கொஞ்சம் கோபப்படுங்க, Please!
பசி எடுக்க ஆரம்பித்தது. வழியே ஒரு சிறிய விளம்பர பலகை, "சூடான அல்வா கிடைக்கும்". நான் சிறு பிள்ளையாக இருக்கும் போதே ஒரு அல்வா பிரியன். வயிறு பசி வேறு. மெதுவாக கடைக்காரரிடம் அல்வா சூடாக இருக்கிறதா என்றேன். ஆமா என்று சொல்லிக் கொண்டே எடைப் போட ஆரம்பித்துவிட்டார் கடைக்காரர். இது திருநெல்வேலிகாரனுக்கே அல்வா கொடுக்கும் தென்காசி கடைக்காரர்.
கடை பக்கத்திலே நின்று அல்வாவைச் சாப்பிட்டு முடித்தேன். உடனடியாக கொஞ்சம் மிச்சரை எடுத்து என் கையிலே கொடுத்தார். நான் கேட்கவே இல்லை. ஆனால் கொடுத்தது ஆச்சரியமாக இருந்தது. அதையும் சாப்பிட்டபோது நன்றாக இருந்தது. சாப்பிட்டு முடித்தவுடன் Sir இன்னும் கொஞ்சம் அல்வா சாப்பிடுறீங்களா? என்றார்.
ஆமா வாயில் காரமால்லா இருக்கிறது என்று மீண்டும் 100gm அல்வா வாங்கி சாப்பிட்டேன். இப்பொழுது தான் புரிந்தது தொடர்ந்து இனிப்பாகவே சாப்பிட்டால் தெவிட்டி விடும் என்று கடைக்காரர் காரத்தைக் கொடுத்திருக்கிறார்.
குடும்ப வாழ்க்கையிலும் கூட மகிழ்ச்சியான அனுபவங்கள் மட்டுமல்லாமல் சின்ன சின்ன சண்டைகள் வந்தாலும் அவை குடும்ப வாழ்வின் மகிழ்ச்சியை அதிகரிக்கத்தான் செய்யுமே தவிர குறைத்து விடுவதில்லை என்று ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் அறிந்து எழுதியுள்ளார்.
“இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்வல்லது
அவர்அளிக்கு மாறு.” (திருக்குறள் 1321)
கணவன்/மனைவியிடம் தவறு எதுவும் இல்லாவிட்டாலும் சும்மா சண்டைப் போடலாம். அது அன்பை பெருக்கும் என்கிறார்.
“தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து” (திருக்குறள் 1325)
தன் மீது தப்பு எதுவும் இல்லா விட்டாலும் தான் விரும்பும் பெண் போடும் சண்டையில் கூட ஒரு இன்பம் உண்டு என்கிறார்.
சின்ன சின்ன சண்டைகள் வருவதினால் குடும்பம் பாழ் படுவதில்லை. உடனடியாக யாராவது ஒருவர் பேசி சேரும் போது மிகவும் மகிழ்ச்சியாக அமைந்து விடுகிறது. ஆனால் சின்னக் கோபத்தையும் பெரிதாக நினைத்து நான் இனிப் பேசவே மாட்டேன் என்று வைராக்கியம் பாராட்டுவதினால் தான் குடும்ப பிரச்சனைகள் divorceல் போய் நிற்கிறது. முன்பு பெரியவர்கள் பிள்ளைகளுக்குள் சண்டைப்போட்டால், போய் உன் மனைவியைக் கூப்பிட்டுவிட்டு வா என்று விரட்டி விட்டு விடுவார்கள். நீ உன் கணவன் வீட்டிற்கு போ என்று பெற்றோர் சொல்லவோ அல்லது பெரியவர்களுடன் அனுப்பியோ வைத்து விடுவார்கள். அதைத் தான் இன்றும் பெரியவர்கள் செய்ய வேண்டும்.
ஆபிரகாமும், சாராளும் வயதான பின்பும் நன்றாக சண்டைப் போட்டிருக்கின்றனர். இவர்கள் சண்டைக்கு ஆண்டவரே விலக்குத் தீர்த்து, ஆலோசனைகளைக் கூறி சரிச் செய்துள்ளார். இவ்வாறு சின்னச் சின்னச் சண்டைப் போட்டாலும் குடும்பமாக வாழ்ந்ததினால் தான் முதிர்வயதிலே ஈசாக்கை பெற்றெடுக்க முடிந்தது. (ஆதியாகமம் 16:5, 21:9-13). எனவே வாழ்க்கையில் பிரச்சனைகள் சிறிய சிறிய அளவில் வருவதைக் குறித்து கணவனோ, மனைவியோ, பெற்றோர்களோ கவலைப்படவேண்டாம். அவைகளெல்லாம் குடும்ப வாழ்விற்கு வலுவூட்டுபவைகளே!
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment