அக்கினிக் குஞ்சுகள்
மரணம் வந்து விடும் சூழல் வரும் போது பீனீக்ஸ் பறவை வாசனையான மரச்சுள்ளிகளை சேகரித்து, சூரியன் மறைந்த உடன் அந்த மரசுள்ளிகளுக்கு நெருப்பை வைத்து அதற்குள்ளாக குதித்து இறந்துவிடும்.
இறந்த அந்த பீனிக்ஸ் சாம்பலில் இருந்து சின்னச் சிறு பீனிக்ஸ் பறவையாக செந்தூரமும், தங்க நிறமும் கலந்த இறகுகளுடன் பறந்து வெளியே வந்துவிடுமாம். இந்த கற்பனைப் பறவையை சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன்பதாகவே சீனா ஓவியங்களில் இடம்பெற்றுள்ளது. தற்பொழுது அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தின் கொடியில் பீனிக்ஸ் பறவை இடம் பெற்றுள்ளது.
நம் நாட்டிலும் பீனிக்ஸ் பறவைகள் உள்ளது என்பதை உலகத்திற்கு உணர்த்தியது டோக்கியோவில் நடைப்பெற்ற பாராலிம்பிக்ஸ். மாற்று திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா 5 தங்கபதக்கங்களையும் 8 வெள்ளிப் பதக்கங்களையும் 6 வெண்கலப் பதக்கங்களையும் வென்று திறமையை எப்படியும் வெளிப்படுத்தலாம் என்பதைக் காட்டியுள்ளனர் இந்த அக்கினி குஞ்சுகள்.
பவினா படேல் 34 வயதானாலும், போலியோவினால் பாதிக்கப்பட்டு நாற்காலியில் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொண்டாலும், டேபிள் டென்னிஸில் சீனர்களை வீழ்த்தி என் திறமையை வெளிப்படுத்துவதற்கு கால் ஒரு தடையில்லை என்பதை அகில உலகிற்கு வெளிப்படுத்தினார்.
இதைப் போன்று அவணி லேகாரா துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் மற்றும் வெண்கலத்தை வென்றவர். இவர் வாழ்க்கையில் 12 வயதிலேயே சோதனை வந்தது. கார் விபத்தில் எதிர்பாராமல் சிக்கிய இவர் முதுகுதண்டில் அடிபட்டதினிமித்தம் இடுப்புக்கு கீழே முற்றிலும் செயல் இழந்து தவித்தார். இருப்பினும் எனக்கு நல்ல கை இருக்கிறதே. நல்ல கண்கள் இருக்கிறதே. ஏன் இதனைப் பயன்படுத்த கூடாது. இறைவன் இவைகளை நன்றாகத்தானே கொடுத்திருக்கிறார் என்று துப்பாக்கிச் சுடுவதில் பயிற்சி எடுத்து பதக்கங்களை வென்று தங்க மகனாக ஜொலிக்கிறார். தற்பொழுது 19 வயது தான். ஆனால் இப்பொழுதே உலகத்தை தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்துள்ளார்.
மற்றொரு தங்க அக்கினி குஞ்சு சுமித் அண்டில். மல்யுத்தம் தன் வாழ்வில் மகத்தான கனவாக எண்ணிக் குதித்தார். ஹரியானா மண்ணிலே வீரம் பொதிந்தவராக விளைந்த அவருக்கு எதிர்பாராதவிதமாக விபத்தில் காலை இழந்தார். ஐயோ என் வாழ்வே, என் காலே போய் விட்டதே என்று கண்ணீர் வடிக்காமல், கால் தானே போய் விட்டது கை இருக்கிறதல்லவா என்று மனதை வலுப்படுத்திக் கொண்டு கையிலே ஈட்டியைப் பிடித்தார். “நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ” என்று வெறித்தனமாக எறிய உலக சாதனையை நடத்திக் காண்பித்தார்.
துன்பங்கள், எதிர்பாராத இழப்புகள் என்பது வாழ்க்கையை முற்றுப் புள்ளி வைத்து விடுமோ என்று அஞ்சும்போது இறைவன் நம் அருகில் நின்று, "நீ தண்ணீரைக் கடக்கும் போது நான் உன்னோடு இருப்பேன். நீ அக்கினியில் நடக்கும் போது வேகாதிருப்பாய்" என்று கூறுகிறார். "நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படேன், தேவரீர் என்னோடு கூட இருக்கிறீர். உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்" என்ற நம்பிக்கையோடு பயணிக்க கடவுள் உங்களை அழைக்கிறார்.
வழுவாதபடி உங்களை காப்பதற்கு வல்லமையுள்ள இறைவன் உங்களை முற்றும் முடிய கரம் பிடித்து நடத்துவார். நமது துன்பத்தின் ஊடாக அவரும் நம்மோடு நடந்து வருகிறார். "பயப்படாதே நான் உன்னோடு கூட இருக்கிறேன், திகையாதே நான் உன் தேவன்" என்று பலப்படுத்தி உங்களை பயன்படுத்த விரும்புகிறார். நீங்கள் எந்த சூழ்நிலையில் நம்பிக்கையற்றுப் போனாலும் உங்களுக்கு நம்பிக்கைக் கொடுக்கும் இறைவன் உங்கள் அருகில் இருந்து உதவிட ஆயத்தமாக இருக்கிறார்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment