ரன்னிங் கமெண்ட்ரி
Twitter நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக 37 வயதில் அலங்கரித்து கொண்டிருப்பவர் பராக் அகர்வால். மும்பையை சார்ந்த இவர் 2011 ஆம் ஆண்டு Twitter நிறுவனத்தில் காலடி எடுத்து வைத்தார். 2017ல் அந்நிறுவனத்திலேயே அடுத்தபடியாக தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக[CTO] மாறினார். இப்பொழுது C.E.O (தலைமை செயல் அதிகாரியாக) தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.
Prof.டேவிட் லார்கர் (David Larker) இவரைப் பற்றி கூறும்போது, “உயர்வுக்கு வயது ஒரு தடையே இல்லை” என்றார். ஜாக் டோர்சி என்பவர் பராக் அகர்வாலை பற்றி குறிப்பிடும்போது “இந்த நிறுவனத்தின் தேவைகள் அனைத்தையும் நன்றாக, ஆழமாக புரிந்து வைத்துள்ளார். Twitterன் ஒவ்வொரு முக்கிய முடிவுகளுக்கும் தன் பங்கை பலமாக அளித்து வருபவர். ஆய்வு நோக்கிலும் படைப்பாற்றல் கொண்டவர். அவர் மீது ஆழமான நம்பிக்கை உள்ளது” என்றார்.
சரி இப்படி இந்தியர்கள் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் தனி ஒரு ராஜ்யத்தையே அமைத்து வருகிறது நமக்கு பெருமையாகத்தான் இருக்கிறது. Google நிறுவனத்தில் சுந்தர் பிச்சையின் ராஜ்யம், ஆனால் நான் மட்டும் வேலைக்காக ஒவ்வொரு இடமாக ஏறி ஏறி பிச்சை எடுக்கிறேனே? Microsoft நிறுவனத்தில் சத்ய நாதெள்ளா. ஹைதராபாத்தை சார்ந்தவரின் ராஜ்ஜியம்தான். ஆனால் நானும் சத்தியமாக சொல்லுகிறேன் B.E, M.E. முடித்துள்ளேன் என்று! ஆனால் யாரும் என்னை ஏறெடுத்துப் பார்க்க மாட்டுக்காங்களே! Adobe நிறுவனத்தின் CEO சாந்தனு நாராயணன் தான் வலம் வந்து கொண்டிருக்கிறார். நானும் சாந்தமாக தான் கெஞ்சுகிறேன் 10,000 போதும் ஒரு வேலையை மட்டும் கொடுங்களேன் என்கிறேன்! ஆனால் ஒருவரும் என்னை கண்டு கொள்கிறது மாதிரி தெரியவில்லையே!! IBM நிறுவனத்தின் CEO அரவிந்த் கிருஷ்ணா, ஆந்திர பிரதேசத்தை சார்ந்தவர்தான் கோலோச்சி வருகிறார். கடவுள் எனக்கு மாத்திரம் வேலையையே தருவதில்லையே என்று வருத்தப்படுகிறீர்களா?
நண்பர்களே “அகல உழுவதிலும் ஆழ உழு” என்பது தமிழ் பழமொழி. ஒரு நாளில் நாம் ஏறக்குறைய 16 மணி நேரம் விழித்திருப்போம் என்றால் நொடி கணக்கில் வருவது 57,600. ஆனால் நம்முடைய மனதில் சுமார் 60 ஆயிரம் எண்ணங்கள் ஒரு நாளுக்கு வந்து பளிச்சிட்டு செல்லுகிறது. அடேயப்பா இவ்வளவு மின்னல் வந்து போகிறதா என்று நினைக்கிறீர்களா?
ஆம் அன்பர்களே இந்த மின்னல்களை சரியாக விழுங்கும் அக்கினிக் குஞ்சுகள் தான் உலகத்தை கோலோச்சும் CEOக்கள்..
மனதில் எண்ணற்ற பிலிம் ஓடினாலும் சிலரால் அந்த எல்லா பிலிமையும் கண்டுகொள்ளாமல் reject பண்ணிவிட்டு தேவையான பிலிமை மட்டும் கவனம் செலுத்தி மூச்சைப் பிடித்து முத்தெடுத்து விடுகின்றனர்.
கல்யாண வீட்டிற்குப் போன உடன் இலையில் வைப்பது எல்லாவற்றையும் சாப்பிட நினைக்காமல் தேவையானதை மட்டும் வாங்கி சாப்பிட்டு உடலை கவனித்துக் கொள்வது போல் தேவையானதை மட்டும் மனதிற்குள் உள்வாங்கி எண்ணத்தை செழுமைப்படுத்தி கொண்டவர்கள் தான் மேற்கண்ட அக்னிக் குஞ்சுகள்.
கிரிக்கெட் விளையாடும் போது தொடர்ந்து கமெண்டரி கொடுத்துக்கொண்டே இருப்பது போல் மூளைக்குள் பல செய்திகள் கேட்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் மகாத்மா காந்தியின் குரங்கு போல தேவையற்றது வரும்போது அடைத்துக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் தேவையான காரியங்களில் ஆழமாக சிந்தித்து வாழ்வில் முன்னேற முடியும்.
“எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.” (நீதிமொழிகள் 4:23) என்று திருமறை கூறுகிறது. மூளைக்கு பல சிந்தனைகள் வந்து போகலாம். ஆனால் யாரை உட்கார வைக்க வேண்டும், யாரை வெளியே வைத்தே அனுப்பிவிட வேண்டும், யாரை வரக்கூடாது என்று கடிந்து கொள்ள வேண்டும் என்பதை இருதயம் சரியாக தீர்மானிக்க வேண்டும். அப்போது நமது இதயத்தில் இருந்து நல்ல நீரோடையை போல தெளிவான சிந்தனை ஓட ஆரம்பிக்கும். அது ஓடும் இடமெல்லாம் செழிப்பாக மாறும். அது எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் சரி, நீங்கள் சென்ற இடமெல்லாம் செழிப்பு தான். முயற்சி செய்து தான் பார்ப்போமே! நீங்கதான் அடுத்த CEO.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment