யாரெல்லாம் கை கட்டி நிற்பார்களோ!
எதிர்பாராமல் கப்பல் கடலில் மூழ்கியது. எதை எதையோ பிடித்துக் கொண்டு கரையேற முயன்றனர். ஒரு வழியாக இரண்டு பேர் ஒரு கரையில் போய் சேர்ந்தனர். சூரியன் உதயமான போது தான் தெரிந்தது அது அவன் நண்பன்.
இரண்டு பேரும் அந்த சிறிய தீவில் சுற்றிப் பார்த்தார்கள். மனிதர்கள் யாரும் இல்லாத பூமி. செழிப்பான நிலமாக தெரிந்தது. இரண்டு பேரும் யோசித்தனர். நாம் இரண்டு பேரும் தனித்தனியாக போய் ஜெபித்து, நமக்கு கிடைப்பதை உண்டு வாழலாம் என்று முடிவு பண்ணினார்கள்.
ஒருவன் கிழக்கு புறமாகவும், மற்றவன் மேற்கு பக்கமாகவும் புறப்பட்டுச் சென்றனர். கிழக்கு பக்கமாகச் சென்றவன் மிகவும் பசியால் வாடினான். ஆண்டவரே பசியை என்னால் தாங்க முடியவில்லையே எனக்கு உதவிடும் என்று கெஞ்சினான். ஜெபித்து விட்டு சற்று நடந்த போது அருமையான கணிகளைக் கண்டு, திருப்தியாக சாப்பிட்டான். அதன் அருகிலேயே வாழ்ந்தவன் யோசித்தான். ஆண்டவரே, நான் தனிமையாய் இருப்பது நல்லதல்லவென்று உமக்குத் தெரியுமே, நல்ல ஒரு வாழ்க்கைத் துணைக் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று வேண்டினான். ஜெபித்த அடுத்த நாள் அந்த தீவு பக்கமாக வந்த மற்றொரு கப்பல் பாறையில் மோதியதில் ஒரு பெண் அந்த தீவுக்கு கரை ஒதுங்கினாள். கடவுள் ஜெபத்திற்கு இப்படியும் பதில் கொடுத்திருக்கிறாரே என்று மகிழ்ந்து அந்த பெண்ணோடு வாழ ஆரம்பித்தான். எப்படி இருந்தாலும் சமூகத்தோடு வாழ்ந்தால் தானே சந்தோஷம் என்று யோசித்த அவன் மீண்டும் கடவுளிடம் வேண்டினான்.
ஆண்டவரே என் சொந்த நாட்டை சென்று சேருவதற்கு வழி செய்யும் என. அந்த ஜெபமும் கேட்கப்பட்டது. எதிர்பாராத விதமாக ஒரு கப்பல் அந்த தீவுக்கு அருகில் வந்த போது அந்த கப்பலில் ஏறி தன் நாட்டை நோக்கி பயணிக்க முற்பட்டான். அப்பொழுது அந்த புது மனைவி அவனைப் பார்த்து கேட்டாள், "என்னங்க நீங்க இந்த தீவுக்கு வரும் போது உங்கள் நண்பனோடு வந்திர்களே, அவர்களை மறந்து விட்டீர்களா? அவர்களையும் அழைத்துச் செல்லலாமே" என்று கேட்டாள். அதற்கு அவன் அவளைப் பார்த்து, பார் கடவுள் என் ஜெபத்திற்கு பதில் கொடுத்து நன்றாய் வைத்திருக்கிறார். அவனைப் போய் இப்பொழுது தேட முடியுமா? அவன் ஜெபத்தை கடவுள் கேட்டிருக்க மாட்டார். அதனால் தான் அவனை நான் காணமுடியவில்லை. இருக்கிறானோ, இறந்திருக்கிறானோ தெரியவில்லை என்று கூறிவிட்டு வா போகலாம் என்று படகிலே உம் என்று உட்கார்ந்துக் கொண்டான்.
திடீரென்று ஒரு சத்தம் அவன் காதில் விழுந்தது. உன் நண்பனின் தினசரி ஜெபம் என்னத் தெரியுமா? ஆண்டவரே, என் நண்பன் ஒரு குறைவில்லாமல் வாழ உதவிடும் என்பது தான். இதைக்கேட்டதும் தன் சுயநலத்தை எண்ணி வெட்கப்பட்டு, கப்பலில் இருந்து இறங்கி தன் நண்பனைத் தேட ஆரம்பித்தான்.
அவனவன் தனக்கானவைகளை மட்டுமல்ல, பிறனுக்கானவைகளையும் நாடுவானாக என்று திருமறை நம்மை அறிவுருத்துகிறது. சுயநலத்தை மாத்திரம் மனதில் கொண்டு பணம், வசதி வந்த உடன் உறவினர்கள், உடன் பிறந்தவர்கள், பெற்றவர்கள், நண்பர்கள் எல்லாரையும் துச்சமாக நினைத்து தூக்கி எறிந்து விடாதிருங்கள். பணக்காரர்கள், நம் வாழ்விற்கு தேவையானவர்கள், நம் முன்னேற்றத்திற்கு முக்கியமானவர்கள் மட்டும் போதும் என்று உறவுகளை உதாசீனப்படுத்தி நீங்கள் வாழ்ந்து வரலாம்.
நீங்கள் பிணமாக இருக்கும் போது உங்கள் வாழ்க்கையில் முக்கியமானவர்கள் யாரென்று நினைத்தீர்களோ அவர்களெல்லாரும் கை கைட்டி நிற்பார்கள். கொரானாப் போன்று நோய் வந்தால் Whatsup ல் RIP போட்டு விட்டு உங்கள் உறவுக்கு full stop வைத்து விடுவார்கள். ஆனால் யாரையெல்லாம் நீங்கள் மதிக்க விரும்ப வில்லையோ அவர்கள் தான் உங்கள் பிணத்தை தூக்கி சுமப்பார்கள். இது தான் உலகில் நடைபெறும் உண்மை நிகழ்வுகள். வாழ்க்கையின் எதார்த்தத்தைப் புரிந்து நட்பு பாராட்டுங்கள். உங்கள் கணவன், மனைவி, பிள்ளைகள், மாமனார், மாமியார், அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா, உடன் பிறப்புகள் யாராக இருந்தாலும் அவர்களை உதவாக்கரைகள் என்று எண்ணிவிடாதிருங்கள். உதவிச் செய்வதற்காகவே சகோதரன் பிறந்திருக்கிறான் என்பதை திருமறை நமக்கு நினைவூட்டுகிறது.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment