எனக்கு எல்லாம் தெரியும்


இளைஞர்களுக்கு பிடிக்காத ஒரு காரியம் எதுவென்றால் பெரியவர்கள் ஆலோசனைச் சொல்வது தான். என்ன எப்பொழுது பார்த்தாலும் ஆலோசனைச் சொல்லிக் கொண்டே இருக்கிறீங்க எனக்கெல்லாம் இது பிடிக்காது என்று இளைஞர்கள் பெரியவர்கள் மீது எரிந்து விழுகின்றனர்.

Teen age வந்த உடன் தங்களுக்கு எல்லாம் தெரிகிறது, யாரும் நமக்குச் சொல்லித்தர வேண்டிய அவசியம் இல்லை என்ற மனநிலை வந்து விடுகிறது.

நம்முடைய நன்மைக்காகத்தானே இவ்வாறு சொல்லுகிறார்கள் என்ற எண்ணம் பொதுவாக வருவதில்லை. பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மேல் உள்ள பாசத்தினாலும், பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்ற பயத்தினாலும், தெரியாமல் எதைச் செய்யக் கூடாது என்ற எச்சரிப்பு உணர்வினாலும் தங்கள் அனுபவம் அவர்களுக்கு உதவும் என்ற எண்ணத்தினாலுமே ஆலோசனைகளைச் சொல்லுகின்றனர். 

அனுபவம் என்பது படிப்பதினால் வருவதைக் காட்டிலும் மேலானது. இப்படித்தான் ஒரு மருத்துவர் இருந்தார். அவருக்கு மிகவும் குறைந்த வயது.   மிகவும் துடிப்பானவர். சாதிக்க வேண்டும் என்ற ஆவல் எப்பொழுதும் அவர் உள்ளத்தில் பொங்கிக் கொண்டே இருந்தது. எனவே வெறும் மருத்துவ பணியில் மட்டும் வாழ்க்கைத் தேங்கி விடாமல் மலை ஏறும் செயலிலும் மிகவும் ஈடுபாடுடன் காணப்பட்டார்.

மிகவும் உயரமான, பனிகள் நிறைந்த மலைகளில் ஏறி திரும்புவது என்பது மிகப்பெரிய சாகசம் செய்த செயலாக அந்த பகுதி மக்கள் நினைத்து அவர்களுக்கு சிறந்த வரவேற்பை நடத்தி உள்ளத்தைக் குளிரவைப்பர்.

அப்படிப்பட்ட சாகச செயலுக்கு தயாரானார் இளம் மருத்துவர். மிகவும் உயரமான இடத்திற்கு ஏறுவதற்கு நல்ல ஒரு வழிகாட்டியும் உதவியாக இருந்தார். மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய உடலுடன் கயிறையும் இணைத்திருந்தார். மற்றொரு புறத்தில் வழிகாட்டி மிக சிறப்பாக ஆலோசனைகளை கொடுத்து மலையின் உச்சத்தை அடையும் படிச் செய்தார். மருத்துவர் மிகவும் பெருமிதம் கொண்டார்.

மலையிலிருந்து திரும்பும் போது மிகவும் சாகசம் செய்த உணர்வு அவர் தலைக்கு ஏறியது. கீழே வேகமாக இறங்கிக் கொண்டிருந்தார். மிக அருகில் வந்த போது அவர் உள்ளத்தில் தன்னால் இந்த கயிறு இல்லாமலே இறங்க முடியும். அது எனக்குத் தேவையில்லை என்று தூக்கி எறிந்து விட்டு இறங்க ஆரம்பித்தார்.

வழிகாட்டி இளம் மருத்துவரை எச்சரித்தார். தயவு செய்து அப்படிச் செய்யாதிருங்கள் என்று பலமுறை கூறியும் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் தன் திறமை மீது நம்பிக்கை உடையவராக இறங்கினார். 

திடீரென்று பனிப்பாறை அவரை வழுக்கிவிட்டது. உதவிக்கு கயிறை பிடிக்கத் தேடினார். ஆனால் அது அருகில் இல்லை. அதற்குள்ளாக தடுமாறிய அவர் பனிபாறையில் முட்டி மோதி மாண்டார். வழிகாட்டியோ ஒன்றும் செய்ய இயலாமல் கதறினார்.

"ஆலோசனையினால் எண்ணங்கள் ஸ்திரப்படும். நல் யோசனை செய்து யுத்தம் பண்ணு".  (நீதிமொழிகள் 20:18) என்று திருமறை இளைஞர்களுக்கு, இளம்பெண்களுக்கு அறிவுறுத்துகிறது. பெற்றோருடைய ஆலோசனைகளை கேலிச் செய்வது நல்லதல்ல. தகப்பனுடைய அனுபவங்களை பயனற்றது என்று தள்ளி விடக் கூடாது. அவைகளெல்லாம் பல புத்தகங்களைக் காட்டிலும் மேலானது.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

கலாச்சார நீரோடையில் அடித்துச் செல்லப்படும் திருச்சபை

நற்கிரியை செய்யும் பெண்

கவர்ச்சியா? கண்ணியமா?