சுகமாய் இரு மருமகளே!
மாமியாருக்கும், மருமகளுக்கும் ஓயாத போர் ஒரு வீட்டில் நடந்துக் கொண்டிருந்தது. மாமியாருக்கு அனுபவம் அதிகமாக இருந்தபடியால் போரில் அடிக்கடி வெற்றி பெற்றுக்கொண்டிருந்தார். நடுவராக காணப்பட்ட மகன் அடிக்கடி அம்மாவிடம் bias ஆக நடந்துக் கொள்வதால் அம்மா நினைப்பது தான் நிலைத்து நின்றது!
எவ்வளவு நாள்தான் மருமகளோடு போராடுவது! எதிரியை முழுவதுமாக சாய்த்து விட்டால் போராட்டத்திற்கு முடிவு வந்து விடும் என்று மனக்கணக்குப் போட்டாள் மாமியார். அதற்கு வசதியாக ஒரு வாய்ப்பு வந்தது. வீட்டில் உள்ள தங்க நகை ஓன்று காணாமல் போகவே இது தான் சரியான நேரம் என்று மருமகள் மீது திருட்டு குற்றத்தை பலமாக வைத்தாள் மாமியார்.
குற்றம் செய்யவில்லை என்று தன்னை வீட்டில் உள்ளவர்களிடம் நிரூபிக்க முடியாததால் மரண தண்டனையை விதித்தார் மாமியார். மகனும் நேர்ந்து விட்ட ஆட்டைப் போல் தலையை ஆட்ட, ஒரு பெரிய சாக்குபைக்குள் மருமகளை பிடித்து வைத்து கட்டி மகனின் தலையில் ஏற்றிவிட்டாள். சுடுகாட்டிற்குள் சென்று எரித்து விடு. வீடு நல்லபடியாக இருக்கும் என்று அனுப்பி வைத்தாள்.
தாய் சொல்லைத் தட்டாத மகன், சுடுகாடு வரை சுமந்து சென்று அங்கே இறக்கி வைத்து விட்டு மனைவியை எரிக்க விறகைப் பொறுக்கப் போனான். அந்த நேரம் பார்த்து ஒரு ஆட்டை பெரியவர் ஒருவர் மேய்த்துக் கொண்டிருந்தார்.
தன் நிலையைக் கூறி தன்னை விடுவிக்க மன்றாடினாள். உடனே ஒரு ஆட்டைப்பிடித்து உள்ளே வைத்து இருவரும் கட்டினார்கள். அவள் அங்கிருந்து escape ஆனாள். புருஷனோ அறியாமல் ஆட்டை எரித்து விட்டு வீடு போய் சேர்ந்தான்.
மருமகளோ காட்டிற்குள்ளே இருந்த ஒரு திறந்த வெளி தேவாலயத்தில் தஞ்சமானாள். எதிர்பாராத விதமாக கொள்ளையர்கள் சிலர் அங்கு வந்து கொள்ளை பணத்தையும், நகைகளையும் பங்கு போட வந்தனர். அவர்களைப் பார்த்து பயத்தில் அலற, கொள்ளையர்கள் பேய்/பிசாசு என்று ஓடி பணம், நகையை விட்டு விட்டு தலை தெறிக்க ஓடி மறைந்தனர்.
அவள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு அதிகாலையில் வீட்டைப் போய் தட்டினாள். பேய், பிசாசு வீட்டிற்கு வந்திருக்கிறது என்று மாமியாரும் மகனும் அலற, “பயப்படாதிருங்கள் நான்தான்” என்று உள்ளே நுழைந்தாள். கையில் பணம், நகையுடன் இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.
மருமகள் தான் மரித்து பரலோகம் சென்றதாகவும் அங்கு மாமாவை சந்தித்ததாகவும் கூறினாள். மாமா பெரிய செல்வசீமானாக கடவுளுடைய சந்நிதியில் இருக்கிறார். அவர் தான் இதை தந்து என்னை மீண்டும் உலகிற்கு அனுப்பினார் என்றாள்.
அதைக் கேட்ட மாமியாருக்கு கேட்க கேட்க மருமகள் போன இடத்திற்கு நாமும் போகணும் என்று ஆசை வந்துவிட்டது. மாலை வேளையில் மகனை அழைத்து என்னையும் சாக்குப் பையில் வைத்து எரித்து விடு என்று அடம் பிடிக்க ஆரம்பித்தாள் தாய். வேறு வழியில்லாமல் வழியனுப்பிவைத்தான் மகன்.
வாழ்க்கையில் பிள்ளைகளை திருமணம் செய்து வைத்த பின்பும் மகன் தன்னையே பின்பற்றும் சீஷனாக இருக்க வேண்டும் என்று எந்த தாயாரும் நினைக்க கூடாது. தன் இடத்தை தன் மருமகள் பிடித்து விடுவாளோ என்று பயந்து மகனை மருமகளிடம் இருந்து பிரிக்கும் சூழ்ச்சிகள் செய்யக்கூடாது. மருமகள் மீது பொறாமைக் கொண்டு போட்டியிடக் கூடாது.
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.
என திருவள்ளுவர் கூறுகின்றார். இதன் பொருள் “மனதில் பொறாமை இல்லாத இயல்பை ஒருவன் வாழ்க்கை நெறியாகக் கொள்ள வேண்டும்” என்கிறார்.
மாமியாராகிய நகோமி தன் மருமகளைப் பார்த்து "என் மகளே, நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்படி நான் உனக்குச் சவுக்கியத்தைத் தேடாதிருப்பேனோ?" என்று கூறுகிறார். இது நல்ல மனநிலை. மருமகளின் எதிர்காலம் தன் குடும்பத்தின் எதிர்காலத்தைச் சார்ந்து இருக்கிறது எனக் காட்டுகிறது. தான் சந்தோஷமாய் குடும்ப வாழ்க்கை நடத்தியது போல் தன் மருமகளும், நல்ல குடும்ப வாழ்க்கை வாழ்ந்து மகிழ்ந்திருக்கட்டும் என்ற மன நிலையில் பெருகியிருந்தது. இந்த மனநிலையை மாமியார்கள் இன்று பெற்றுக் கொள்வது அவசியம்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment