கவர்ச்சியா? கண்ணியமா?
Sir, Madam இப்படி போஸ் கொடுங்க, அப்படி நில்லுங்க என்று திரைப்படத்தில் சூட்டிங் எடுப்பதை போல் எடுத்துக் கொண்டிருந்தனர்.
ஆலயத்திற்கு 10 மணிக்கு வருவதாக அறிவித்திருந்தாலும் திருமண மண்டபத்திலே 11 மணிக்கும் நடிகர்கள் போல் ரோல், கேமரா ஆன் என்று சொல்ல விதவிதமாக நடித்துக் கொண்டே இருந்தார்கள்.
வெளிநாட்டு கலாச்சாரத்தைப் போன்றே ஆலயத்திற்குள்ளும் நடந்துகொண்டார்கள். செய்தி வேளை, பாடல் வேளை எல்லாமே அலட்சியம் பண்ணப்பட்டது.
வாக்குறுதிகள் எல்லாம் சிரிப்போடும், ஏனோதானோவென்று கொடுத்துக் கொண்டும் இருக்க நண்பர்கள் செல்லில் பதிவு பண்ணிக்கொண்டு சுற்றி நின்று கொண்டார்கள். ஆலயம் என்ற உணர்வை மறந்தவர்களாக அங்கும் இங்கும் நடந்து கொண்டே இருந்தார்கள். ஆலய ஆராதனை என்பது ஒரு சம்பிரதாயமாகவே அவர்களுக்கு காணப்பட்டது.
பல லட்சங்களை பெற்றோர்கள் செலவு செய்து பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றி வைத்து விட்டு அப்பாடா நம்ம பொறுப்பு முடிந்தது என்று அமர்ந்தார்கள்.
திருமணம் முடிந்ததும் மீண்டும் கேமிராகாரர்கள் வந்து மீண்டும் படப்பிடிப்பை தொடர்ந்தனர். ஒருமாதமாக work பண்ணிய cameramanகளுக்கு மிகவும் மகிழ்ச்சி. இப்படி ஒரு திரைப்படம் போலவே எடுத்து விட்டோமே என்று நெஞ்சை நிமிர்த்தி கொண்டனர். ஒரு மாதம் ஓடியது…. Cameraman தொலைபேசி மூலம் ஒரு மாதம் ஆகியும் வீடியோவை வாங்க வரவில்லையே என்று எண்ணி போன் மேல் போன் அடித்தாலும் யாரும் எடுக்கவில்லை.
என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டிற்கே போய் உங்கள் வீடியோ ரெடி. மீதி பணத்தை கொடுங்கள் என்றான். அந்த குடும்பத்தின் தலைவர் கண்ணீரோடு வீடியோ ரெடி தான் ஆனால் என் மகள் சேர்ந்து வாழ ரெடி இல்லையே என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டிருந்தார்.
அழகு, கவர்ச்சி எல்லாம் சில வேளையில் மக்களை மனமகிழ செய்வதாக காணப்படலாம். ஆனால் நிரந்தரமாக இருக்கப் போவதில்லை.
கன்பூசியஸ் ஒழுங்கின்மையையும், மூடப்பழக்கங்களையும், அறியாமையையும், கலவரங்களையும் அகற்ற பாடுபட்டவர். பல நாடுகளுக்கு சுற்றித்திரிந்து மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கிய அறிவு பொக்கிஷம்.
ஒருமுறை வெய் அரசில் தங்கியிருந்தார். அரசன் தன் மனைவியோடு வீதியில் பவனி செல்ல இருந்தான். அப்பொழுது அந்த அறிவின் பொக்கிஷமாகிய கன்பூசியஸ்யையும் மக்கள் பார்க்கவேண்டும் என்று அவருக்கும் ஒரு பல்லக்கை ஆயத்தமாக்கி அவரோடு அழைத்துச் சென்றான்.
மக்கள் வீதி எங்கும் இருபுறமும் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். கன்பூசியஸ்க்கு மிகுந்த மகிழ்ச்சி தன்னை பார்க்க இவ்வளவு கூட்டமா என. ஆனால் உற்றுப் பார்த்தபோது தான் தெரிந்தது, மக்கள் பார்க்க காத்திருப்பது அரசியின் அழகை தரிசிப்பதற்கே. கன்பூசியஸ்யை யாரும் சட்டை பண்ணவே இல்லை. இது அவரின் உள்ளத்திற்கு வருத்தத்தை அப்பொழுது கொடுத்தது.
அரசியின் அழகு என்பது அரசியின் வாழ்க்கையோடு முடிந்தது. ஆனால் கன்பூசியஸ் இன்றும் இறந்தும் மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அறிவும், புத்தியும் வாழ்கிறது. அழகு மண்ணில் உரமாகி விட்டது.
“சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண்; கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.” “குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது.” (நீதிமொழிகள் 31:30,10) “புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக்கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.” ((நீதிமொழிகள் 14:1) அழகை முக்கியப்படுத்தி, கவர்ச்சியை முக்கியப்படுத்தி ஆராதனையை அலட்சியம் செய்வதும் மேலைநாட்டு நாகரிகத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டால் தான் நண்பர்களுக்கு மத்தியிலே மதிக்கப்படுவேன் என்ற சிந்தனையோடு திருமண ஆராதனைக்குள் நுழையாமல் குடும்பத்தைக் கட்டி எழுப்பும் வசனங்களுக்கு செவி சாய்ப்பதும், இறை பக்தியோடு தன்னை ஒப்படைப்பதும் தான் வாழ்க்கையை மேம்படுத்தும். எத்தனையோ photoவை, videoவை எடுத்தும் குடும்பமாக தொடர்ந்து வாழா விட்டால் அவைகளை பார்க்கும்போது தூக்கி எறிய வேண்டும் என்பது போல்தான் தோன்றும். கர்த்தருக்கு பயப்படுகிற ஸ்திரீயே/மனிதனே புகழப்படுவார்கள் என்பதை உலகத்திற்கு உரக்கச் சொல்லுங்கள்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
ஆமென் அல்லேலூயா
ReplyDelete