தோழனுக்கு ஒரு தோழி
மணமகன் B.Sc முடித்துள்ளார். மணமகள் MBBS படித்துள்ளார். மணமகன் நல்ல பெரிய தொழிலதிபர். எனவே மணமகன் தன் மனைவிக்கு ஒரு பெரிய மருத்துவமனை கட்டி கொடுத்து மக்களுக்கு சேவை செய்ய போகிறாரோ என்று நினைத்துக் கொண்டு மணமகனிடம் மெதுவாக கேட்டேன்.
மணமகன் சிரித்துக்கொண்டே, “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. MBBS படித்த ஒரு டாக்டரை திருமணம் பண்ணினால் ஒரு மதிப்பு இருக்கும் என்று தான் திருமணம் செய்கிறேன். அவள் என்னையும், என் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டாலே போதும். எங்கள் வீட்டில் எந்தப் பெண்களும் வேலைக்கு போகிறது கிடையாது. அது போலத்தான் என் மனைவியும் வீட்டில் தான் இருக்கப் போகிறாள். என் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்த்தாலே போதும். கோயில், ஊருக்கு என்று எங்களால் முடிந்ததை கொடுப்போம் அப்புறம் என்ன! என் மனைவி மருத்துவ சேவை செய்து தான் உலகிற்கு சேவை கிடைக்கப் போகிறதா” என்று மாலையை தூக்கிவிட்டுக் கொண்டு பேசினார்.
இன்று தனக்கு துணையை தேடும் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தேடுகின்றனர். ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு hidden agenda இருக்கத்தான் செய்கிறது. அதை ஒரு போதும் அவர்களுடைய பெற்றோருக்குக் கூட சொல்வது கிடையாது. ஆகவே தான் பெற்றோர்கள் வரன் பார்க்கும்போது தடுமாறுகின்றனர்.
சில ஆண்கள் அதிகம் படித்திருப்பார்கள். மும்பை, டெல்லி சென்று வேலை பார்ப்பார்கள். ஆனால் மனைவி கொஞ்சம் படித்தால் போதும், கிராம பெண்ணாக இருந்தால் கூட ok தான், ஒழுக்கமாக இருந்தால் போதும், கொஞ்சம் கலராக பார்த்துக் கொள்ளுங்கள் என்பர். ஏனென்றால் படித்த பெண், வேலை பார்க்கும் பெண் என்றால் ஈசியா தூக்கி எறிந்து பேசிவிடுவர். வேலைப்பார்த்தால், “பார் உனக்கு சமமாக சம்பளம் வாங்குகிறேன். நான் உனக்கு அடிமை இல்லை” என்று பாத்திரம் கழுவ வைத்து விடுவார்கள் என்ற பயம். நம்ம நாட்டு அரசியல் போல் தான், அமைச்சர் SSLC முடித்து அமைதியாக இருப்பார், சொன்னபடி செய்துகொண்டு கைகட்டி நிற்பார், சுயமாக சிந்திக்க மாட்டார் என்ற எதிர்பார்ப்பிலே அமைச்சர் பதவிகள் வழங்கப்படுவது போல் மனைவிக்கு படிப்பு அதிகம் இருக்கக் கூடாது என்பர் சிலர். மேலும் சிலர் அமைதியான பொண்ணு தான் வேண்டும். அடக்க ஒடுக்கமான பெண் வேண்டும் என்பர்! அதிகம் பேசினால் குடும்பத்தில் புரட்சி வெடிக்க கூடாது அல்லவா!!
நாய்க்கு உணவு போட்டு வளர்த்தால் வாலை ஆட்டிக்கொண்டு பின்னால் வருவதை போன்று மனைவியும் இருக்க வேண்டும் என்று சில ஆண்கள் கனவு காண்கின்றனர். இவர்களுக்கு பூமி சுற்றவே இல்லை என்ற நினைப்பு தான்! பெண்கள் தனக்கு இணையாக இருப்பது என்பது சரியான நட்புக்கு, தோழமைக்கு உதவியாக இருக்கும் என்ற எண்ணம் ஆண்களுக்குள் வரவேண்டும். ஒரு பறவைக்கு இரண்டு இறக்கைகள் சமமாக இருப்பதால் தான் பறந்து பறந்து மேலே செல்ல முடிகிறது. ஆனால் நீங்கள் மட்டும்தான் உயர்ந்தும், வளர்ந்தும் இருக்க வேண்டும் எனவும், உங்கள் மனைவி உங்கள் காலையே சுற்றி சுற்றி வர வேண்டும் என்று நினைப்பது சரியான தோழமைக்கு அழகல்ல. ஆகவே மனதை பெரிதாக்குங்கள். சரியான தோழமை என்பது மகிழ்ச்சியை கூட்டித்தருமே தவிர குறைத்து விடாது.
எஸ்தர் புத்தகத்தில் பழைய காலத்து ஆண்கள் எப்படி இருந்தார்கள் என்பதை பார்த்து இப்படித்தான் இன்றும் இருக்கவேண்டும் என்று நினைக்காதிருங்கள். “ராஜாவாகிய அகாஸ்வேரு ராஜஸ்திரீயாகிய வஸ்தியைத் தமக்கு முன்பாக அழைத்துவரச் சொன்னபோது, அவள் வரமாட்டோம் என்கிற செய்தி எல்லா ஸ்திரீகளுக்கும் பிரசித்தமானால், அவர்களும் தங்கள் புருஷரைத் தங்கள் பார்வையில் அற்பமாய் எண்ணுவார்கள்.” (எஸ்தர் 1:17) என்று குடிகார கூட்டம் அகாஸ்வேரு ராஜாவுக்கு ஆலோசனை கூற முற்பட்டது. குடிக்காமல், நிதானமாய் இருந்தால் வஸ்தி வந்திருப்பாள். குடிக்கிறவன், புகை பிடிக்கிறவன், வம்பு இழுக்கிறவன் போன்றோருக்கு மனைவி எப்பொழுதும் தவறான காரியத்திற்கு அடிபணிந்து இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். அது மலையேறிய காலம். மதிப்பு என்பது தேடி செல்வது அல்ல! தேடி வருவது!!
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment