நம்ம கெத்தக் காட்டணும்


ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் 1936ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைப்பெற்றது. ஹிட்லரின் ஆதிக்கம் கொடி பறந்த காலம் அது. தன்னுடைய நாஸிகளின் கொளகையை தூக்கிப் பிடித்து தன்னுடைய இனம் தான் உலகத்திலே உயர்ந்தது என்பதை காட்ட முயன்று கொண்டிருந்தார். அதை வெளிப்படுத்த நாஸிகள் அதிகமான பதக்கங்களை குவிக்க வேண்டும் என்ற நோக்கில் இருந்தார்.

ஹிட்லரில் நாஸிசக் கொள்கையையும், அவரின் எண்ணத்தையும் தவிடுபொடியாக்க மறைமுகமாக உள்ளத்தில் உறுதிப் பூண்டார் ஆப்ரிக்க அமெரிக்கரான ஜெஸி ஓவன்ஸ். கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு உடலைப் பக்குவப்படுத்தி வைத்திருந்தார். ஆனாலும் போட்டியின் போது பதட்டம் உள்ளத்தில் தாண்டவமாட ஆரம்பித்தது.

சொந்த நாட்டில் விளையாடிய லஸ் லாங் முதல் முயற்சியிலேயே தகுதி சுற்றுக்கு தகுதிப் பெற்று ஹிட்லர் உள்ளத்தில் பாலை வார்த்தார். ஆனால் ஜெஸி இரண்டாவது முறையும் தோல்வியுற்று பதட்டத்தில் இருந்தார். லஸ் லாங், ஜெஸியிடம் வந்து பதட்டப்படாதே என்று தைரியமூட்டினார்.

தைரியம் கொண்டு களமிறங்கிய ஜெஸி தகுதி சுற்றில் வெற்றி பெற்று உள்ளே நுழைந்தார். அதன்பின் இறுதி போட்டி வரையிலும் டாப் கியரில் இயங்கிய ஜெஸி இறுதிப் போட்டியில் தங்கத்தை வென்றார். ஹிட்லரின் முயற்சியை முறியடித்து தன் சொந்த நாட்டிற்கு பெருமையைத் தேடி தந்தார். முயற்சியுரும் யாரும் இன, நிறத்தை தாண்டி வெல்ல முடியும் என்பதை நிறுபித்தார்.

ஒருவர் நமக்கு தீமைச்செய்து நம் பலத்தை குறைக்க முற்படலாம். ஆனால் நேராக எதிர்த்து சண்டையிடாமல் நமது திறமையை மெருகூட்டி சமுதாயத்தின் முன் நிமிர்ந்து நிற்கவேண்டும். தடை கற்களை படி கற்களாக மாற்ற முயலவேண்டும். நம்ம கெத்த எங்க எப்படிக் காட்டணுமோ அப்படித்தான் காட்ட வேண்டும். தவறான காரியத்தில் நமது பெலத்தை நிரூபிக்கப் போனால் நம் எதிர்காலமே கேள்விக்குறியாகி விடும் நாம் முன்னேறுவதற்குப் பதிலாக பின்னே போக நேரிடும். 

சாலமோனின் மகன் ரெகோபெயாம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட போது இஸ்ரவேல் மக்கள் அவனிடம் வந்து தங்கள் பிரச்சனைகளை கூறுகிறார்கள். உம்முடைய தகப்பன் ஆட்சியில் சில கஷ்டங்கள் இருந்தது. அதை மாற்றவேண்டும் என்று பொறுமையுடன் கேட்கின்றனர்.

பதில் கூறுவதற்கு மூன்று நாள் தவணை கேட்ட ரெகோபேயாம் தன் கெத்தைக் காட்டுகிறான். "என் சுண்டு விரல் என் தகப்பனுடைய இடுப்பைப் பார்க்கிலும் பருமனாயிருக்கும்.” “என் தகப்பன் உங்களை சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களை தேள்களினாலே தண்டிப்பேன்" என்று பதிலடிக் கொடுக்கிறான் (2நாளா 10:10,11).

வாலிபர்கள் தங்கள் பெலத்தைக் காட்டும்படியாக பதிலளிக்கின்றனர். ஆனால் பின் விளைவைக் குறித்து சிந்திக்கவில்லை. இந்த இடத்தில் நிதானமான பதிலை கொடுக்காததால் ரெகோபெயாம் மிகப்பெரிய இழப்பை சந்திக்கிறான். இன்றும் சில இளைஞர்கள் இப்படிப்பட்ட தவறான முடிவுகளை எடுப்பதினால் வாழ்வின் உச்ச நிலையை அடைய முடியாமல் கீழேத் தள்ளப்படுகின்றனர்.

உலகத்தையே பேரழிவுக்கு கொண்டுப்போன ஹிட்லரை, ஜெஸி தன் திறமையினால் முறியடித்தது போன்று தான் முறியடிக்க வேண்டுமேயொழிய ரெகோபெயாம் போன்று தவறான இடத்திலே கெத்தைக் காட்டுவதை விட்டு விட வேண்டும்.

மனித வாழ்வில் தன்னுடைய திறமைகளை வெளிக்காட்டுவதற்கு இரு இடங்கள்தான் உள்ளது. ஓன்று விளையாட்டு, மற்றொன்று போர். விளையாட்டு ஆக்கப்பூர்வமானது, போர் அழிவைக் கொண்டு வரக்கூடியது. கொரானா போன்ற கொள்ளை நோய், பல்வேறு விதமான பிரச்சனைகள், மன நிம்மதியற்ற சூழல்கள் பெருகி வரும் போது மக்களை மகிழ்ச்சியூட்டுவதற்கு, இதயத்தை இன்பத்தால் நிரப்புவதற்கு விளையாட்டு தான் உதவியாக இருக்கிறது. அதனால் தான் ஒலிம்பிக் போட்டியில் கலந்துக்கொள்வதையே கனவாக பல வீரர்கள், வீராங்கனைகள் கொண்டுள்ளனர்.

நமக்கெல்லாம் இப்படி வாய்ப்பு கிடைக்கவா செய்யும்? நம்ம கிராமத்தை யார் கண் வைத்துப் பார்ப்பார்கள்? நம்முடைய திறமையை உலகத்துக்கு புரியவா போகுது? பணக்காரர்கள் தான் இந்த இடத்தையெல்லாம் பறிச்சிக்கிடுவாங்களே! என்று புலம்பும் இளைஞர்களே வெட்டியாக நின்று விதண்டா வாதம் பண்ணாமல் உங்கள் திறமையை உலகிற்கு வெளிக்காட்ட வழிகளைத் தேடுங்கள்.

மதுரை மாவட்டத்தில் உள்ள சக்கிமங்கலம் கிராமத்தைச் சார்ந்த ரேவதி என்ற பெண், டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கு கொள்ளப் போகிறாள். இவள் 7 வயதாக இருக்கும் போதே பெற்றோர்கள் வியாதியினால் இறந்து விட்டனர். ஆனால் பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்த ரேவதி பள்ளியில் படிக்கும் போது 2014-15ம் அணிக்கான மண்டல விளையாட்டுப் போட்டியில் வெறுங்கால்களுடன் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றார். அவள் நிலையை உணர்ந்த ஒரு பயிற்சியாளர் உதவிச்செய்தார். வெறுங்காலால் ஓடியவளுக்கு ஷூ வுடன் ஓட வைத்து முன்னுக்கு கொண்டு வந்தார். 2016 ம் ஆண்டு கோவையில் நடைப்பெற்ற தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் ரேவதி மூன்று தங்கம் பெற்று ஜொலிக்க ஆரம்பித்தார். இன்று ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வாகியுள்ளார் என்றால் எவ்வளவு போராட்டங்களை சிறு வயதிலே சந்தித்து வந்துள்ளார் என்று பாருங்கள். வாய்ப்புகள் என்பது நம்மை தேடி வரும் என்று ஊர் கதையைப் பேசியே காலத்தைப் போக்காமல் வாய்ப்பை தேடி உங்கள் கெத்தைக் காட்ட முற்படுங்கள். இறைவன் என்றும் உங்களுக்கு ஆசி வழங்குவார்.   

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற "Hi" என type செய்து “93 42 80 71 51” என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும்

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php  

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்