குறை காண்பது குற்றமா?
இளைஞன் ஒருவன் கையில் உளியுடன் சிலை ஒன்றை செதுக்கிக் கொண்டிருந்தான். ரோம புராண கதைகளில் வரும் தெய்வத்தின் முகத்தை வடித்துக் கொண்டிருந்தான். அந்த தெய்வத்தின் பெயர் ஃபான்(Faun). அதற்கு ஆட்டின் கண்களும், நீண்ட மனித காதுகளையும், அகன்ற மூக்கும், அடர்த்தியான புருவமும், பெரிய மீசையையும் அமைத்துக் கொண்டிருந்தான். இது தான் Faun னின் கற்பனை உருவம். இந்த உருவகத்தை அமைக்க பழைய சிலை ஒன்றை வைத்துக் கொண்டான்.
இளைஞனின் கற்பனையையும் கொஞ்சம் கலக்க ஆரம்பித்தான். பொதுவாக Faun இளமையாக தோற்றமளிப்பார். ஆனால் இவன் செய்கிற Faun முதுமையானவர், பழைய சிற்பம் வாயை மூடிக் கொண்டிருக்கும், ஆனால் இவன் செதுக்கியதோ சிரித்த முகத்துடன் பல்லைக் காட்டிக் கொண்டிருக்கும்.
ஒரு நாள் அரசர் லொரென்ஸோ டி மெடிஸி கலைஞர்களின் கலை வடிவங்களைக் காண வந்தார். அவர் கண்ணால் இளைஞன் செதுக்கிய புது வகையான Faun கண்ணில் பட்டது. எப்பொழுதும் இல்லாத புன்னகையுடன் காணப்பட்ட கற்பனை மிகுந்த அந்த சிலையைப் பார்த்து அதை செதுக்கிய இளைஞன் மைக்கேலா ரூசலோவைப் பார்த்து super என்றார்.
சற்று உற்றுப் பார்த்த அரசர் மைக்கேலா ரூசலோவைப் பார்த்து, "தம்பி இந்த வயதான ஃபானுக்கு எப்படி இவ்வளவு பல் இருக்கும்” என்று ஒரு போடு போட்டார்.
மைக்கேலா ரூசலோ மெதுவாக உதட்டைக் கடித்துக் கொண்டு, ஓ கோ எங்கேயோ இடித்திருக்கிறதே என்று யோசித்தவன் மறுநொடியே உளியை எடுத்தான். Faun ன் மேல் தாடையில் உள்ள ஒரு பல்லை மெதுவாக உடைத்து எடுத்தான். இப்பொழுது பல்லை இழந்த Faun பல் இல்லாமல் சிரித்தது.
தன் தவறை உடனே திருத்திக் கொண்ட இளைஞனை அரசருக்குப் பிடித்துப் போய் விட்டது. சான் மார்கோ என்ற கலைப் பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கு அரசரே உதவினார். ஏனென்றால் அப்பள்ளியில் படிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. இங்கு கற்ற பின் ஆயுதத்தை கூர்மையாக்கியது போன்று அவனது திறமைகள் கூடியது. சிறந்த சிற்பியாக அவரது நாடாகிய இத்தாலியில் விளங்கினார். அவரது சிற்பங்கள் இன்றும் பாதுகாக்கப்படுகிறது. அவர் பிறந்தது 1475. காலங்கள் கடந்துப் போனாலும் அவரது படைப்புகள் நிலைத்திருக்க ஒரு காரணம் தவறுகளை உடனே களைந்துக் கொள்வதற்கு அவர் கொஞ்சங்கூட தயங்காதது தான்.
தாவீது தவறு இழைத்த உடன் நாத்தான் இறைவாக்கினர் வந்து சுட்டிக் காட்டுகிறார். இதை சற்றும் எதிர்பாராத அரசன் தாவீது தான் நிரபராதி என்று மெய்பிக்க முயற்சிக்காமல் உடனடியாக நான் கடவுளுக்கு முன்பாக தவறுச் செய்தேன் என்பதை ஒத்துக் கொள்ளுகிறான். (2 சாமுவேல் 12:13). இந்த மன மாற்றத்தைக் கண்ட இறைவன் அவனுக்கு மீண்டும் ஒரு நல்ல வாழவைக் கொடுக்கிறார். அவனைப் பார்த்து என் இருதயத்திற்கு பிரியமானவன் என்கிறார். மீண்டும் தாவீது தன்னுடைய அரசாங்கத்தை சரியாகக் கொண்டு செல்ல இறைவன் துணை புரிகிறார்.
இதைப் போன்று தான் குடும்ப வாழ்க்கையிலும் கூட நமது தவறுகளை கணவனோ அல்லது மனைவியோ அல்லது பெற்றோரோ சுட்டிக் காட்டும் போது அவைகளைக் குறித்து சிந்தித்து மாற்றிக் கொள்ள முற்பட வேண்டும். ஒருவர் தவறுகளை உணர்த்தும் போது அவர் தன் தவறை மாற்றிக் கொள்ள கால அவகாசங்களைக் கொடுத்து ஏற்றுக் கொள்ள வேண்டும். தவறு செய்யாத மனிதனே கிடையாது. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான குறைகள் காணப்படும். பிறர் குறையை மட்டும் சுட்டிக் காட்டிக் கொண்டே, குற்றப்படுத்திக் கொண்டே வாழ்ந்தால் வாழ்க்கை இனிமையாக அமையாது. திருந்தி வாழ வாய்ப்புகளைக் கொடுக்கிறவர்கள் மட்டும் தான் குடும்பமாக இன்றும் இணைந்து வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment