கெட்ட கனவு


ஒரு நாள் இளைஞன் ஒருவன் என்னிடம் வந்தான். ஐயா, எனக்காக இறைவனிடம் பிரார்த்தனைப் பண்ணுங்கள் என்றான். எதற்காக? என்றேன்.

“எனக்கு கெட்ட கனவாக வருகிறது” என்றான்.

இளைஞர்கள் பலருக்கு கெட்ட கனவாக வருவதால் இராத்திரியில் படுக்கையிலே புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இளைஞர்கள் கனவு காணவேண்டும் என்று நமது முன்னாள் ஜனாதிபதி A.P.J. அப்துல் கலாம் அவர்கள் கூறினாரே அது எந்த கனவு? நல்ல கனவா? கெட்ட கனவா? உறங்கும் போதா? உறங்காமல் இருக்கும் போதா?

“உறங்கும் போது நீ காணுவது கனவல்ல.   உன்னை உறங்கவிடாமல் செய்வதே கனவு” என்றார். இன்று இளைஞர்களிடம் கனவு பெரிதாக இருக்கிறது. ஆனால் அதை அடைய வேண்டும் என்ற உணர்வும் செயலாக்கமும் இன்றி காணப்படுகிறது. முயற்சியே எடுக்காமல் கனவை  அடைய வேண்டும் என்று விரும்புவதால் குறுக்கு வழிகளில் யாராவது எனக்கு Exam எழுதிக் கொடுப்பார்களா? Question வெளியே out ஆகாதா? என்று தேடி அலைகின்றனர். அவ்வாறு செயல்படுவதை விட்டு விட்டு உங்கள் கனவு நிறைவேற முழு மூச்சாக உழைக்க முற்படுங்கள்.

மார்டின் லூதர் கிங் ஜூனியர் 1963ல் “வேலையும், சுதந்திரமும் வேண்டும்” என வாஷிங்டனுக்குப் பேரணியை ஏற்படுத்தினார். அப்பேரணியில் “எனக்கொரு கனவு” என்ற உரையை ஆற்றினார். இந்த உரை சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியது. இவர் அமெரிக்காவில் இறைப்பணிச் செய்கிற ஆயராகவே விளங்கினார். காந்தியடிகள் காட்டிய அகிம்சை வழியில் போராட்டத்தை நடத்த கற்றுக் கொண்டவர். மக்களின் சமூக உரிமைக்காக தன் உயிரைக் கொடுக்க முன் வந்தவர். நிற பாகுபாடு அமெரிக்க மண்ணில் அடியோடு புதைக்கப்பட்ட வேண்டும் என்ற ஏக்கம் அவருக்குள் இருந்தது. அவர் தன்னுடைய கனவை கீழ்கண்டவாறு கூறுகிறார், "கருப்பு இன அடிமையின் மகனும், அடிமைப்படுத்தும் வெள்ளையரின் மகனும் ஒரே மேசையில் மகிழ்ச்சியோடு பேசி உணவு உட்கொள்ளும் காலம் வரவேண்டும்" என்பதே என் கனவு என்றார்.

இந்த கனவு நிறைவேறுவதற்காக 1957ல் நிற பாகுபாட்டிற்கு எதிராக போராட்டத்தை அவர் எடுத்தார். ஆனால் எதிர்பார்த்த வெற்றி மகுடத்தை அவர் அப்பொழுது பெற்றுக்கொள்ள முடியவில்லை. வெற்றி பெறும் வரைப் போராடுவேன் என்று மீண்டும் 1962ல் அலபாமாவில் அறவழிப் போராட்டத்தை கையிலெடுத்த போது உலகமே மார்ட்டின் லூதர் கிங் ஜூனியருக்கு நேராக திரும்பியது. அவருடைய நீதிக்கான வன்முறையற்ற போராட்டத்தை முன்னெடுத்தவரைப் பாராட்டி நோபல் பரிசு 1964ல் வழங்கப்பட்டது. கனவு நனவாகும் முன்னே 1968 ஏப்ரல் 4ம் நாள் டென்னசி மாநிலத்தில் மண்ணுக்கு நல்ல உரமாக வீழ்த்தப்பட்டார். இருப்பினும் அவர் இரத்தத்தில் விளைந்த கனியாக பராக் ஒபாமா 2009ம் ஆண்டு ஜனவரி 20 ம் நாள் அமெரிக்காவின் 44வது குடியரசு தலைவராக மாறினார். ஒரே மேசையில் வெள்ளையரும் கருப்பரும் அமர்ந்து அளவளாவும் கனவு கனிந்தது.  

கனவை கலைக்க வாழ்க்கையில் பல சூழல்கள் ஏற்படுவது உண்டு. யோசேப்பு என்ற இளைஞனுக்கு நல்ல கனவு இருந்தது. ஆனால் கனவு காற்றில் பறந்து விடும் அளவிற்கு அவனை அவன் சகோதரர்கள் அடிமையாக விற்றுப்போட்டனர். ஆனால் "கர்த்தர் யோசேப்போடே இருந்தார். அவன் காரியசித்தியுள்ளவனானான்." (The Lord was with Joseph and made him successful) என்று திருமறை கூறுகிறது. (ஆதியாகமம் 39:2). எந்த சூழ்நிலை வந்தாலும் அங்கே உண்மையோடும், உறுதியோடும், பண்போடும் நடந்துக் கொள்ளக் கூடிய மன நிலையை யோசேப்பு வளர்த்துக் கொண்டான். இதன் விளைவாக அவன் கனவு நனவாகும் சூழல் வந்தது. எகிப்திற்கு அதிபதியாக மாறினான்.

இளைஞர்களே கனவை நனவாக்க இறைவனின் துணையோடு, முழு மூச்சோடு போராடுங்கள். நல்ல கனவுகள் உங்களுக்குள் உதயமாகும். 

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி