நாங்க வேற மாதிரிங்கோ
1822ம் ஆண்டு மேமாதம் கல்குளம் என்ற பகுதியில் கிறிஸ்தவத்திற்கு மாறிய பெண்கள் மேலாடை அணிந்து சென்ற போது அவர்கள் ரவிக்கைகளை கிழித்து மரங்களில் தொங்க விட்டு அவமானப்படுத்தினர். இதற்கு எதிர்முனைத் தாக்குதலாக நாடார் பெண்கள் நாயர் பெண்கள் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.
ஏன் இவ்வளவு கலவரம்? தாழ்ந்த ஜாதி பெண்ணுக்கு அவளது எஜமான் ஆண்டுக்கு ஓன்று அல்ல இரண்டு முண்டுகள்(Towel) தான் கொடுப்பார். இந்த முண்டு அவளது இடுப்பிலிருந்து முழங்கால் வரை மட்டுமே மறைக்கும். காலையிலிருந்து மாலை வரை நாற்று நடுவதற்காக சகதிக்குள் சென்று வேலைச் செய்ய வேண்டும். ஒரு அறுவடையிலிருந்து மறு அறுவடை வரையிலும் இது தான் அவர்கள் உடை. இவ்வாறு உடுத்துவதால் அழுக்கடைந்து நாற்றம் வீசி தீண்டதகாதவர்கள் போலவே மாறி விட்டனர்.
இதற்கு முடிவுக்கட்டதான் மீட் ஐயாவின் மனைவி தாழ்ந்த இனமாக கருதப்பட்ட பெண்களுக்கு குப்பாயம் செய்துக் கொடுத்து மானத்தை மறைக்க உதவினார். இவ்வாறு மறைக்கக் கூடாது என்பதற்கு தான் 40 ஆண்டு கலவரம். இக்கலவரத்திற்கு முதல் முற்றுப்புள்ளியை ரிங்கல் தொபே என்ற மிஷனெரி பிரிட்டிஷ் பிரதிநிதிகள் மூலம் வாங்கிக் கொடுத்தார்.
அன்று தோளில் சீலை போடுவதற்காக "தோள் சீலை கலவரம்" நடந்தது. இன்று தோளில் சீலை நிற்க வேண்டும் என்பதற்காக இறை ஊழியர்களுக்கும் இறை மக்களுக்கும் இடையே பனிப்போர் நடந்துக் கொண்டிருக்கிறது. இறைமக்கள் தாங்கள் விருப்பப்படி உடையை அணிந்துக் கொள்ள எங்களுக்கு உரிமை இருக்கிறது. இதில் இறை பணியாளர்கள் ஆலோசனைச் சொல்ல வேண்டியதில்லை. என் மகன், என் மகள் அவள் விருப்பபடி எந்த ஆடையையும் அணிந்துக் கொண்டு ஆலயத்திற்கு வருவான்/ள் என்று போர் கோடி தூக்குகின்றனர்.
இந்தியாவின் பெரும் சமயம் சார்ந்த ஒரு கோவிலில் ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. இந்த கோவிலுக்குள் பெண்கள் T.Shirt, Jeans Pant அணிந்துக் கொண்டு உள்ளே வரக்கூடாது. மற்றொரு ஆலயத்தில் "இந்த ஆலயத்திற்குள் ஆண்கள் மேல் சட்டை, Pant அணிந்து உள்ளே வரக் கூடாது. மேல் சட்டையை கழற்றிவிட்டு, வேஷ்டிவுடன் தான் உள்ளே நுழைய அனுமதிக்கப்படுவர்" என்று எழுதப்படாத சட்டத்தை கூறி அனுமதி மறுக்கின்றனர்.
கிறிஸ்தவ மக்கள் மேற்கத்திய மக்களின் ஆடைகளைப் போன்று அணிந்து திருமண ஆராதனைகளில் பங்கு பெற விரும்புகின்றனர். இந்திய பெருஞ்சமயத்தில் உள்ளவர்கள் பல ஆண்டுகளாய் வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் இந்தியாவில் திருமணம் நடக்கும் போது பட்டுவேஷ்டி, சட்டையுடன் ஆண்களும், சேலை உடுத்தி பெண்களும் கீழே அமர்ந்து திருமணம் செய்கின்றனர். வானத்தில் பறந்தாலும் தரையில் தான் கால் வைக்க முடியும் என்று அவர்கள் அறிந்து செயல்படுகின்றனர். ஆனால் கிறிஸ்தவ சமுதாயம் மேலை நாட்டு வாசனையில் மயங்கிக்கிடக்கிறது என்பது ஊழியர்களின் வேதனை.
திருமறையில் சேராபீன்கள் ஒவ்வொருவனுக்கும் ஆறு இறக்கைகள் இருந்தன. ஒவ்வொருவரும் இரண்டு இறக்கைகளால் தம் முகத்தை மூடிக் கொண்டனர்; இரண்டு இறக்கைகளால் தம் கால்களை மூடி மறைத்தனர். மற்ற இரண்டால் பறந்தனர். ஒருவரை ஒருவர் நோக்கி சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள் (ஏசாயா 6: 2,3)
இறைவனுடைய ஆலயத்தில் ஏசாயா இந்த சாட்சியைக் காண்கிறார். பரிசுத்தமுள்ள இறைவனுக்கு முன் நிற்கும் போது தனது முகத்தைக் கூட காட்ட விரும்பவில்லை, தன் கால்களைக் கூட காட்ட விரும்பவில்லை. அவ்வளவு தன்னை மூடி இறைவனுக்கு முன்பாக தாழ்த்துகின்றனர்.
மனிதர்களாகிய நமக்கு இது ஆச்சரியமாக இருக்கிறது. உடை பற்றிய விஷயத்தில் யாரும் யாரையும் கட்டுப்படுத்துவது நல்ல தல்ல. ஆனால் நாம் ஆலயத்திற்கு உடுத்தி வருகிற ஆடையை உங்கள் மேல் அதிகாரிக்கு முன் உடுத்திச் சென்றால் உங்களை மதிப்பார்களா? என்ற கேள்வியை மட்டும் உங்கள் உள்ளத்தில் கேட்டு விட்டு, உங்கள் அதிகாரியை காட்டிலும் மேலானவருக்கு முன்பாக நீங்கள் நிற்பதற்கு எப்படிப்பட்ட உடையை அணிந்து செல்வது என்பதைக் குறித்து தீர்மானியுங்கள்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment