பாவங்க புரட்டி எடுக்காதேயுங்க


தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது நூதன போராட்டம் ஒன்றைப் பார்த்து வியந்து போனேன். பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு  நல சங்கம் வேண்டும் என்ற கோரிக்கையோடு சில ஆண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் ஒருவரிடம் நிருபர் கேள்விக் கேட்கிறார், என்ன நீங்க உங்க மனைவி கிட்ட ரொம்பவும் பாடுபடுகிறீர்களா? என்றார். அதற்கு அந்த நபர் "ஐயோ, என் மனைவி என்னா அடி அடிக்கிறா என்னால தாங்க முடியலீங்க!" என்று கூறினார். என்னோடு தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்த நபர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்.

சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம்… ஒரு நாள் அலுவலகத்தில் உட்கார்ந்திருந்தேன். அப்பொழுது ஒரு நண்பர் வந்தார். அவர் குடியிலிருந்து விடுதலைப் பெற்றவர். சில வருடங்களாக எங்களுடன் இணைந்து தான் பெற்ற விடுதலையை  மற்றவர்களுக்கும் கூறி வருபவர். அன்று சோகத்தோடு என்னை சந்திக்க வந்தார். ஐயா நான் தற்கொலைச் செய்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நான் சீக்கிரம் சாவதற்காக கடவுளிடம் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள் என்று கண்ணீர் மல்கினார்.

விஷயத்தை கூறுமாறு கேட்டேன். இவர் மொடா குடிகாரராக இருக்கும் போது வீட்டில் உள்ள பொருள்களை எல்லாம் உடைத்துப் போடுவார். மனைவியை கெட்ட வார்த்தைகளால் வசைப்பாடுவார். பிள்ளைகளை அடித்து உதைப்பார். வாங்குகிற சம்பளம் முழுவதையும் குடித்தே அழித்து விடுவார். இவரால  ஒரு பிரயோஜனமும் கிடையாது என்று மனைவி அடிக்கடி அவளுடைய வீட்டிற்குப் போய் விடுவாள்.

இச்சூழலில் குடியிலிருந்து விடுதலைப் பெற முகாமில் சேர்க்கப்பட்டார். விடுதலையும் பெற்று குடிக்காமல் புது வாழ்வை தெரிந்து கொண்டார். முகாமில் சொல்லிக் கொடுக்கும் காரியம் ஓன்று உண்டு. உங்கள் சம்பளத்தை மனைவியிடம் கொடுங்கள். அது உங்களை குடிக்க தூண்டாது.    

இவ்வாறு சம்பளத்தை எல்லாம் மனைவியிடம் கொடுத்தார். தோட்டத்தில் உள்ள வருமானத்தையெல்லாம் வேலையாட்கள் அவர் மனைவியிடம் கொண்டு கொடுக்குமாறு கூறினார். இப்பொழுது மனைவியிடம் கை நிறைய பணம் வந்தது.   அவளுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. கணவன் வேலைக்குப் போய் விட்டு ஒழுங்காக வீட்டுக்கு வந்து விடுவார். ஞாயிற்று கிழமை என்றால் "நான் இந்த வாரம் குடிக்கவில்லை" என்று சாட்சி கூறுவார். அவருக்கு சமுதாயத்தில் இப்பொழுது மதிப்பு பெருகியது. மனைவியை கெட்ட வார்த்தைகளால் வசைபாடுவது கிடையாது. வீடு அமைதியாக இருந்தது.    

இப்பொழுது மனைவி ஆட்டத்தை ஆரம்பித்தாள். தன் கணவனை கட்டுப்படுத்த ஆரம்பித்தாள். தான் விரும்பிய படியெல்லாம் அவர் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்க ஆரம்பித்தாள். தன் கணவனுக்கு சமுதாயத்தில் மதிப்புக் கூடிய சூழலில் தன் கணவன் தன் விருப்பப்படி செய்யாவிட்டால், "Divorce பண்ணி விடுவேன்" என்று மனைவி கணவனை மிரட்ட ஆரம்பித்தாள்.  அவன் மிரள ஆரம்பித்தான். நாம் குடியிலிருந்து விடுதலைப் பெற்று சாட்சியாக வாழ்கிறேன் என்று ஊர் ஊராகச் சொல்லுகிறேனே அப்படி இருக்கும் போது குடும்பம் பிளவு பட்டால் ஞாயிற்று கிழமை ஊழியம் செய்ய முடியாதே என்ற ஏக்கம் அவனுக்குள் அடக்க முடியாததாக மாறியது. அவள் விலை உயர்ந்த cell போனில் எப்பொழுதும் யாருடனாவது பேசிக்கொண்டு சாப்பாடு சமைக்காமல், கணவனை ஒரு பொருட்டாக எண்ணாமல், மதிக்காமல் செயல்பட ஆரம்பித்தாள். கணவனுக்கு தெரியாமல் பணத்தை பிறருக்குக் கொடுக்க ஆரம்பித்தாள். பிற ஆண்களின் துணையோடு கணவனையே மிரட்ட ஆரம்பித்தாள். பிரச்சனை தலைக்கு மேல் போக ஆரம்பித்தது. "நான் குடிக்கும் போது உள்ள வாழ்க்கையைக் காட்டிலும் இப்பொழுது என் வாழ்க்கை பரிதாபமாக மாறிவிட்டது. எனவே தான் வாழ்க்கை வாழ பிடிக்கவில்லை" என்றார்.       

பெண்மணிகளே இறைவன் கொடுத்த கணவரோடு இனிமையாய் வாழ்வதே  கடவுளுடைய திட்டம். அனேக ஆண்கள் தான் பெண்களை அடிமைகளைப் போல் நடத்துகின்றனர்.   அது மறுப்பதற்கில்லை. இருப்பினும் சில பெண்கள் தங்கள் கணவனை உருட்டி, மிரட்டி வைக்கின்றனர். தவறான வழியில் செல்பவர்களை அப்படி செய்வதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் மிகவும் நல்ல சாதுவான அமைதியான அல்லது மேற் கூறியது போன்ற மனந்திரும்பிய கணவர்களை இது தான் சமயம் என்று சுயநலப் போக்கோடு செயல்படுவது நல்லதல்ல.   

கடினமாக சிலப் பெண்கள் ஆண்களை நடத்தும் போது விரக்தியில் தற்கொலை செய்துக் கொள்ளுகின்றனர். சில நல்ல இளைஞர்கள் தனது பிரச்சனைகளை வேறு யாரிடமும் சொல்ல முடியாமல் மன அழுத்தத்திற்குள்ளாகி தவிக்கின்றனர். இதனால் விரக்தியடைந்தவர்களாக தங்களது பணிகளைச் சரியாக செய்ய முடியாமலும், வேறு யாருடனும் பழக முடியாமலும் தவிக்கின்றனர். மன நிலை பாதிக்கப்படவும் வாய்ப்புகள் உண்டு என்பதை உணர்ந்துக் கொள்ளுங்கள். அதே வேளையில் குடிக்கு அடிமையாகும் பழக்கமும் ஏற்படலாம்.   நீங்களே உங்கள் கணவர் குடிப்பதற்கு காரணமாகிவிடாதிருங்கள்

"கிறிஸ்துவுக்குள் அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள். திருமணமான பெண்களே,ஆண்டவருக்குப் பணிந்திருப்பது போல உங்கள் கணவருக்கு நீங்கள் பயந்திருங்கள்" (எபே 5:21,22) என்று திருமறை நமக்கு கூறுகிறது. ஒருவருக்கொருவர் பணிந்துப் போவது ஒன்றும் தவறல்ல. ஆனால் சர்வாதிகாரப் போக்கு கணவன், மனைவிக்குள் ஏற்பட திருமறை அனுமதிப்பதில்லை. பிறர் மனம் புண்படும் அளவிற்கு அதிகாரப் போக்கை குடும்பத்திற்குள் கொண்டு வரக்கூடாது.   குடும்பம் என்பது அன்பினால் ஆளுகைச் செய்வதே தவிர அதிகாரத்தை, பணத்தை, குடும்ப பலத்தை மையமாகக் கொண்டு அல்ல என்பதை இருதயத்தில் எழுதிக்கொள்ளுங்கள். 

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி