எங்கே போகப் போகிறாய்
சிறந்த குறிக்கோளோடு வாழ்ந்த மடாலய குரு ஒருவர் வயதான நிலையில் படுத்த படுக்கையில் இருந்தார். தன்னுடைய வாழ்க்கைக்கு பின் இந்த மடத்தை நடத்துவதற்கு திறமையான தகுதியுடைய நபரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விரும்பினார். தன்னால் மதிப்பை பெற்ற ஒரு சீடனை அழைத்து தன் வயதான நிலையை எடுத்துக்கூறி “வெகு தொலைவில் உள்ள குறிப்பிட்ட ஒரு மடாலயத்திலிருந்து தகுதியான 100 சீடர்களை அழைத்துக் கொண்டு வருமாறு கூறினார்.”
சரி என்று அந்த சீடன் புறப்பட ஆரம்பித்த போது மனதிற்குள் யோசித்தான், “ஏன் நமது குரு தகுதியான நபர்களை நம்முடைய மடாலயத்திற்குள்ளே தேடாமல் வெகு தொலைவிலுள்ள மடாலயத்திற்கு அனுப்புகிறார்.” இருப்பினும் குரு செய்தால் எதையும் சரியாகத்தான் செய்வார் என்று தீர்மானித்துக் கொண்டு, வேகமாக வெகு தொலைவில் உள்ள அந்த மடாலயத்தை நோக்கி புறப்பட ஆரம்பித்தான். மலைகள், அடர்ந்த காடுகளைத் தாண்டி கடினப்பட்டு அந்த இடத்தை அடைந்தான். குருவின் வார்த்தை படியே நூறு பேரை அழைத்துக்கொண்டு மீண்டும் பயணப்பட்டான்.
பயணப்பட்ட வழியிலே ஒரு செய்தி கிடைத்தது. “அருகில் உள்ள நாட்டில் அறிவில் தேறின ஒருவனுக்கு அரசன் தன் மகளை திருமணம் முடித்து வைக்க விரும்புகிறார்" என.
கண்ணை மூடி திறப்பதற்குள் 50 பேர் மாயமாகினர். பயணம் தொடர தொடர மீண்டும் ஒரு செய்தி வந்தது. அருகிலுள்ள “மற்றொரு நாட்டில் அரசனுக்கு வாரிசு இல்லாததால் அறிவும், புத்தியும், கூர்மையான முன் மதியும் உள்ள ஒருவரை நாட்டிற்கு தலைமை அமைச்சராக்க விரும்புகிறார்” என. செய்தி கேட்ட மறு நொடியே மற்ற 40 பேரை காணவில்லை.
இறுதியாக பயணத்தை மேற்கொண்ட போது ஒருவர் மாத்திரம்தான் தன்னோடு நடந்து வருவதை உணர்ந்தார் அந்த சீடர். ஒரு கிராமத்தின் வழியாக சென்றபோது அழகான மங்கை ஒருவரைப் பார்த்ததும் அவரும் தன் பயணத்திலிருந்து விடுபட்டு கொண்டார்.
நிறைவாக குரு முன் வந்து நின்ற போது தூது சென்ற சீடன் மட்டுமே மிஞ்சி நின்றான்.
படுத்த படுக்கையில் இருந்த குரு அவனைப் பார்த்தபோது மெதுவாக புன்னகைத்தவாறு கூறினார், “எனக்கு தெரியும் நீ மட்டும்தான் மிஞ்சி வருவாய் என.”
குருவே அடுத்த தலைமை குருவை எப்படி தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்? என்றான். அதற்கு குரு “உன்னை தான் தேர்ந்தெடுத்துள்ளேன்” என்று கூறி விட்டு கண்ணை மூடிக்கொண்டார்.
உறுதியான, உயர்ந்த குறிக்கோள் உள்ளவர்கள் மட்டுமே தலை சிறந்தவர்களாக மாற முடியும். தன்னுடைய குறிக்கோளை அடைந்தே தீருவேன் என்ற வெறித்தனம் இரத்தத்தில் ஓடவேண்டும். இரவு, பகல் என்று பாராமல் உழைக்கும் மனம் வரவேண்டும்.
தாவீதுக்கு சாமுவேல் தீர்க்கதரிசி இரகசியமாக வந்து ராஜாவாக அபிஷேகம் செய்து வைத்து விடுகிறான். ஆனால் சவுல் அரசனாகத் தான் இருக்கிறான். ஒருவன் அரசனாக இருக்கும்போதே மற்றவனுக்கு அரசனாக அபிஷேகம் செய்யப்பட்டால் என்ன ஆகும்? தாவீது பொறுமையோடு, நிதானத்தோடு, போராட்டங்களுக்கு மத்தியில் சவுலோடு வாழ்ந்து வருகிறான்.
கசப்பான அனுபவங்களை தாவீது சவுலால் பெற்றுக் கொள்ளுகிறான். அரசனின் மருமகனாக மாறி சந்தோஷப்படுகிறான். சில நாட்களில் திருமணமான சவுலின் மகளை வேறு ஒருவனுக்கு திருமணம் நடத்திக் கொடுத்து தாவீதின் வாழ்க்கையோடு விளையாடுகிறான்.
சவுல் தன் அருகில் உட்கார்ந்து உணவு அருந்த வாய்ப்பை கொடுக்கிறான். உண்ட உணவு கீழே இறங்குவதற்கு முன் கையில் உள்ள ஈட்டியை தூக்கி எறிகிறான் சவுல். உயிரைப் பிடித்துக் கொண்டு உயர் குறிக்கோளோடு போராடுகிறான். இறுதியில் அரசனாக ஆசனத்தில் அமர்கிறான்.
இறைவனும் உங்களை உயர்த்த விரும்புகிறார். நீங்கள் உங்கள் நோக்கங்களை சரியாக தீர்மானியுங்கள். படிப்பில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் கூட. “சரியான தீர்மானங்களும் குறிக்கோளும் அவசியம் தேவை.”
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment