெச்சிக் கொள்ளலாம். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் குடும்ப வாழ்க்கை என்பது ஒரு புதிய படகிலே நீங்கள் இருவரும் பயணம் செய்கிறீர்கள். இந்த படகிலே எதிர்பாராமல் சிறிய உடைப்புகள், கீறல்கள் வரலாம். ஆனால் அந்த கீறல்களை சரிசெய்ய இருவரும் மனமற்றுப் போனால் உங்கள் குடும்பம் என்ற படகு மூழ்கிப் போகும் இருவரும் பாதிக்கப்படுவீர்கள். ஆனால் உங்கள் படகில் ஏற்பட்ட சிறு சிறு கீறல்களை அவ்வப்போது சரிசெய்விர்களாகில் படகு நெடுந்தூரம் செல்ல முடியும்.
என்னுடைய லட்சியம், கனவு எல்லாவற்றையும் துறந்து விட்டு தியாகியாகவா என் மனைவிக்காக/கணவனுக்காக வாழவேண்டும் என்று சிலர் நினைத்து மணவாழ்வை தூக்கி எறிந்து விடுகின்றனர். லட்சியம்,கனவுகள் எல்லாம் இருவருக்கும் முக்கியம் தான். எல்லாருடைய வாழ்விலும் 100% லட்சியத்தை,கனவுகளை முழுமையாக அடைய முடியாது. சிலருடைய கனவுகள் 50% நனவாகலாம், சிலருக்கு 25% நனவாகலாம். சிலவேளை நமது துணைக்காக 50% தியாகம் செய்யலாம், சிலவேளை 20% தியாகம் செய்யலாம். அப்பொழுது தான் குடும்பம் என்ற பந்தத்தில் இருவரும் இணைந்து வாழ இயலும். தியாகம் செய்யாமல் அன்பை வெளிப்படுத்த முடியாது.
இயேசுவானவர் போதகரும், ஆண்டவருமாய் இருந்தாலும் சீடர்களுடைய கால்களைக் கழுவி 'நான் பெரியவன்' என்று எண்ணி மமதையில் இருந்த சீஷர்கள் உள்ளத்தை உடைத்துக் காண்பித்தார். தாழ்மைக்கு முன்மாதிரியாக நடந்துக் கொண்டார். இன்று குடும்ப வாழ்விலும் கணவன் பெரியவனா? மனைவி பெரியவளா? என்று போர் கொடி தூக்கி வாழ்வை நரகமாக்காமல், சிலவேளை நீ பெரியவனா/ளாக இரு என்று மற்றவர் விட்டுக் கொடுத்துப் பாருங்கள்.
சிலவேளை தாழ்த்துவது என்பதும், விட்டுக் கொடுப்பது என்பதும் இறைமகன் இயேசுவின் பிள்ளை என்பதை காட்டுவதற்கு வாய்ப்பாக அமையும். இயேசு காட்டிய முன் மாதிரியை வாழ்க்கையில் கடைபிடித்துப்பாருங்கள். குடும்பம் குட்டி பரலோகமாக பரிமளிக்கும்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற "Hi" என type செய்து “93 42 80 71 51” என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும்
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment