மதிக்கப்படும் உணர்வுகள்
குடும்ப வாழ்வில் கணவன், மனைவி இருவருடைய உணர்வுகளுக்கும் மதிப்பை மற்றவர்கள் கொடுக்கும் வரையிலும் பிரச்சனைகள் என்பது வராது. ஆனால் பிறருடைய உணர்வுகளை எப்பொழுது மதிக்க மறந்து விடுகிறோமோ அப்பொழுது பிரச்சனை என்பது தலைவிரித்தாடும்.
நம்முடைய நண்பர்கள் யார் என்று யோசித்துப் பாருங்கள்? அவரகளுடன் எவ்வளவு நேரம் பேசினாலும் நேரம் போவதே தெரியவில்லையே ஏன் தெரியுமா? உங்களது உணர்வுகளை உங்கள் நண்பர் நன்றாக புரிந்துக் கொள்கிறார்கள் மற்றும் மதிப்பளிக்கிறார்கள் என்பது தான் உண்மை.
கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள், மாணவிகள் சிலவேளை உற்ற நண்பர்களைப் போல் உடை, முடி அலங்காரம் செய்துக் கொண்டு ஒருவரை ஒருவர் காப்பி அடிப்பர். அதில் மகிழ்ச்சிக் கொள்வர். இதைப் போன்று தான் திருமண வாழ்விலும், குடும்ப வாழ்விலும் பல காரியங்களில் பிறர் உணர்வுகளைப் புரிந்து அவர்களுக்கு ஏற்றார் போல் நடக்க முற்பட வேண்டும்.
கணவனின் விருப்பு வெறுப்புகள் மனைவி புரிந்துக் கொள்ள ஆரம்பித்தால் உறவு வளரும், இல்லையெனில் உறவுகள் முறிவு எளிதில் ஏற்பட்டுவிடும்.
ஒரு முறை ஒரு கூடுகைக்கு பெரியார் அழைக்கப்பட்டிருந்திருந்தார். அந்த கூடுகையின் துவக்கத்தில் இறைவேண்டல் போடப்பட்டிருந்தது.
அந்த கூட்டத்தை ஒழுங்குபடுத்தியவர்கள் பெரியார் இதை ஏற்றுக் கொள்வாரா? எரிச்சல் அடைவாரா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது நேரம் ஆகிவிட்டது.
பெரியார் நிகழ்ச்சி நிரலைப் பார்த்தார். இறைவேண்டல் என்பதை பார்த்த உடன் சரி நேரம் ஆகிவிட்டது, "இறைவேண்டலை ஆரம்பியுங்கள்." என்று விழாவை ஆயத்தமாக்கினவரைப் பார்த்துக் கூறினார்.
இறைவேண்டல் செய்கிறவர் முன்னுக்கு வரும் முன் பெரியார் எழுந்து நின்றார்.
கூடுகைக்கு வந்தவர்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருந்தது. எப்படி பெரியார் எழுந்து நிற்கிறார், இவர் கடவுள் மறுப்புக் கொள்கையில் தீவிரமானவராயிற்றே என்று யோசித்தனர். ஆனால் அவரோ மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறவராகவே காணப்பட்டார். எனவே தான் இன்றும் பெரியாராகவே காணப்படுகிறார்.
இன்று உயர்ந்த பதவிகளில் வகிப்பவர்களை குறிப்பாக GM யை எப்படி மதிக்க வேண்டும், CEO வை எப்படி மதிக்க வேண்டும். அருகில் பணியாற்றுகிறவர்களுடன் எப்படி பணிவாக நடந்துக் கொள்ள வேண்டும், என்றெல்லாம் நன்றாக தெரிந்து வைத்துள்ளோம். அதற்கான பயிற்சியையும் பெற்றுக் கொள்கிறோம். ஆனால் நம்மோடு குடும்ப வாழ்க்கையை நடத்தும் நமது மனைவியை அல்லது கணவனை எப்படி மதிக்க வேண்டும் என்பது தெரியாமல் போய் விடுகிறது. சிலவேளை பிள்ளையை அல்லது பெற்றோரை எப்படி மதிக்க வேண்டும்? எப்படி பண்புடன் வாழ வேண்டும்? எப்படி உணர்வுகளைக் காயப்படுத்தாமல் பழக வேண்டும்? என்பதும் தெரிவதில்லை! காரணம் இவள்/இவன் நம்மை விட்டால் எங்கு போய் விடுவான்/ள்? என்று கருதி இழிவாக நடத்துகிறோம். ஆகவே தான் பிரச்சனைகளுக்குள் மாட்டிக் கொள்ளுகிறோம்.
சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட மதிப்பளித்துப் பாருங்கள். Office போய் விட்டு களைப்பாய் இருக்கிறாயே ஒரு Tea போட்டுத் தரவா? உனக்கு மூச்சு இளைக்கிறதே A/C யை Off பண்ணிடலாமா? மனது சரியில்லையா உங்க அம்மா அப்பா வை பார்த்து விட்டு வருவோமா? மிகவும் சோர்வாக இருக்கிறீயே ஒரு நாள் வெளியே போய் விட்டு வருவோமா என்று கூறி பிறரின் உணர்வுகளை புரிந்துக் கொண்டாலே வாழ்க்கையே சுகமானதாக மாறி விடும்.
"நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து அவர்களுக்குச் செய்ய வேண்டிய கனத்தைச் செய்யுங்கள். மேலும் நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இரக்கமுள்ளவர்களுமாயிருந்து..." (1 பேதுரு 3:7,8) இசைந்து வாழ பேதுரு அப்போஸ்தலர் நமக்கு ஆலோசனை வழங்குகிறார். திருச்சபையில் மட்டும் மற்றவர்களை கனம் பண்ணி, மதிப்போடு நடப்பது அல்ல குடும்ப வாழ்க்கையிலும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். குடும்ப வாழ்க்கையில் பிறர் உணர்வுகளை மதிக்க பழக பழக பொது இடங்களிலும் சிறப்பாக நாம் நடந்துக் கொள்ளுவோம்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment