எனக்கு ஏன்


இறைவனுக்கு பிரியமான வாழ்வு வாழ்ந்த நண்பர் ஒருவருடைய வீட்டிற்கு சென்றிருந்தேன். அவர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு வீட்டிற்குள் அடைபட்டுக் கிடந்தார். நோயினுடைய தாக்கத்தினால் பேச முடியாமல், உட்கார முடியாமல் இருந்தார். அருகில் போய் அமர்ந்தேன். அவர்கள் வீட்டார் என்னிடம் கேட்ட முதல் கேள்வி இவர்களுக்கு ஏன் இந்த வியாதி என்பதுதான். பல வேளைகளில் வியாதிகள், எதிர்பாராத விபத்துகள், இழப்புகள் நல்லவர்களுக்கு வரும்போது, நான் ஆண்டவருக்கு எவ்வளவு பிரியமாக வாழ்ந்தேன், வைராக்கியமாக இருந்தேன், எனக்கு கொடிய வியாதி வராது என்று இருந்தேன். ஆனால் நான் இன்று பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டேனே? என்று வருந்துகின்றனர்.

ஆர்தர் ஆஷ் என்ற சிறுவன் டென்னிஸ் விளையாட்டில் மிகுந்த ஆர்வமுடன் விளையாடி உற்சாகத்துடன் காணப்பட்டான். கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தி வெற்றி மேல் வெற்றி பெற்று வந்தான். கடின முயற்சி எடுத்த ஆர்தர் ஆஷ் குறிப்பிட்ட காலத்தில் டென்னிஸ் உலகில் நட்சத்திரமாய் மின்ன ஆரம்பித்தார். டென்னிஸ் உலகில் மூன்று பெரிய வெற்றிகளை பெற்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் என்ற பெருமையைப் பெற்றார்.

விளையாட்டு உலகில் இருந்தாலும் தன்னை சுற்றி இருந்த சமூகத்தின் மீது அக்கறை உடையவராக காணப்பட்டார். கருப்பு இன மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தார். அதன் விளைவாக இரண்டு முறை சிறைவாசம் சென்றார். இப்படி சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த இவர் எதிர்பாராமல் மாரடைப்பினால் துன்பப்பட்டார். இருப்பினும் அறுவை சிகிச்சை மூலம் உயிர் பெற்ற அவருக்கு மீண்டும் ஒரு சோதனை வந்தது. அது HIV என்ற கிருமியின் வழியாக! அறுவை சிகிச்சையின்போது ஏற்ற பயன்படுத்திய இரத்தத்தில் HIV வைரஸ் இருப்பதை உணராமல் ஏற்றி விட்டனர். அது அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பலர் துவக்க காலங்களில் இரத்தத்தை donate பண்ணும்போது HIV இருக்கிறதா என்று தெரியாமல் பிறருக்கு ஏற்றி விட்டனர். இதனால் அவமானமும், துன்பமும் அடைந்தனர். இந்த உண்மையை உலகிற்கு சொல்லி தன்னைப் போன்று கஷ்டப்படும் மக்களுக்கு மறுவாழ்வுக்காக சுகாதார நிறுவனத்தை ஏற்படுத்தி மக்களுக்கு சேவை செய்தார். “இப்படிப்பட்ட நல்ல செயல் செய்யும் உங்களுக்கு கடவுள் ஏன் எய்ட்ஸ் நோயை கொடுத்தார்” என்று ஒருவர் ஆர்தர் ஆஷ் யிடம் கேட்டார்.

அதற்கு பதிலாக உலகில் 5 கோடி பேர் டென்னிஸ் விளையாட்டை விளையாடுகின்றனர். அவர்களில் 50 ஆயிரம் பேர் டென்னிஸ் விளையாட்டையே தன் எதிர்கால வாழ்வின் நோக்கமாகக் கொண்டு விளையாடுகின்றனர். ஆனால் 50 பேர்தான் விம்பிள்டன் பட்டத்திற்கு விளையாடுவதற்கு தேர்வாகின்றனர். அரையிறுதியில் 4 பேரும், இறுதி ஆட்டத்தில் 2 பேரும் தேர்வாகின்றனர். ஆனால் அதில் ஒருவர்தான் வெற்றி பெறுகின்றனர். அந்த வாய்ப்பை கடவுள் எனக்குக் கொடுத்தார். அப்பொழுது ஆண்டவரிடம், “இறைவா எனக்கு ஏன் வெற்றியை கொடுத்தீர் என்று நான் கேட்க அவரிடம் கேட்கவில்லை. அப்படி இருக்கும்போது ஏன் எனக்கு இந்தத் துன்பத்தை கொடுத்தீர் என்று கேட்க முடியும்” என்றார். கேள்விகளை மட்டும் இறைவனிடம் கேட்டுக் கொண்டே இருக்காமல், இருக்கும் நாட்களிலும் ஏதாகிலும் மக்களுக்கு சேவை செய்து கொண்டு இருக்கவே விரும்புகிறேன் என்று இறுதி மூச்சு வரையிலும் சமூகத்தின் மீது அக்கறையோடு வாழ்ந்து வந்தார்.

யோபுவின் வாழ்விலும் எதிர்பாராத நோய் வந்த போதும், இழப்புகள் ஏற்பட்ட போதும் அவன் மனைவி இவையெல்லாம் உமக்கு ஏன் வந்தது? என்ற கேள்வியையே எழுப்பினாள். ஆனால் இன்பத்தையும், துன்பத்தையும் ஏற்று வாழ்வு வாழ வேண்டும் என்ற மன நிலைக்குள்ளாக யோபு வந்துவிட்டான். இறுதிவரையிலும் வியாதியோடு போராடினாலும் கடவுள் மீது அவனுக்கு நம்பிக்கை குறையவே இல்லை. என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் என்ற உணர்வு மேலோங்கியே நின்றது. இறுதியில் வியாதி மாறியது, இழப்புகள் மாறியது, புது வாழ்வு மலர்ந்தது.

பல வேளைகளில் எதிர்பாராத சூழலை சந்திக்கும்போது நம்பிக்கையை இழந்து விடுகிறோம். ஆனால் இறைமகன் இயேசு நமக்கு நம்பிக்கையை கொடுப்பவராக அருகில் இருக்கிறார்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்