முகநூலின் முகத்திரை
அமுதா என்ற இளம்பெண் முகநூலில் உலாவி வந்தாள். அவளுடைய அழகிலும், பேச்சிலும் சொக்கிப் போனான் ஒரு இளைஞன். நாட்கள் ஆக ஆக நட்பு மிகவும் வலுப்பட்டது. எப்பொழுது அமுதாவை சந்திக்கலாம் என்று வாய்ப்புக்காக காத்துக் தவம் கிடந்தான். பச்சைக் கொடியை அமுதா காட்டுவதற்காக வாய்ப்பு வந்தது அதுதான், “பிப்ரவரி 14 காதலர் தினம்”. காஞ்சிபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு பலத்த கனவோடு காதலியை சந்திக்கப் புறப்பட்டான். எப்படி நம்மை சந்திக்க போகிறாளோ? இவ்வளவு துணிச்சலாக முன்பின் நம்மை பார்க்கா விட்டாலும் வரச் சொல்லி இருக்கிறாளே அவளுக்கு என் மேல் எவ்வளவு நம்பிக்கை! அன்பு!! நினைக்க நினைக்க உள்ளமெல்லாம் சிறகடித்து பறக்க ஆரம்பித்தது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் வந்து இறங்கியபோது அவன் கண்கள் அமுதாவை தேடியது. அமுதாவை காண முடியவில்லை ஆனால் அதற்கு பதிலாக ஒரு இளைஞர் வந்து நான் தான் அமுதா என்று அறிமுகமான போது தான் புரிந்துகொண்டான். போலி முகநூலில் அமுதா என்ற பெயரிலே அந்த இளைஞன் உலா வந்தது. கோபம் கொப்பளிக்க ஆரம்பித்தது. வாழ்க்கையில் வீணான கனவுகளை வளர்க்க வைத்து வாழ்க்கையில் விளையாடினவனை பழி தீர்க்க மனம் முட்டிக்கொண்டு வந்தது. இருப்பினும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினான்.
7 மாதங்களுக்கு பின் அதே இளைஞனை மீண்டும் சந்திக்க காஞ்சிபுரத்திலிருந்து வண்டி ஏறினான். காட்டுப்பகுதிக்குள் சென்று மது அருந்த அழைத்தான். அதிலே விஷமத்தனம் இருக்கிறது என்பதை புரியாத அந்த இளைஞன் மது அருந்த சென்றான். மதுவோடு விஷமும் கலந்து உள்ளே சென்றது. மயங்கியவன் மீது கல்லை போட்டு முகநூலில் விளையாடினவன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
முகநூலில் பழகுகிறவர்கள் எல்லாம் எந்த நோக்கத்தோடு நம்மிடம் பழகுகிறார், எதற்காக நண்பராக மாற வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியாது. எனவே சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு அவசியம் தேவை. சமூக வலைத் தளத்தை பயன்படுத்துவதை குறித்து டெல்லியில் ஐபிஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த திவ்யா அவர்கள் இளம் வயதுள்ளோருக்கான ஆலோசனையாக கூறும்போது “தற்போதைய சூழலில் சமூக வலைத்தளங்கள் நமக்கு கவனச் சிதறலை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன, நமக்கு கிடைத்துள்ள தொழில்நுட்ப வசதியை ஆக்கபூர்வமாக மட்டுமே பயன்படுத்த வேண்டுமேயன்றி, நம் நேரத்தை அதற்கு இரையாக்கி விடக் கூடாது” என்கிறார். இளம் வயதில் உள்ளவர்கள் மட்டுமல்ல குடும்பமாக மாறி விட்டாலும் இந்த சிந்தனையை எப்பொழுதும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
“விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகளோ நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.” (நீதிமொழிகள் 27:12) என்று திருமறை கூறுகிறது. .விவேகமாகத்தான் facebookல் உள்ள நண்பர்களுடன் பழக வேண்டும். முன்பின் தெரியாதவர்கள் இந்த அளவிற்கு நம்மிடம் அன்பாக பேசுகிறார்களே என்று உருகி விடக்கூடாது “நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் வெள்ளிப்பூச்சு பூசிய ஓட்டைப்போலிருக்கும்.” (நீதிமொழிகள் 26:23) என்றும் கூறி திருமறை நம்மை எச்சரிக்கிறது. நல்லவர்களையும் நல்லவர்கள் போல் நடிக்கிறவர்களையும் நாம் பாகுபடுத்திப் பார்ப்பது வலைத்தளத்தில் கஷ்டமான காரியம். எனவே கவனம் அவசியம்!
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment