தள்ளாடும் நீதிமான்



நோவாவைக் குறித்து இறைவனின் கூற்று "உன்னை நீதிமானாகக் கண்டேன்" (ஆதி 7:1) நோவாவின் காலத்தில் மக்கள் துன்மார்க்கமாக வாழ்ந்தார்கள். இறைவனின் பார்வையில்  அது வருத்தத்தைக் கொடுத்தது. உலகத்தையே அழிக்க கடவுள் நினைத்த போது நோவாவுக்கு கடவுளின் கண்களில் தயவு கிடைத்தது. அப்படிப்பட்ட உத்தமன் நோவா, பெரிய அழிவிற்கு பின்பு திராட்சை செடிகள் நட்டு பயிரிடுகிறவனாக மாறிவிட்டான்.   எப்படியோ நோவாவுக்கே தெரிந்துள்ளது திராட்சை ரசத்தை குடிக்கலாம் என்று! அதுவும் வெறி கொள்ளும் அளவிற்கு குடித்துவிட்டு உடை உடலில் இல்லாததுக் கூட தெரியாமல் விழுந்து கிடந்துள்ளான். 

உடையில்லாமல் இருப்பதை நோவாவின் மகன் கண்டு தன் சகோதரருக்கு சொல்ல அவர்கள் ஒரு துணியால் மூடிப் போடுகின்றனர். இந்த சம்பவத்தின் இறுதியில் காமை சபித்துவிடுகிறார் நோவா!   

குடித்தது நோவா! சபிக்கப்பட்டது மகன்!! எவ்வளவு பெரிய வேதனையான அனுபவம். இது நடந்தது பல ஆண்டுகளுக்கு முன். 

இப்பொழுது நடந்தது வித்தியாசமானது "தூத்துக்குடி மாவட்டத்தில் போதையில் கணவர் மனைவியை சித்திரவதைச் செய்துள்ளார். தாங்க முடியாமல் வெகுண்டு எழுந்த மாமியாரும், மனைவியும் கணவன் கழுத்தை நெறித்துக் கொன்றது இக்காலம்"

புரோட்டா மாஸ்டராக இருந்த X, காலையில் வேலைக்குப் போய் விட்டு இரவு வீடு திரும்பும் போது தனிமனிதனாக திரும்பாமல் எப்பொழுதும் தண்ணிரில் மிதந்த மனிதனாக வந்துள்ளார். வந்ததும் அவருடைய சேட்டைகள் ஆரம்பித்துவிடும். மனைவியை அடித்து துவைப்பது தான் வாடிக்கையாகி வந்துள்ளது.  

குடிப்பவர்கள் எப்பொழுதுமே சற்று abnormalலாக செயல்படுவது இயற்கை. குடித்துவிட்டால் ஆட்டுக்குட்டி போன்ற அமைதியானவர்களும் சிங்கம் போல் கெர்ச்சிப்பர்,  நடு ரோட்டில் நடப்பர், வந்தவன் போனவனிடம் எல்லாம் சண்டை இழுத்துப் பார்ப்பார்கள். தெருவில் யார் வந்தாலும் போட்டுப்பார்ப்போமோ என்பார்கள், வேலைக்குப் போனால் மேலதிகாரிகளையும் கண்ணியக்குறைவாக பேச ஆரம்பித்து விடுவர், மனைவி, பிள்ளைகளெல்லாம் மாட்டைப் போல் கம்பாலும் அடித்து நொறுக்கி விடுவர். ஆனால் X சற்று வித்தியாசமாக கம்பியைக் கொண்டு மனைவியை அடித்து பின்னியுள்ளார். இரத்தம் சொட்ட சொட்ட விளாசியுள்ளார்.

சாது மிரண்டால் காடும் கொள்ளாது என்பதை நிருபிக்கும் வண்ணமாக கணவன் வைத்திருந்த கம்பியை மனைவியும், அத்தையும் பிடுங்கி நியூட்டன் மூன்றாம் விதியை பின்பற்றினர்.   கணவன் கழுத்தை இரண்டு பேரும் சேர்ந்து நெரிக்க மூச்சு விடமுடியாமல் தவித்த அவர் வாழ்வுக்கு முற்றுப்புள்ளியை வைத்தார்.

குடி என்பது ஒரு நோய்.   குடிகாரர்கள் நோயாளிகள்.   அவர்கள் குடியிலிருந்து விடுதலைப் பெற மறுவாழ்வு மையங்கள் இன்று பல்வேறு இடங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திருநெல்வேலியில் 'பிஷப் சார்ஜென்ட் மறுவாழ்வு மையம்', போன்ற இடங்களில் அவர்களை சேர்த்து விடுதலைப் பெற உதவிடுங்கள். இவனை திருத்தவே முடியாது என்று கூறாதிருங்கள். இதனை எழுதுகிற என் தந்தையும் குடியிலிருந்து விடுதலைப் பெற்றவர். பல வருடங்களாக குடித்தவர் ஆனால் இறைவனின் அருளால் மாறினார்.   மாற்றங்கள் என்பது முடியாதது அல்ல. உங்கள் பிள்ளைகள் குடிகாரர்களாக மாறாத படி கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். சிறுவயதில் இருந்தே ஆலயத்திற்கு தவறாமல் அழைத்து வாருங்கள். கோவிலுக்குப் போகும் பிள்ளைகள் பொதுவாக குடிப்பது அரிது. காரணம் அந்த atmosphere. ஆலயம் செல்வது சாலவும் நன்று. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி