பெண்கள் Special



சமீபத்தில் பெண்களுக்கான ஒரு ஸ்பெஷல் 'மது பார்' ஆயத்தமாகி உள்ளது என்பது மதுரை மாதுக்களுக்கு இனிப்பான செய்தியா அல்லது இழிவுபடுத்தும் செய்தியா என்பது தெரியவில்லை. விஷால் டி என்ற மாலில் பெண்கள் மது அருந்துவதற்கென தனியாக ஒரு பார் தொடங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டபோது அந்த அளவிற்கு பெண்கள் குடிகாரர்களாக மாறிவிட்டார்களா? என்ன? இப்படி பெண்களை மது குடிக்க அறை கூவி அழைக்கிறார்களே! ஆண்கள் குடித்து குடித்து குடும்பத்தை கண்ணீரில் மூழ்கடித்தது போதாதா? பெண்களும் குடித்து விட்டு தன் பங்கிற்கு கும்மாளம் போட ஆரம்பித்தால் சின்னஞ்சிறுசுகள் டீக்கு பதிலாக காலையில் சூடான சாராயத்தைத் தானே குடிக்க வேண்டிய சூழல் வரும் என்ற ஆதங்கம் அடங்குவதற்குள் யு பி எஸ் நிறுவனம் ஒரு ஆய்வு தகவலை வெளியிட்டது. அதைப் பார்க்கும் போது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் உள்ளது.

இந்தியாவில் குடித்து தண்ணீரில் மிதப்பவர்களில் 7.5% பெண்கள் தானாம். இந்தியாவில் 16 கோடி பேர் மது அருந்துகிறார்கள். அப்படியென்றால் பெண்கள் எவ்வளவு பேர் குடிகாரரிகளாக மாறிவிட்டனர் என்று பார்த்து மலைத்து விடாதிருங்கள். கொரானா காலக் கட்டங்களில் தான் மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை  வளர்ந்து வந்துள்ளது.

இந்த செய்தியை வாசித்துக் கொண்டிருந்த போது ராஜேஸின் கண்களில் இருந்து இரத்த கண்ணீர் வடிந்தது. ஏன் என்றேன்? நான் சிறுவனாக இருந்த போது என்னுடைய உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அன்று திருவிழா மிகவும் கோலாகலமாக நடந்துக் கொண்டிருந்தது. இரவு 2 மணிக்கு கலை நிகழ்ச்சியை முடித்து விட்டு உறவினரின் வீட்டிற்கு வந்து படுத்திருந்தேன். சரியாக 4 மணி இருக்கும், வீட்டிற்குள் சண்டை பயங்கரமாக நடந்துக் கொண்டிருந்தது போல் தெரிந்து விழித்துப் பார்த்தேன். எனது உறவினர் நன்றாக குடித்து விட்டு அவர்களுடைய மனைவியோடு பயங்கரமாக கத்திக் கொண்டிருந்தார்.

நேரம் ஆக ஆக சண்டையை விடாமல் துவங்கிக் கொண்டிருந்த என் உறவினர் மனைவியை தாக்க ஆரம்பித்தார். தொடர்ந்து படுத்திருந்த பிள்ளைகள் ஒவ்வொருவரையும் அடித்து உதைத்தார். பிள்ளைகளெல்லாம் அப்பா ஒன்றும் செய்யாதிருங்கள் என்று கத்த கத்த அடித்து உதைத்தார். பிள்ளைகள் தெருக்களில் ஓட ஆரம்பித்தனர். நானும் ஓட ஆரம்பித்தேன். அடுத்த நாள் காலைக்கு வைத்திருந்த தோசை மாவு எல்லாவற்றையும் எடுத்து வெளியே ஊற்றினார். சமையல் அறையே போர்க்களமாக மாறியது.

காலை 6 மணிக்கு காவல் துறைக்கு போய் என் உறவினர்கள் போய் நின்றனர். எங்களைக் காப்பாற்றுங்கள். இந்த திருவிழா முடியும் வரைக்குமாவது இந்த போலீஸ் ஸ்டேசனில் அவரை அடைத்து வையுங்கள். எங்களால் நிம்மதியாக இருக்க முடியாது. எங்கள் புது உடையை எல்லாம் வைத்து தீ வைத்து விட்டார் என்று கதறினர்.

இப்பொழுது யோசித்துப் பார்க்கிறேன் ஒரு ஆண் குடிகாரனாக இருக்கும் போதே இத்தனையாய் கசப்பு உணர்வுகளோடு பிள்ளைகள் வளர்வதை பார்க்கிறேனே. ஒரு வேளை என் உறவினரின் மனைவியும் குடிகாரியாக இருந்திருந்தால் எவ்வளவு வேதனையை பிள்ளைகள் சந்தித்திருக்க வேண்டும் என்று எண்ணிப் பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது என்று சொல்லிய போது கையில் வைத்திருந்த செய்தி தாளில் இரண்டு சொட்டு கண்ணீர் விழுந்து நனைத்தது. பாலூட்டும் தாய் பீர் ஊட்டும் நாள் தொலைவில் இல்லை என்று கண்களை கர்சிப்பால் துடைத்துக் கொண்டு புறப்பட்டான்.  

பெண்கள் மது அருந்த பழகினால் எளிதில் மதுவுக்கு பல்டி அடித்து விழுந்து விடுவார்கள். ஏனென்றால் மதுவில் உள்ள ஆல்கஹால் அவ்வளவாய் அவர்களை எளிதாக ஈர்த்து விடும். ஒரு வேளை கருவுற்ற நிலையில் மது அருந்தினால், வயிற்றில் வளரும் குழந்தை மனவளர்ச்சி குன்றியதாகவோ, பல்வேறு குறைபாடுள்ள குழந்தைகளாக பிறக்கவோ வாய்ப்பு அதிகமாக உள்ளது.

மதுவுக்கு ஒரு பெண் அடிமையாக மாறிவிட்டால் அவர்கள் அதை வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்கள். இதன் விளைவில் அவர்கள் சுகம் பெற மருத்துவர்களை நாடுவதும் இல்லாமல் போய் விடும்

குடும்பத்திற்குள் பிரச்சனை ஏற்படும் போது, அதற்கு தீர்வாக மதுவை எடுத்துக் கொள்ள முற்பட்டால், அதன் விளைவு பரிதாபமாகவே மாறி விடும்.

ஒரு குடும்பத்தில் ஆணும், பெண்ணும் உட்கார்ந்து குடித்து விட பழகிவிட்டால் அடி தடிக்கு பஞ்சமே இல்லாமல் போய் விடவும் வாய்ப்பு உள்ளது. இதன் விளைவு ஒன்றும் அறியாத பச்சிளம் பிள்ளைகள் பரிதாப நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

மது அருந்தாமல் இருப்பதே இலட்சியமாக இன்றைய சமுதாயம் கருத வேண்டும். மது என்பது பிரச்சனைக்குத் தீர்வு அல்ல. அதே வேளையில் மது அருந்துவதால் சமுதாய அந்தஸ்து அதிகரிப்பதில்லை மாறாக சமுதாய சீர்கேடே அதிகரிக்கும். அதற்கு உதாரணம் தான் லோத். லோத் மதுவை குடிப்பவனாக காணப்பட்டாள். மதுவை குடிப்பதினால் தான் என்ன தவறு செய்கிறேன் என்பதே தெரியாமல் வாழ ஆரம்பித்தான். இவர்கள் வழி வந்த மோவாபியர், அம்மோன் சந்ததியானது திருமறையில் பார்க்கும் போது இறை மக்களுக்கு விநோதமானதாகவே காணப்பட்டது. (ஆதியாகமம் 19:31-38). பக்தியுள்ள சந்ததி வெளிப்படவே மனிதனை மனுஷியை உருவாக்கினார். ஆகவே நல் வழிகளைத் தெரிந்துக் கொள்வோம். கேட்டுக்குப் போகிற வாசல் விரிவானது, அலங்காரமானது, கவர்ந்து இழுக்கக் கூடியது. ஸ்பெஷலானது. ஆனால் அதன் முடிவோ பாம்பைப் போல் கடிக்கும், விரியனைப் போல் தீண்டும்.   (நீதிமொழிகள் 23:32) இதன் தொடர்ச்சியாக சண்டை, வேதனை, துக்கம், புலம்பல், அடிதடிகள் எல்லாம் கூட வந்து ஒட்டிக்கொள்ளும். நிதானித்து முடிவெடுங்கள்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி