இருட்டறை பலசாலிகள்
சுடு சுடு விடாதே leftல வர்றான்,மறைஞ்சிக்க விட்டிடாதே, அன்னா அன்னா போறான் பாரு, சுடு, சுட்டுத்தள்ளு விடாதே என்று சத்தம்.
பயந்து அங்கும் இங்குமாக பார்த்தேன். சத்தம் பக்கத்து மாடியில இருந்துதான் வந்தது. மேலே எட்டிப் பார்த்தேன், யாரையும் பார்க்க முடியல.
இன்னும் சற்று பயத்தோடு நகர்ந்தேன். சுட்டுட்டேன், சுட்டுட்டேன் bro நம்ம கிட்டயேவா, பயத்தோடு மேலேயே பார்த்தவாறு நகர்ந்தேன்.
அருகில் வந்த இளைஞர்கள் என்னைப் பார்த்து சிரித்தார்கள். ஐயா, இது எங்க ஊர்ல சகஜமானது. வேற ஒன்றும் இல்ல. பையனுங்க free fire, pubg விளையாடுறாங்க. இராத்திரி 2 மணி வரையிலும் பையனுங்க இப்படி விளையாடுவாங்க. அவன் அவன் வீட்டு மாடியிலே உட்கார்ந்து தான் இப்படி விளையாடுறாங்க.
திகைத்துப் போனேன் கிராமத்தில் கூட இளைஞர்கள் இவ்வாறு வலைத்தளத்தில் விளையாடி வாழ்க்கையை தொலைத்துக் கொண்டதை உணர்ந்தபோது உள்ளம் துவண்டு போனது.
வலைத்தளத்தில் விளையாட பெற்றோரிடம் பணத்தை பிடுங்குகின்றனர் என்பதை இளைஞர்கள் கூறிய போது வேதனையாக இருந்தது. அதேவேளை நகர்புறத்தில் பெற்றோரின் debit cardஐ அவர்களுடைய அனுமதியின்றி எடுத்து பயன்படுத்தி update செய்து கொள்ளுகின்றனர். சில சமூக விரோதிகள் இதை பயன்படுத்தி ஆயிரக்கணக்கில் கறந்து விடுகின்றனர்.
விளையாட்டு என்பது நிஜத்திலா அல்லது நிழலிலா? என்பது மிகவும் சிந்திக்க வேண்டிய ஒன்று. நிஜவாழ்க்கையில் விளையாடினால் உடல் வலுப்பெறும். செல்போனில் விளையாடினால் கண்பார்வையும், உடல் நலமும் சீர்கெடும் என்பது போகப் போக உணர முடியும்.
தற்போது ஒலிம்பிக் போட்டி நடந்தது. அதில் வெற்றி பெற்ற அனைவருமே நிஜ வாழ்வில் விளையாடி இந்தியாவை தலைநிமிரச் செய்த தலை மகன்/ள் களாக வலம் வருகின்றனர். குறிப்பாக இந்தியாவிற்கு தங்கப் பதக்கத்தை வென்ற தங்கமகன் நீரஜ் சோப்ரா பிறந்தது 1997ல் தான். ஹரியானாவின் கண்ட்ரா என்ற கிராமத்தில் தான் பிறந்தார். இளம்வயதில் குண்டாகத்தான் நீரஜ் இருந்துள்ளார். ஆனால் அவரின் தந்தை தினமும் 24 கிலோமீட்டர் சைக்கிள் மிதிக்க வைத்துள்ளார். அதன் பின்புதான் விளையாட்டு மையத்திற்கு சென்றுள்ளார். துவக்கத்தில் ஈட்டி எறியும் வீரர் ஜெய்வீர் சிங்கின் அறிமுகம் கிடைத்தது. அதுவே ஈட்டி எறியும் விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்தியது.
19 வயதான போது ராணுவத்தில் சேர்ந்தார். இவ்வாறு வாழ்க்கை சுறுசுறுப்பாக பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள முயன்றார். 2016ஆம் ஆண்டு 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு 86.48 மீட்டர் எறிந்து உலக சாதனை படைத்தார். தற்போது நடந்த ஒலிம்பிக் போட்டியில் 87.58 மீட்டர் தூரம் எறிந்து தங்க மகனாக ஜொலித்தார்.
இவையெல்லாம் எப்படி சாத்தியம்? நிஜ உலகில் விளையாடியதால் தான் வந்தவை. அரியானா மாநிலத்தில் புழுதிக் காட்டில் புரண்ட ரவிக்குமார் தாகியா வெள்ளிப் பதக்கத்தை பெற முடியும் என்றால் இளைஞர்களே இளம் பெண்களே நீங்கள் நிஜ வாழ்வுக்கு வரவேண்டும். வலைத்தளத்தின் விளையாட்டு என்பது நமது நேரத்தை எல்லாம் சூரையாடி நம்மை சூனியமாக்கி விடும். நமது படிப்பு, திறமை, வாழ்க்கை எல்லாவற்றையும் எளிதாக தொலைத்து விடுவோம். நிமிடத்திற்கு நிமிடம் செல்போனை தடவித்தடவி நமது எதிர்காலத்தை தொலைத்து விடுவோம்.
ஆண்டவர் கொடுத்த சிறந்த வாழ்க்கையை தானியேல், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ போன்றோர் பயன்படுத்திக்கொண்டனர். அடிமை இளைஞர்களாய் போனவர்கள் ஆளுமை செய்கிறவர்களாக உயர்ந்ததற்கு காரணம் என்ன? வாழ்க்கையை, நேரத்தை இறைவனோடு செலவழிப்பதிலும் தவறான பாதைகளுக்கு தங்களை விலக்கிக்கொண்டதுமே முக்கிய காரணம். வாய்ப்புகள் பல வந்தாலும் கிறிஸ்தவ வாழ்க்கைக்கு இது பொருந்துமா என்று யோசித்துப் பார்த்து தகுதியானதை மட்டும் எடுத்துக்கொண்டார்கள். விளைவு உலகின் உச்சத்திற்கே சென்றார்கள். உங்களையும் இறைவன் வெளியே வா என்று அழைக்கிறார்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment