சுகத்திலும் சுகவீனத்திலும்
வாழ்க்கையில் எதிர்பாராத சூழல்கள் எப்பொழுது ஏற்படும் என்று தெரியாது. அன்று டேனியலும், லோவிசாளும் இரு சக்கர வாகனத்தில் ஒரு திருமண வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. இருவரும் இரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதைப் பார்த்த மற்ற வாகனத்தில் வந்தவர்களால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
லோவிசாளுக்கு சிறிய காயங்கள் தான். ஆனால் டேனியலுக்கு முதுகுதண்டிலே பலத்த அடி. இருவரும் இளம் தம்பதியினர். டேனியல் சரியாக நடக்க முடியாதவனாக, வாயிலிருந்து உமிழ்நீர் வடிந்துக் கொண்டும் இருந்தது. பார்த்தவர்கள் எல்லாரும் ஐயோ பாவம் என்று சொல்லிக் கொண்டார்கள். லோவிசாளோ ஆண்டவரே ஏன் இப்படிப்பட்ட சம்பவத்தை அனுமதித்தீர் என்று கேள்வி எழுப்பினாள்.
மருத்துவமனையில் இருக்கும் போது எமி கார்மைக்கேல் அவர்களின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தகம் கையில் கிடைத்தது. அதில் ஒரு ஜெபம் அவளைத் தொட்டது.
"நானும் எனக்கருமையானவர்களும் உமக்குத் தகுதியான வகையில் தொண்டு செய்ய நீர் எனக்கு எதைச் செய்தாலும் சரிதான் சுவாமி" என்பது தான்.
வாழ்க்கையில் புயலாக மாறி டோனாவூர் பகுதியிலே பலத்த செயலைச் செய்த எமி அவர்கள் 20 ஆண்டுகள் படுக்கையில் காலம் கழிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்பொழுது ஏறெடுத்த ஜெபம் தான் இது.
பலர் இது 'பேயின் விளைவு' என்றும் சிலர் 'கடவுளின் சாபம்' என்றும் வசைப் பாடினார்கள். தாங்க முடியாத வேதனையிலும் ஏன் ஆண்டவரே என்று கேட்க துணியவில்லை.
ஒரு முறை மிகுந்த மன சோர்வுக்குள்ளானார்கள் எமி அம்மா அவர்கள். ஓடி ஓடி பணிச் செய்தவர்கள் சக்கர நாற்காலியிலேயும், படுக்கையிலும் இருந்து பணி ஆற்றிய போது எப்படியோ மன சோர்வு ஏற்பட்டு விட்டது. அப்பொழுது அவர்களுக்கு ஆண்டவர் யோபு 23:10 யை ஞாபகப்படுத்தினார். "நான் போகும் வழியை அவர் அறிவார்" என்ற யோபுவின் நம்பிக்கையின் குரல் தான். அவ்வளவு தான் ஆண்டவர் மூலமாக முற்றிலுமாக தேற்றப்பட்டார்.
வாழ்க்கையில் இனி எப்படி இருக்குமோ என்ற அச்சம் நீங்கியது. ஒவ்வொரு நாளையும் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள விரும்பினார். இந்நேரத்தில் 'தங்க சரட்டில்' (Gold Cord), முள்ளில் மலர்ந்த ரோஜா (Rose from Brier), மலைகள் அதிர்ந்தாலும் (Though the mountains Shake), நிலவொளியில் சேகரிக்கும் தங்கம் (Gold by moonlight), எருசலேமை நோக்கி (Towards Jerusalem) போன்றவற்றை எழுதி மக்களை ஆண்டவருக்குள் வழி நடத்தினார்.
இதை வாசித்த போது லோவிசாளுக்கும், டேனியலுக்கும் நம்பிக்கைப் பிறந்தது. சுகத்திலும், சுகவீனத்திலும் இணைந்து இறைவன் ஏற்படுத்திய வாழ்க்கையில் பொறுமையோடு ஓட அர்ப்பணித்தனர். கணவனுக்கு செய்கிற சேவை கூட இறைவனுக்கு செய்கிற சேவைக்கு ஒத்ததே என்பதை உணர ஆரம்பித்தாள் லோவிசாள். கண்ட கணவனிடத்தில் அன்பு கூறாதவன் காணாத கடவுளிடம் எப்படி அன்பு கூற முடியும் என்று திருமறை காதில் ஓயாமல் ரீங்காரமிட்டது.
முழங்காலை முடக்கினாள் கணவனின் bed அருகில், டேனியல் கையைப் பிடித்தாள், மீண்டும் கூறினாள், "வாழ்விலும், தாழ்விலும், சுகத்திலும், சுகவீனத்திலும், மரணம் நம்மை பிரிக்குமளவும் நாங்கள் இணைந்து வாழ்வோம்", என்று கண்ணீர் மல்க ஜெபித்தாள்.
தன் வாழ்க்கை என்ன ஆகுமோ என்று கலங்கிய டேனியல் முகத்தில் சூரியன் கிழக்கே இருந்து உதித்தது. மொட்டு விரிந்து மலராய் மாறியது அவனது முகம்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment