வெளியே புலி வீட்டிலே பூனை


வேலை, வேலை என்று கண்ணும் கருத்துமாக ஓடுகிறவர்கள்  பலர் வாழ்க்கை ஓட்டத்தில் துணையை இழந்து விடுகிறார்கள். எவ்வளவு நல்ல பையன், வேலை செய்து வேலை செய்து வீட்டை முன்னேற்றுகிறதுல்ல எவ்வளவு அக்கறை. இப்படி அக்கறையுள்ள பையனை வேண்டாம் என்று அவள் போய்விட்டாளே, எவ்வளவு முட்டாள் என்பார்கள்.

வேலை செய்யும் இடத்தில் அவன் முதலாளி அவனை வாழ்த்துவார். ஆனால் வீட்டிலோ மனைவி, உங்களுக்கெல்லாம் எதற்கு மனைவி. வேலையையே கட்டிக்கிட்டு வாழ வேண்டியது தானே என்று சண்டை போடுவாள்.

என் மகன் மிகவும் நல்லவன். அதை அவள் புரிந்து கொள்ள மாட்டேங்கிறாளே என்ன சொல்வது. நல்லா சம்பாதித்து போடுகிறான். வீட்டில் உட்கார்ந்து சாப்பிட வேண்டியதுதானே! அதை விட்டு விட்டு இப்படி கணவனை வேண்டாம் என்று சொல்கிறாளே என்று பல அம்மாக்களும் கூறுகின்றனர். இதில் உள்ள சிக்கலை கூறும் முன் உலகை ஆண்ட நெப்போலியன் திருமண வாழ்வை பற்றி சில குறிப்புகள்.

நெப்போலியனுக்கும் ஜோசஃபினுக்கும் அன்று திருமணம். மிகவும் அமர்க்களமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. நண்பர்கள், உறவினர்கள் என்று பெரிய பட்டாளமே குதூகலத்தில் மூழ்கி இருந்தது. ஆனால் மாப்பிள்ளையை மட்டும் மோதிரத்தை மாற்றுவதற்கு வரவில்லை. மாப்பிள்ளை எங்கு போனார் என்று பதட்டத்தோடு தேட ஆரம்பித்தனர்.

மாப்பிள்ளை நெப்போலியன் தன் அலுவலகத்திலே வேலையில் மூழ்கிப் போய் இருந்தார். நண்பர்கள் அவரை பார்த்து ஏய், உனக்கு தானடா திருமணம், சீக்கிரம் கிளம்பு என்று ஆபீஸிலிருந்து கிளப்பினார்கள். ஆசை ஆசையாய் விரும்பின ஜோசஃபினை ஒருவழியாக கரம் பிடித்தார் நெப்போலியன்.

நெப்போலியன் கண்மூடித்தனமாக ஜோசஃபினை திருமணத்திற்கு முன்பே விரும்பினார். ஆனால் அவரின் தாய் மற்றும் சகோதரிகள் ஜோசஃபின் நல்லவள் அல்ல என்று எவ்வளவோ கூறினாலும் நெப்போலியன் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தார்.

ஆனால் புது மாப்பிள்ளை நெப்போலியன் திருமணமான இரண்டாம் நாளே இத்தாலிக்கு கிளம்பினார். புதுப்பெண் ஜோசஃபினை பாரிஸ்லேயே விட்டுவிட்டு போனார். ராணுவ தளபதியாக இருந்ததால் புது மனைவியோடு நேரம் செலவிடாமல் இத்தாலிக்குச் சென்று கச்சிதமாக திட்டங்களை தீட்டி போர் நடத்தினார். ஒரு வருடத்திற்கு மேலாக இத்தாலியிலேயே இருக்க வேண்டிய சூழல் வந்தது.

தன் மனைவிக்கு அன்பு சொட்ட சொட்ட கடிதங்களை எழுதி தள்ளினார். “எனக்கு உன் நினைவாகவே இருக்கிறது” என்று எழுதினார். ஆனால் ஜோசஃபின் வேண்டா வெறுப்பாகவே பதில் கடிதங்களை எழுதினார். இறுதியில் அவர்கள் வாழ்க்கை பிரிவில் போய் நின்றது.

திருமறையில் நீங்கள் விவேகத்துடன் உங்கள் மனைவியோடு வாழுங்கள் என்று 1 பேதுரு 3ம் அதிகாரத்தில் பேதுரு குறிப்பிடுகிறார். திருமண வாழ்க்கை என்பது கழுத்தில் மாங்கல்யத்தை ஏற்றி விட்டால் அவள் அப்படியே வீட்டில் முடங்கி போய் இருப்பவள் என்று சில ஆண்கள் திருமணம் முடிந்த அடுத்த வாரத்திலோ, மாதத்திலோ வெளிநாடு சென்று சம்பாதிக்க ஆரம்பித்து விடுகின்றனர். பணம் தான் வாழ்க்கை என்று எந்த பெண்களும் திருமணம் செய்து கொள்வதில்லை. நீங்கள் அவர்களுடன் பேசி, மகிழ்ந்து வாழவே விரும்புகிறார்கள்.

வேலை செய்து கோடி கோடியாக சேர்த்தாலும் உங்கள் நேரத்தை அவர்களோடு செலவு செய்யாவிட்டால் அத்தனையும் வீண். உங்களுக்கு இணையாக உங்கள் பணம் இல்லை என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

உலகை ஆளுகை செய்த நெப்போலியன் வீட்டை சரியாக ஆளுகை செய்ய முடியாதது அவன் வாழ்க்கையில் மிகப்பெரிய வேதனையான அனுபவமாக இருந்தது. உங்கள் வாழ்க்கையும் அப்படி அமைந்து விடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்