வளையலாமா? வளைந்து கொடுக்கலாமா?
பழத்தட்டுடன் ஒரு குடும்பத்தினர் என்னைப் பார்க்க வந்தனர். பழத்தட்டை நீட்டினர். எதற்காக என்றேன். ஐயா பிடியுங்கள். எல்லாம் நல்ல விசயமாகத்தான் என்றார் காபிரியேல்.
வாங்கி மேஜை மீது வைத்து விட்டு, விசயத்தை சொல்லுமாறு கூறினேன். ஐயா உங்க கையால என் மகன் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்றார்.
எனக்கு அந்த குடும்பம் புதிதாக இருந்தது. புதிதாகத்தான் ஆலயத்திற்கு வருகிறார்கள். அவர்கள் குடும்ப பின்னனியம் திருச்சபை மக்களுக்கும் தெரியாது. எனவே யோசித்துச் சொல்லுகிறேன், 1 மணி நேரம் கழித்து வாருங்கள் என்று அனுப்பி வைத்தேன்.
ஒரு மணி நேரத்திற்குள் அந்த குடும்பத்தை பற்றி விசாரித்து அறிந்த போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த பையன் சுயவிருப்பப்படி ஏற்கெனவே திருமணமாகி பிரச்சனைகளோடு இருக்கிறான். இப்பொழுது பெற்றோர் தங்கள் விருப்பப்படி தங்கள் மகனுக்கு திருமணம் செய்து வைப்பதற்காகவே இங்கு குடியேறியுள்ளனர் என்பதைப் புரிந்துக் கொண்டேன்.
காபிரியேல் 1 மணி நேரம் கழித்து வந்தார் பழதட்டைக் கொடுத்து அனுப்பி வைத்தேன்.
பலவேளைகளில் மறுமணம் செய்வது, விவாகரத்துச் செய்வது போன்றவற்றிற்கு அங்கீகாரம் அளிக்க போதகர்கள், பேராயர்களை வளைக்கும் செயல் இன்றல்ல கால காலமாகவே நடந்து வருகிறது.
8 ஆம் ஹென்றி இங்கிலாந்து மன்னராக 1509ல் அரியணையேறினார். இவர் இளவரசரான ஆர்தர் இறந்தவுடன் அவருடைய மனைவியான கைம்பெண் கேதரினை திருமணம் செய்ய, பெர்டினான் என்ற ஸ்பானிய மன்னர், போப்புவிடம் அனுமதியளிக்க வருந்தி கேட்டுக் கொண்டார். காரணம் பெர்டினான்டு, இசபெல்லாவின் மகள் தான் கேதரின். இதற்கு அனுமதியளித்த போப் ஜுலியஸ் அன்றே விமர்சனத்துக்குள்ளானார். இந்த தம்பதிகளுக்கு பிறந்த 7 குழந்தைகளில் மேரி என்ற பெண்ணைத் தவிர அனைவருமே இறந்துப் போயினர். இந்த திருமணத்திற்கு இரண்டு பேராயர்கள் தவிர மற்ற யாருமே ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த திருமண வாழ்வைக் குறித்து பின்னாளில் ஹென்றி மனம் வருந்தினார். இறைத்தண்டனை தனக்கு கிடைத்ததோ என்று அஞ்சினார்.
இவ்வாறு சூழல் போய் கொண்டிருக்க ஹென்றியின் மனம் தடுமாற ஆரம்பித்தது. பென் ஆண்ணி பொலெய்ன் (Anne Boleyn) என்ற பெண்ணின் அழகில் மயங்கினார். எனவே கேத்ரின் உடனான திருமண உறவை முடித்து விட போப் தனக்கு Green signal கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். ஹென்றி அரசருக்கு ஆமா சாமி போடாவிட்டால் அரசரின் பகைக்கு உள்ளாக வேண்டுமே என்று எண்ணினார் போப். அதே வேளையில் இங்கு ok என்றால் ஸ்பானிய மன்னர் 5ம் சார்லஸின் அத்தை கேத்ரினாக இருப்பதால் அவர் நம்மிடம் கோபம் கொள்வாரே என்று எண்ணி கண்ணை மூடிக் கொண்டு 5 வருடம் இந்த விஷயத்தில் பொறுமையாக இருந்து விட்டார்.
பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்த ஹென்றி தாமாகவே divorce செய்துக் கொண்டார். போப்புவுக்கும் அரசருக்கும் இருந்த உறவு அறுந்துப் போனது. இச்சூழலில் தாமஸ் உல்சி என்ற தலைமைப் பேராயரை பொறுப்பிலிருந்து விடுவித்தார் ஹென்றி அரசர்.
இந்த தாமஸ் உல்சியின் புலம்பலை ஷேக்ஸ்பியர் கீழ்கண்டவாறு பதிவு செய்துள்ளார், "ஐயோ இந்த அரசனை சேவித்தது போல் என் ஆண்டவரை சேவித்திருந்தால், என் இறுதி வாழ்க்கை யாருமற்ற அகதியாய், என் எதிராளிகளுக்கு அடிபணியும் சூழலுக்கு என்னை கைவிட்டிருக்க மாட்டார்". என்று புலம்பியுள்ளார்.
இறைமக்கள் என்பவர்கள் இறைபயம் இல்லாமல் தாம் நினைத்தபடி எல்லாம் குடும்ப வாழ்வு வாழ்வதற்கு அங்கீகாரம் அளிக்க போதகர்களை நிர்பந்திப்பார்கள். ஆனால் பவுலடியார் கூறுவது போல் "என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவர்…” (அப்போஸ்தலர் 27:23) என்று தான் எதற்காக யாரால் ஆட்கொள்ளப்பட்டேன், எதற்காக நான் சேவை செய்கிறேன் என்பதை உணர்ந்து, திருமறையின் வெளிச்சத்தில் பிரச்சனைகளை ஆய்வு செய்து தீர்மானம் எடுக்க வேண்டும். திருச்சபையின் சட்ட திட்டங்களை சுயநலத்துக்காக வளைக்க பலர் முயல்வர். ஆனால் இறைவனின் பிரதிநிதியாக நின்று வழிநடத்த வேண்டும்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment