எடுத்தேன் கவிழ்த்தேன்


மாலை வேளையில் ஒரு பெரியவரை  சந்திப்பதற்காக சென்றிருந்தேன். வாசல் அருகில் வரும் போதே காரசாரமான சத்தம் வீட்டிலிருந்து வெளியே கேட்டது. சற்று நேரம் பொறுமையோடு அந்த அடை மழையில் நின்றேன். மெதுவாக சாரல் நிற்க கதவைத் தட்டினேன்.

வெளியே வந்தார் பெரியவர். என்னைப் பார்த்ததும் சற்று சுதாகரித்துக் கொண்டு, “எப்பொழுது வந்தீர்கள்?” என்றார். வீட்டிற்குள் சூறாவளி சுழற்றி அடித்ததால் வெளியே காத்திருந்தேன் என்றேன்.

“இது எங்கள் வீட்டில் சகஜம் தான்” என்று கூறி விஷயத்தை சொன்னார். அவருடைய இரண்டாவது மகன் எபி இளைஞனாக படித்து முடித்துவிட்டு இருக்கிறான். உயர்ந்த சிந்தனை, தன் காலில் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை, மற்றவர்களிடம் கையேந்தி சம்பளத்திற்கு நிற்கக் கூடாது என்ற வைராக்கியம் எல்லாம் இருக்கிறது. இதனால் என்னிடம் பணம் கேட்டு தொழில் தொடங்குவேன் என்று ஒத்த காலில் நிற்கிறான். என்ன செய்வது தெரியவில்லை என்றார்.

நானும் நல்ல விஷயம் தானே என்றேன். நல்லது தான் ஒரு முறை பணம் கொடுத்தால் பரவாயில்லை. நான்கு முறை தொழிலைத் தொடங்கி விட்டு பாதியிலேயே விட்டு விட்டு வந்து விடுகிறான். எல்லாம் நஷ்டமாகி விடுகிறது. கடைசி முறை வங்கியில் கடன் வாங்கி கொடுத்தேன். இப்பொழுது மொத்தமும் நஷ்டம். ஆனால் அதைப் பற்றி கவலைப்படாமல் அடுத்த தொழிலைத் தொடங்குவேன், பணம் கொடுங்கள் என்று சண்டைக்கு நிற்கிறான். ஒரு தொழிலை ஆரம்பிக்கும் போது எப்படிப்பட்ட சூழல்கள் வரும் என்று சரியாக திட்டமிடாமல், திடீர் முடிவை எடுத்துவிட்டு, இதெல்லாம் சரியாக வராது என்று எங்கேயாவது சில மாதங்கள் ஓடி விடுகிறான். நீங்கள் தான் அவனுக்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்றார்.

எபி யை அருகிலே அமர வைத்து ஒரு கதையை அவனிடம் கூறினேன்.

ஒரு நாள் ஒரு சாது, மன்னர் ஒருவரை சந்தித்தார் அவரிடம் “100 வெள்ளி காசைக் கொடுத்தால் நல்ல தீர்மானங்கள் எடுக்க சொல்லித்தருவேன்” என்றார்.

மன்னரும் அப்படி நல்ல ஒரு விஷயத்தைத் தெரிந்துக் கொள்வது சந்தோஷம் தானே என்று நினைத்து சாதுவிடம், “ஒரு நல்ல விஷயத்தை சொல்லுங்கள்” என்றார்.

உடனே சாது மன்னரிடம் முதலாவது பணத்தை கொடுங்கள் என்றார். சரி என்று மன்னர் 100 வெள்ளி காசை  கொடுத்து விட்டு காதை கூர்மையாக்கி கேட்க தாயாரானார்.

சாது அவரிடம் “முடிவு எப்படி இருக்கும் என்று யோசிக்காமல் எந்த ஒரு செயலைச் செய்யக் கூடாது” என்று கூறி இடத்தை விட்டு கிளம்பினார்.  

மன்னரை சாது ஏமாற்றி விட்டார் என்று கூறி மன்னரைப் பார்த்து சிரித்தனர் மந்திரிகள்.

ஆனால் மன்னர் அவர்களைப் பார்த்து, சிரிக்க இதில் ஒன்றுமில்லை. இந்த வார்த்தையை எல்லா இடமும் எழுதிவைக்க வேண்டும் என்று தன்னுடைய ஆட்களுக்கு கட்டளையிட்டார்.

எங்கு பார்த்தாலும் இதே வார்த்தை தான். பாத்திரத்தில் கூட எழுதச் சொன்னார்.

ஒரு நாள் மன்னருக்கு சுகவீனம் ஆனது. அப்பொழுது மருத்துவர் அவரை சோதிக்கச் சென்ற போது ஒருவன் ஒரு சதி திட்டத்தை மருத்துவரிடம் கூறினான். நீ அவரை பரிசோதிக்கும் போது பயன்படுத்தும் கத்தியில் விஷம் தடவி பயன்படுத்து. அந்த விஷத்திலேயே மன்னர் இறந்து விடுவார். நான் ஆட்சி பொறுப்பேற்றதும் உன்னை மந்திரி ஆக்குவேன் என்றான்.

மருத்துவர் சதி திட்டத்தில் உடன்பட்டு அரசனை சோதிக்கச் சென்ற போது அங்கு ஒரு பாத்திரம் இருந்தது. அதில் “முடிவு எப்படி இருக்கும் என்று யோசிக்காமல் எந்த ஒரு செயலையும் செய்யாதே” என்று எழுதியிருப்பதைப் பார்த்தவுடன் மருத்துவருக்கு உடலெல்லாம் வியர்த்தது! கை  நடுங்க ஆரம்பித்தது!!

அரசர் அவரைப் பார்த்து, “மருத்துவரே உமக்கு என்ன ஆயிற்று?” என்றார்.

தன்னை உணர்ந்த அரசரைப் பார்த்து தன் தவறை கூறினார் மருத்துவர்.

உடனே சதிகாரனுக்கு முடிவு கட்டப்பட்டது. சாதுவின் வார்த்தை எவ்வளவு உண்மையானவை என்பதை மந்திரிகள் புரிந்துக் கொண்டனர். இதை கூறிவிட்டு எபிக்காக ஜெபித்து விட்டு நடையைக் கட்டினேன்.

சில வருடங்கள் கழித்து News Paper ல் ஒரு பெரிய நிறுவனத்தை உயர் அதிகாரி ஒருவர் திறந்து வைக்க அருகருகே எபியும், அவன் தந்தையும் நிற்பதைப் பார்த்து அசந்து போனேன். சில காலம் பக்குவப்படுவதற்காக ஒரு நிறுவனத்தில் வேலைப் பார்த்து அனுபவங்களைப் பெற்றுக் கொண்டு இப்பொழுது நல்ல திறமையுடன் முடிவுகளை எடுக்க தகுதியுள்ளவனானான் எபி என்று நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டு சந்தோஷப்பட்டேன்.

திருமறையும் கூட ஒரு வீட்டை கட்டு முன் உட்கார்ந்து அதை கட்டி முடிக்க முடியுமா என்று சிந்தித்த பின், நல்ல முடிவெடுத்து துவங்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது. எந்த காரியத்தையும் தீர்க்கமாக எடுக்க வேண்டும், யோசித்து எடுக்க வேண்டும். “ஆத்திர காரனுக்கு புத்தி மட்டு” என்பது பழமொழி. அவசரப்பட்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என்று எதையும் இளைஞர்கள் செய்ய முற்படும் போது பெற்றோருக்கு மிகப் பெரிய இழப்புகள் வந்து விடுகிறது. பலர் அவர்களை ஏமாற்றி விடுகின்றனர். தொடர் ஏமாற்றங்கள் வருகின்ற போது பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மேல் வைத்துள்ள நம்பிக்கை குறைந்து விடுகிறது. இதனால் பெற்றோர் பிள்ளைகள் உறவில் விரிசல்கள் ஏற்பட்டு விடுகிறது.

பொறுமையோடு திறமைகளை வளர்த்துக் கொள்ள தயங்காதிருங்கள். இறைவன் உங்களுக்கு எப்பொழுதும் உதவிச் செய்ய ஆயத்தமாயிருக்கிறார். 

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி