எப்பொழுதும் ஓய்வா?


இறைபணியின் நிமித்தமாக காலைவேளையில் இல்லங்களுக்குச் செல்லும் போது இளந்தலைமுறையினரை நான் காண்பது மிகவும் அரிதாக இருக்கிறது. என் மகன்/மகள் இன்று கல்லூரி/ பள்ளி இல்லாததால் தூங்கிக் கொண்டு இருக்கிறான்/ள் என்பர் பெற்றோர். ஒரு நாளுக்கு 10 மணி நேரத்திற்கு மேல் வாலிப வயதிலேயே தூங்கி கழிக்கின்றனர். தூங்கி தூங்கி கழிப்பது தான் ஓய்வு என்ற மனநிலை அனேகருக்கு ஏற்பட்டு வருகிறது. சில இளைஞர் பட்டாளங்கள் கூட படித்து விட்டு வேலை எதுவுக்கும் செல்லாமல், முயற்சிகளை 100% செய்யாமல் ஓய்வெடுத்து வருகின்றனர்.

திருமணமானவர்கள் கூட குடும்ப பொறுப்பு வந்த பின்னும் ஒழுங்காக வேலைக்குச் செல்லாமல் புதிய படங்களைப் பார்த்துக் கொண்டும், T.V, Cell, Computer யை நோண்டிக்  கொண்டும் இருப்பார்கள். கேட்டால் வேலைக்குப் போய் வேலைக்குப் போய் ஒரே போராக இருக்கிறது. எனவே இன்றைக்கு rest. யாரிடமாவது கடன் வாங்கி இன்று குடும்பத்தை நடத்த வேண்டியது தான் என்பர்.

இதைப் போன்று தான் ஒரு மன்னரும் தூங்கி கழிப்பதில் மிகவும் மகிழ்வுக் கொண்டார். நாட்டைப் பற்றியும், மக்களின் தேவைகளைக் குறித்தும் அதிக அக்கரை இல்லாமல் வாழ்ந்து வந்தார். ஆனால் அரசிக்கு இது அதிர்ச்சியாகவே இருந்து வந்தது. ஆனால் அரசியின் வார்த்தைகளை அரசன் காதிலே போட்டுக் கொள்ளமாட்டார்.

எப்படி இவரைத் திருத்துவது என்று யோசித்த அரசி, அரசனின் அன்புக்கு பாத்திரமான அமைச்சரிடம் இதைக் குறித்துப் பேசினார்.

ஒரு நாள் அரசர் தன்னுடைய அமைச்சரைப் பார்த்து, “இந்த அரண்மனையில் தூங்கி, தூங்கி வெறுப்பாக இருக்கிறது. ஆகவே நல்ல மரங்கள் உள்ள காட்டுப்பகுதிக்குள் போய் rest எடுப்பதற்கும், நல்ல உணவை சாப்பிடுவதற்கும் இடத்தை எனக்கு ஆயத்தப்படுத்துங்கள் என்று கட்டளை இட்டார்.

அமைச்சரும் அப்படியே செய்தார். அடுத்த நாள் இருவரும் காட்டுப்பகுதிகளுக்குள் சென்றனர். அருமையான இயற்கை கொஞ்சும் மலைப் பகுதி. இனிமையான பறவைகள் குரல், அங்கே ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவி கண்டு பரவசம் அடைந்தார். சபாஸ் சரியான இடம், குளித்து, சாப்பிட்டு தூங்குவதற்கு ஏற்ற இடம் என்று மகிழ்ந்தார்.  

அமைச்சர் அரசனைப் பார்த்து, “அரசே உங்களுக்கும் இந்த இடம் பிடித்திருக்கிறது. ஆனால் இந்த இடத்தில் அருவியின் சத்தம் மட்டும் தான் கொஞ்சம் அதிகமாக கேட்டுக் கொண்டிருக்கிறது. எனவே இந்த ஆர்ப்பரித்து கொட்டும் அருவி நின்ற உடன் நீங்கள் படுத்து தூங்குங்கள். நான் உங்கள் அருகிலே பாதுகாவலனாக இருந்து பார்த்துக் கொள்ளுகிறேன்” என்றார்.

இதைக்கேட்ட மன்னர், அமைச்சரைப் பார்த்து, “வேடிக்கையாக பேசுகிறீர்கள்! என்றைக்கு இந்த அருவி நிற்க!! நான் படுத்து rest எடுக்க!!!” என்றார்.

அமைச்சர் அரசரைப் பார்த்து மன்னா, “இந்த அருவி ஓய்வில்லாமல் ஆர்பரித்துக் கொட்டி நம் தேசத்திலுள்ள பயிர்களை எல்லாம் விளைவித்து, நம் மக்களின் வாழ்வை வளமாக்கிக் கொண்டிருக்க, நாட்டின் மன்னன் மட்டும் தூங்கி, தூங்கி விழித்தால் மக்கள் வாழ்வின் தரம் மட்டும் எப்பொழுது உயரும்?” என்று பழத்தில் ஊசி போல் மெதுவாக நுழைத்தார்.

அமைச்சரின் வார்த்தையில் இருக்கும் நியாயத்தைப் புரிந்துக் கொண்ட மன்னர், அருவியில் குளித்து விட்டு புத்துணர்ச்சியுடன் நாட்டிற்குச் சேவை செய்ய குதிரையின் மீது ஏறி அமர்ந்து புறப்படலானார். மக்கள் வாழ்வு செழித்தது.

சோம்பேறியே, நீ எவ்வளவு நேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தை விட்டு எழுந்திருப்பாய். இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னுங் கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங் கொஞ்சம் கை முடக்கிக் கொண்டு நித்திரைச் செய்யட்டும் என்பாயோ? உன் தரித்திரம் வழிப் போக்கனைப் போலவும், உன் வறுமைஆயுதமணிந்தவனைப்  போலவும் வரும். (நீதிமொழிகள் 6:9-11). கோடைக் காலத்தில் சேர்க்கிறவன்  புத்தியுள்ள மகன். அறுப்புக் காலத்தில் தூக்குகிறவனோ இலச்சையை உண்டாக்குகிற மகன் (நீதிமொழிகள் 10:5) சோம்பல் தூங்கி விழப் பண்ணும்; அசதியானவன் பட்டினியாயிருப்பான் (நீதிமொழிகள்19:15). தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்; கண் விழித்திரு, அப்பொழுது ஆகாரத்தினால் திருப்தியாவாய் (நீதிமொழிகள் 20:3). சோம்பேறியின் கைகள் வேலைச் செய்ய சம்மதியாததினால், அவன் ஆசை அவனைக் கொல்லும் (நீதிமொழிகள் 21:25).

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி