தள்ளுதல் சீட்டின் விலை என்ன?


துபாய் மன்னருக்கும் அவரது மனைவியும் 2004ல் திருமணம் நடைப்பெற்றது. ஏக சந்தோஷத்தோடு வாழ்ந்தார்கள். அந்த அம்மா ஜோர்டான் மன்னரின் மகள். மிகவும் பணக்கார குடும்பம். பணம் இருந்தால் உலகத்தில் வேறு எதுவுமே தேவையில்லை என்று நினைப்போம். அது தவறு என்பதற்கு இந்த தம்பதியினர் தான் உதாரணமாக உள்ளனர்.

பணம் இருந்தாலும் வாழ்க்கையில் மகிழ்ச்சியாய் இருப்பதற்கு குணம் தான் அவசியம். குடும்பத்தில் சந்தோஷம் இருக்க வேண்டுமானால் மனதளவில் ஒத்துப் போகுதலும், இசைவாக நடந்துக் கொள்ளுதலும், பிறரின் மனதைப் புரிந்துக் கொள்வதும், மற்றவர்களை மகிழ்ச்சியாக வைப்பதும் போன்றவைகள் இன்றியமையாதது. குடும்பம், பிள்ளைகள் என்று வரும்போது அவர்களுடன் நேரம் செலவிடுவதும், மகிழ்ச்சியைப் பகிர்ந்துக் கொள்ளுதலும் இன்றியமையாதது. அவ்வாறு இல்லாமல் இயந்திரம் போல் வாழ்ந்தால் சிக்கல்களைத்தான் சந்திக்க வேண்டியதுள்ளது.

துபாய் மன்னரின் மனைவி ஹயா மூலம் இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளது. ஆனால் மன்னர் விவாகரத்து செய்து விட்டார். ஆனால் ஹயா சரி போனால் போகட்டும் என்று விடாமல் ஜீவனாம்சம் கோரி இங்கிலாந்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய, இங்கிலாந்து நீதிமன்ற வரலாற்றில் காணாத அளவிற்கு தீர்ப்பு வெளியிட்டனர். அதாவது ஜீவனாம்சமாக இந்திய மதிப்பின் படி 5521 கோடியாகும். 

இன்றைக்கு பல சண்டைகள் விவாகரத்து வரை இழுத்துக் கொண்டு போய் விடுகிறது. ஆனால் சண்டைகள் பலவற்றிற்கு மிகப் பெரிய காரணங்கள் இருப்பதில்லை. சின்ன காரியத்தைப் பேசிப் பேசி பூதக்கண்ணாடியின் வழியாக பார்க்க இனி வாழ்க்கையே போய் விடும் என்ற அளவிற்குப் போய் விடுகின்றனர்.

இப்படித்தான் ஒரு குடும்பத்தில் கணவன் மனைவிக்கும் இடையில் பிரச்சனை வந்தது. அந்த மனுஷன் ஒரு வேலையும் செய்யாமல் ஊரைச் சுற்றிக் கொண்டு இருந்தவன். கால்கட்டுப் போட்டால் சரியாயிடும் என்று பெற்றோர் ஒரு அப்பிராணியைக் கட்டி வைத்தனர்.

கணவன் வேலைக்கே போகாததைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, ஏதாவது வேலைக்குப் போய் சம்பாதித்து விட்டு வந்தால் தான் சாப்பாடு என்று கூறிவிட்டாள். எனவே யோசனைப் பண்ணிப் பார்க்க ஆரம்பித்தான்.

மனைவி அருகில் வந்து அமர்ந்து அவரிடம் என்ன யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றாள்.

ஒரு ஆட்டுக்குட்டியை வாங்கி வளர்க்கலாம் என்று ஐடியா உதிக்குது. அதை வளர்த்தால் குட்டிகள் போடும். அவை வளர்ந்த உடன் விற்று நல்ல பசுமாட்டை வாங்கி வளர்ப்பேன். நன்றாக பால் தரும். அந்த பாலை நானே வீடு வீடாக கொண்டு விற்பேன் என்றான்.

உடனே அவன் மனைவி அவனைப் பார்த்து, அப்படியென்றால் எங்க அம்மா பக்கத்து ஊரில் தான் இருக்கிறார்கள். போகிற வழியில் தினமும் ஒரு 1/2 லிட்டர் பாலைக் கொடுத்து வந்து விடுங்கள். பாலைக் குடித்தாவது, வயதான காலத்தில் நன்றாக இருக்கட்டும் என்றாள்.

அதுவெல்லாம் முடியாது வியாபார துவக்கத்திலேயே இப்படி பாலைக் கொடுக்க ஆரம்பித்தால் எப்படித் தான் நான் முன்னேற முடியும் என்றான். 

அதுவெல்லாம் முடியாது, ஊருக்கெல்லாம் பாலைக் கொடுக்கிற நீங்கள் எங்க அம்மாவிற்கு 1/2 லிட்டர் பாலைக் கொடுத்தால் கெட்டா போவீர்கள் என்று பதிலுக்குப் பேச சண்டை பெரிதாகியது. சண்டையை பக்கத்து கடைக்காரன் பார்த்துக் கொண்டு இருந்தான். இந்த முட்டாள் குடும்பத்தின் சண்டையை எப்படி நிறுத்த என்று யோசித்தான்!

கோபத்தில் ஒரு கம்போடு வந்தான். யோவ் உமக்கு அறிவு இருக்கிறதா, உன் மாடு என் தோட்டத்திற்குள் வந்து என் பயிரை எல்லாம் மேய்ந்து வீணாக்கிட்டுதே, எனக்கு நஷ்ட ஈடாக 2000/-  ரூபாயை கொடு, இல்லா விட்டால் நான் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என்றான்.

இதைக் கேட்டதும் திரு திருவென்று முழித்துக் கொண்டு, என்னடா நான் இன்னும் மாடே வாங்க வில்லை அதற்குள்ளாக எப்படி என் மாடு உன் தோட்டத்தில் வந்து மேய்ந்தது? என்றான்.

ஏ லூசு பயல மாடே வாங்குவதற்கு முன் உன் மாமியாருக்கு பால் கொடுப்பதை நினைத்து சண்டை இடுகிறாயே. உனக்கு என்ன ஆச்சு என்றான்.

புத்தி தெளிந்தவனாக சண்டையை விட்டு விட்டு அமைதியாக ஆடு வாங்குவதற்கு மார்கெட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

இப்படி அனேக குடும்பங்களில் எப்பொழுதோ உள்ள காரியங்களை நினைத்து சண்டை போடுவதும், நடக்காமலே நடக்க இருப்பது போல் எண்ணி சண்டை இட்டு மண்டையை உடைத்துக் கொள்வதும் அதிகமாக உள்ளது.

"சண்டைகாரியோடே/சண்டைக்காரனோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப் பார்க்கிலும், வீட்டின் மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம்" (நீதிமொழிகள் 25:24). "நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கப் பண்ணலாம், இனிய நாவு எலும்பையும் நொறுக்கும்" (நீதிமொழிகள் 25:15). சண்டையிடுவது என்பது குடும்பத்தில் உள்ள உறவை பாதிக்கும், மனமகிழ்ச்சியைக் கெடுக்கும். சண்டையிடாமல், பிறரை புண்படுத்தாமல், பிறரது மனதை கஷ்டப்படுத்தாமல் வாழ்வது எப்படி என்பதை ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டும். நாம் செய்கிற செயல் கடவுளுக்கு ஏற்புள்ளதா என்று யோசித்துப் பாருங்கள். கடவுளுக்கு ஏற்புடையது கணவன்/மனைவிக்கு ஏற்புடையதாக இருக்கும்.

சிலவேளைகளில் பொறுமையாக இருப்பது சண்டை, கோபம், எரிச்சலை அமர்த்தும் வழியாக இருக்கும். காலம் சிலவற்றிற்கு பதில் சொல்லும். விவாகரத்தை உடனே கொடுத்து குடும்பத்தை பிரிக்க நினைப்பதை தள்ளிப் போட்டாலே பல பிரச்சனைகளுக்கு தீர்வு வந்து விடும். துபாய் நாட்டின் மன்னருக்கு தற்பொழுது வயது 72.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி