நம்பிக்கை இழப்பா?


கணவன் மனைவியின் மீது நம்பிக்கை இழப்பதும், கணவன் மனைவி மீது உள்ள நம்பிக்கைக்கு துரோகம் செய்வதும், பிள்ளைகள்  பெற்றோர் மீது உள்ள நம்பிக்கையை இழந்து விடுவதும், பிள்ளைகளால் பெற்றோருக்கு நம்பிக்கை துரோகம் செய்வதும் ஆங்காங்கே நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதனால் பலவேளை நல்லவர்களையும் சந்தேகக் கண்ணோடு பார்த்து பார்த்து, பின்தொடர்ந்து நரக வேதனைகளை அனுபவிக்கிறோம். இருப்பினும் அளவுக் கடந்த நம்பிக்கை என்பது பலவேளை கண் இருந்தும் பார்வையற்றவர்களாக மாற்றிவிடும் தன்மை உண்டு. தான் எந்த விதத்திலும் சந்தேகத்திற்கு உட்பட மாட்டேன் என்று எண்ணும் சிலர் துணிகரமாக தீமை இழைப்பதற்கும் தயங்குவதில்லை. எனவே கவனமாக இருப்பதும், விழிப்பாக இருப்பதும் அவசியம் தான்.

ஜூலியஸ் சீசர் கி.மு 47 மற்றும் 48லேயே சர்வாதிகாரியாக இருந்தாலும் அரசியல், சமூகம், பொருளாதாரம் மற்றும் சட்ட சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த பெருமைக்குறியவர். ஆனால் பிறர் வெறுக்கும் அளவிற்கு நிரந்தர சர்வாதிகாரியாக செயல்பட்டு யாரையும் மதிக்காமல், மனம் போன போக்கில் போன போது அவருக்கே அவர் வைத்துக் கொண்ட சூன்யமாக மாறிப்போனது.

சீசர் தன் மகனைப் போல புரூடஸ்சை நேசித்து தன் நம்பிக்கைக்குரியவனாக வைத்துக் கொண்டார். புரூடஸ் சீசரின் தீவிர ஆதரவாளனாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்.

கி.மு 44 மார்ச் 14 ம் தேதி செனேட் கூட்டம் நடைபெற இருந்ததால் அரண்மனையிலிருந்து சீசர் புறப்பட்டார். மக்கள் மனுக்களைக் கொடுப்பதற்காக சாலையின் இருபுறமும் நின்றனர். அவைகளை வாங்கிக் கொண்டிருக்கும் போது ஆர்டெமிடோரஸ் என்ற தத்துவ ஆசிரியர் அவரிடம் ஒரு துண்டு சீட்டை எழுதி கொடுத்து விட்டு அவர் காதினிலே மெதுவாக கிசுகிசுத்தார், "உங்களுக்கு விரோதமாக சதிவலைப் பின்னப்பட்டிருக்கிறது. கூட்டத்தில் கலந்துக் கொள்வதைத் தவிர்த்துவிடுங்கள். தயவு செய்து இதை படியுங்கள். இது மிக மிக முக்கியமான செய்தி" என்றார். ஆனால் சீசரோ அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் துண்டு சீட்டை கையிலே வைத்துக் கொண்டே செனேட் கூட்ட அரங்குக்குள் நுழைந்தார்.

அரங்குக்குள் சீசர் நுழைந்த போது மிகவும் மரியாதையோடே அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர். தனக்கு என்றும் மாலை மரியாதை தான் என்று அவர் நினைத்திருந்தார். ஆனால் பெரும்பாலானவர்கள் உடைக்குள்ளே கூரிய கத்தியை மறைத்துக் கொண்டே கூள கும்பிடு போட்டனர் என்பதை புரிய தவறிவிட்டார் சீசர்.

சீசர் பேசும் போதே மரபை மீறி அவரது பேச்சை இடைமறித்துப் பேசினார் டிலியஸ் சிம்பர். அவர் கொடுத்த விண்ணப்பத்தை கிழித்து எறிந்தார் சீசர். உடனே பொங்கி எழும்பிய 20 செனேட் உறுப்பினர்கள் அவரை சூழ்ந்துக் கொண்டனர். மாவீரன் சீசர் சுதாகரிப்பதற்குள்ளாக தங்களிடம் இருந்த கத்திகளை அவர் உடலில் பாச்சினர். ஏறக்குறைய இருபத்தி இரண்டு குத்துக்கள் விழுந்த போது, 23 வது குத்தை அவர் மகன் போல் நேசித்த புரூடஸ் தன் பங்குக்கு குத்தினதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை (“You Too Brutus?”) “நீ கூடவா புரூடஸ்” என்று அவரால் ஜீரனிக்க முடியாமல் குத்தை வாங்கிக் கொண்டே நிலைகுலைந்தார். “You Too Brutus” என்பதை “நீ கூடவா என் மகனே” என்பது தான் சரியான பொருள் என்கின்றனர். காரணம் தன் மகனைப் போல புரூடஸ் சை நினைத்தார். 

ஒரு கையில் நெஞ்சைப்பிடித்துக் கொண்டு சரிந்த சீசரின் மறு கையிலே அர்டெமிடோரஸ் கொடுத்த துண்டு சீட்டு இரத்தத்தில் நனைந்தவாறு அடுத்த நாள் வரை கிடந்தது. பல வேளைகளில் சிலர் கொடுக்கும் எச்சரிப்பு சத்தங்களை நாம் காதில் வாங்காமல் அளவு கடந்த நம்பிக்கையோடு வாழக் கூடாது. நாம் கேட்கிற காரியத்தில் கேள்விப்படுகிற காரியத்தில் ஏதாகிலும் உண்மை உண்டா என்று அலசிப்பார்க்க வேண்டும்.

இயேசு இரவு பகலாக உட்கார்ந்து ஜெபித்து தேர்ந்தெடுத்த 12 சீடரில் ஒருவன் யூதாஸ். அவரோடு உண்டு, உறங்கினாலும், வெள்ளிக்காசின் மேல் விருப்பங் கொண்டு, முத்தம் கொடுத்தான். நண்பனைப் போல் நடித்து காட்டிக் கொடுக்கும் நம்பிக்கை துரோகிகள் இன்றும் வாழ்ந்து தான் வருகிறார்கள்.

பாம்பை பிடித்து மனைவி தூங்கும்போது விடும் கணவன்களும், விஷத்தை கொடுத்து கொல்லும் மனைவிகளும், வயதானவுடன் சொத்துக்களை எழுதி வாங்கி விட்டு நடுத்தெருவுக்கு விரட்டும் பிள்ளைகளும் இன்றும் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களோடு வாழும் போது ஜாக்கிரதையாகத்தான் வாழ வேண்டும்.

அதேவேளையில் எப்பொழுதும் சந்தேகப்படுகிறவர்காளாகவும், மேல் கண்டவர்களைப் போல் தான் எல்லாரும் இருப்பார்கள் என்று வீணாக தவறாக நினைத்து விடக்கூடாது. சந்தேகப் பிறவிகளாக மாறிப்போவது பரிதாபமான நிலை. சமச்சீராக வாழப் பழகிக் கொள்வோம். அதுவே நிம்மதி.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி