வலை தளமா? வளைவு தளமா?
உலகமெல்லாம் போற்றும் உத்தமர் காந்தியை ஒருவன் சுட்டுக்கொன்று தன் வெறித்தனத்தில் வெற்றியடைந்தான். இயேசு கிறிஸ்துவோடு இருந்து மூன்றரை ஆண்டுகள் உண்டு, உறங்கிய யூதாஸ் முத்தத்தினால் காட்டிக் கொடுத்து சிலுவைக்கு அனுப்பி வைத்தான். அன்று மட்டுமல்ல இன்றும் பல விதங்களில் இதைப் போன்ற செயல்கள் வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு காரணங்களுக்காக அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது.
கேரளாவில் பல் மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு வாழ்க்கை பயணத்தைத் தொடங்கியவர் மானசா. இவருடைய வலை தளம் தான் இவரது வாழ்விற்கு, கனவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப் போகிறது என்பதை அவர் அறியவில்லை. வீட்டு வடிவமைப்பாளராக பணி புரியும் ராகில் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலமாக மானசாவுடன் தொடர்புக் கொண்டார். அதுவே அவர்கள் பழக்கத்திற்கு வழி வகைச் செய்தது. ஓராண்டுக்குப் பின்னர் தான் ராகிலின் நடவடிக்கை வித்தியாசமானதாகக் காணப்பட்டது. எனவே மெதுவாக மானசா ஒதுங்க முயன்றார். ஆனால் ராகில் தொந்தரவைக் கொடுக்க ஆரம்பித்தார். போலிஸில் புகார் கொடுத்து கண்டிக்கும் அளவிற்கு நட்பு காயத்தை ஏற்படுத்தி விட்டது.
சில வகை அட்டை பூச்சிகள் நம் உடலில் ஏறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பார்கள். அது ஏறிவிட்டால் நம்முடைய உடலில் பிடித்துக் கொண்டு இரத்தத்தை உறிஞ்சி விடும். பின்பு அது நம் உடலை விட்டு நீக்குவதற்கு எவ்வளவு தான் முயன்றாலும் முடியாது. பின்பு அந்த அட்டை இறந்தால் தான் நம்மை விடும். அதைப் போன்ற ரகத்தை சார்ந்தவர் தான் ராகில்.
ராகில் பீகாருக்குச் சென்று துப்பாக்கி ஒன்றை ரூ 4 லட்சத்திற்கு வாங்கி அங்கேயே பயிற்சி எடுத்துள்ளார். தன்னை விட்டு பிரிந்த மானசா யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற வெறித்தனம் அவனை பித்தனாக்கியது. மானசாவை நோட்டமிடுவதற்கு வாய்ப்பாக அவள் தங்கியிருந்த வீட்டிற்கு அருகிலே விடுதி ஒன்றில் தங்கியுள்ளான். அவள் எப்பொழுது தனியாக இருக்கிறாள் என்பதை சரியாக நிதானித்தவன் துப்பாக்கியுடன் அவள் வீட்டிற்கு சென்று, தான் நேசித்தவள் தன்னை நேசிக்கவில்லையென்றால் யாருக்கும் அந்த நேசம் கிடைக்கக்கூடாது என்ற வெறித்தனத்தில் சுட்டுக் கொன்று விட்டு, தானும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.
வலைத்தள காதல் என்பது வாழ்க்கையை எந்த அளவிற்கு கொண்டு சென்று விட்டது. மருத்துவராகி மனித குலத்திற்கு சேவைச் செய்யவேண்டும் என்று விழுந்து, விழுந்து படித்த மானசா, வலைத்தளத்தில் வழுக்கி விழுந்து வாழ்க்கையை தொலைத்து விட்டாள். வலைத்தளத்தில் வழுகுதல் என்பது படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று எவ்வித வித்தியாசமும் இல்லை. பெரியவர்களா, சிறியவர்களா என்ற வித்தியாசமும் இல்லை. அனைவரும் எளிதாக வழுக்கி விழுகின்றனர். பாசி படிந்த படிகளில் நடக்கும் போது பெரியவர், சிறியவர், படித்தவர், படிக்காதவர், திறமைசாலி, திறமை இல்லாதவர், ஆண், பெண் என்ற எந்த வித்தியாசமும் இல்லாமல் வழுக்கி விழுந்து அடிபடுவது போல் அடிபட்டுக் கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக இளம் பெண்கள் வழுக்கி விழும் போது வாழ்வையே இழக்க நேரிடும் என்பதை உணர்ந்து வலைத்தளத்தை கவனமாகவும், குறைவாகவும், தேவையானதற்கு மட்டும் பயன்படுத்த தீர்மானிப்போம்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும்
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment