கிறிஸ்தவர்களின் ஆடை புரட்சி


பெண்கள் மாநாடு ஒன்றிலே பெண்மணி ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது இன்றைய தலைமுறையினர் மத்தியில் நடக்கும் ஆடைப்புரட்சியைக் குறித்து கண்டிக்க ஆரம்பித்தார். குறிப்பாக முக்காடு போடுதல் என்று ஆரம்பித்து பின்பு சால் போடுதல், திருமணத்திற்கு பெண்கள் உடுக்கும் உடுப்பு வரைப் பேசி மக்களை உலுக்க ஆரம்பித்தார். நாம் உடுத்துகிற உடை என்பது இராஜாதி இராஜாவுக்கு முன்பாக நிற்கிறோம் என்ற உணர்வுடன் தான் ஆலயத்திற்கு வரும்போது ஆடைகளை உடுத்தி வர வேண்டும் என்றார். அதற்கு ஆதாரமாக லேவியராகமம் 16 ஆம் அதிகாரத்தில் இறைவனுக்கு முன் நின்று பணிவிடைச் செய்கிற ஆரோனும், அவன் பிள்ளைகளும் தங்கள் வஸ்திரங்களை சுத்தமாக வைக்கவும், பரிசுத்தமாக இருக்கவும் கவனமாக இருக்கும்படி கர்த்தரே மோசே மூலம் கட்டளையிடுகிறார். அதேப் போன்று வெளிப்படுத்தின விசேஷம் 19:4 ல் மூப்பர்கள் சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் கடவுள் சமுகத்திற்கு முன்பாக தங்களைத் தாழ்த்தி பணிந்துக் கொள்ளுகிறார் என்றார். அப்படி என்றால் ஆடை விஷயத்தில் அவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதா என்று யோசித்துக் கொண்டிருந்த போது தான் ஆடைக்கு பின்னால் அனேக காரியங்கள் மறைந்திருப்பதைக் காண முடிந்தது.

ஆடை என்பது நமக்கு குளிர், வெயில் போன்றவற்றை மட்டும் தாங்குவதற்காக மட்டும் பயன்படுத்தாமல், நமது அழகைக் காட்டிக் கொள்வதற்கும் பயன்படுகிறது. ஆனால் இடுப்பில் மட்டும் துணியுடன் வாழும் மக்களைப் பார்த்த காந்தி, தனக்கு மட்டும் பாதத்திலிருந்து தலைப்பாகை வரை ஏன் இத்தனைத் துணிகள் என்று களைந்து அல்லது வெறுத்து அரையாடைக்கு தன்னை மாற்றிக் கொண்டு இந்திய சமுகத்தில் ஏழை மக்களோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். அதே வேளையில் பிரிட்டிஷ்காரர்களால் நாங்கள் சுரண்டப்பப்பட்டு எங்கள் பொருளாதாரம் கொள்ளையடிக்கப்படுகிறது என்பதை முகத்தில் அறைந்தார்போல் சொல்லாமல் பிரிட்டிஷ்காரருக்கு சொல்லினார்.

மதிப்பும் மரியாதையும் இன்றி சரியான ஆடை அணிவதற்கும் அனுமதிக்கப்படாத சமுகத்தில் இருந்து வந்த அண்னல் அம்பேத்கார் கோர்ட், சூட், டை என்று அணிந்து நாங்களும் உயர்ந்து நிற்போம் என்று காட்டியதும் உடையில் தான். இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு சாமி, சாமி என்று சொல்லியவர்கள் தோளில் துண்டைப் போட்டு துணிந்து சமமாக உட்கார்ந்து பேசவைத்ததும் துணியைக் கொண்டு செய்த மகத்தான வேலைதான். ஆனால் திருச்சபையில் ஆண்களும், பெண்களும் செய்கிற ஆடைப் புரட்சி என்னவென்று சொல்வது !

இரண்டாவது வட்ட மேசை மாநாட்டுக்கு காந்தி 1931ல் லண்டனுக்கு செல்ல இருந்த போது நீங்கள் இந்த அரையாடையை உடுத்திக் கொண்டு தான் பிரிட்டிஷ் மன்னரை சந்திக்கப்போகிறீர்களா என்று கேட்ட போது காந்தி கூறிய பதில் "நான் வேறு ஆடைகளை உடுத்திச் சென்றால் நாடகமாடுகிறேன் என்று அர்த்தம். அது என் நாட்டு மக்களுக்குச் செய்யும் அநீதி" என்றார்.

காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் வேகமாக பரவிய போது மக்கள் கதர் துணியை விரும்பி அணிய ஆரம்பித்தனர். அதனால் தட்டுப்பாடு ஏற்பட்டது. இச்சூழலில் ஒரு மனிதனுக்கு எந்த அளவிற்கு துணித் தேவையோ அந்த அளவுக்கு மட்டும் கதர் துணியை உடுத்துவது என்று முடிவெடுத்தார். குறிப்பாக பனராஸ் இந்து பல்கலைக்கழக விழாவில் மேடையில் அமர்ந்திருந்த பெரியோர்களைப் பார்த்து, "நாம் வளமாக வாழ்ந்து உடலெல்லாம் ஆடைகளைப் போட்டுக் கொண்டு ஏழ்மையை எப்படி விரட்டி முடியும்" என்று கேள்விக் கேட்டு அனைவரையும் சிந்திக்க வைத்தார்.  

இங்கிலாந்து நாட்டில் சென்று பாரிஸ்டர் படிப்புக்கு சென்ற காந்தி அங்குள்ள "வெஸ்ட் எண்ட்" என்ற பணக்காரர்களுக்கு தையல் தைத்துக் கொடுக்கும் தையல் காரரிடம் தனக்கான உடைகளைத் தைத்துப் போட்டவர். இவ்வாறு சிறந்த உடையை அணிந்தவர் இப்பொழுது அரை நிர்வாணியானது இந்தியாவின் சுதந்திரத்திற்காகவே. ஆனால் இன்றைய திருச்சபை இளைஞர்கள் கிழிந்துப்போன உடைகளைப் போட்டு கொண்டும், மேலை நாட்டு நாகரீகத்தையும், சினிமா கலாச்சாரத்தையும் ஏற்றுக் கொண்டு ஆலயத்தில் வலம் வருவதைப் பார்க்கும் போது திருச்சபை உலகத்தோடு கலந்து விட்டதா? என்ற கேள்வி தான். திருச்சபையின் நல் முன் மாதிரிகளைப் பார்த்து உலகம் பின்பற்ற வேண்டும் என்று இயேசு எதிர்பார்க்க! திருச்சபை மக்களோ சினிமாக்காரர்களை பின்பற்றி நவநாகரிக உடையில் மிதந்துக் கொண்டிருக்கிறது!! அன்று காந்தியைப் பார்த்து தலைவர்களான நேரு, பட்டேல் போன்றோர்கள் கதருக்கு மாறினார்கள். இந்தியர்களும் அவருக்குப் பின் சென்றனர். இன்றையக் கிறிஸ்தவ திருச்சபை மெல்லிய வஸ்திரம் தரித்த இயேசுவைத் தேடுகிறது! ஆனால் அப்படிப்பட்ட இயேசுவை காணமுடிய வில்லை!!

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்