உயர்ந்த ரகம்


வேட்டையாடுவதற்காக அரசர் அன்று விருப்பமாக இருந்தார். எனவே தன்னுடன் ஒரு அமைச்சரையும், ஒரு படைவீரனையும் அழைத்துக் கொண்டு காட்டிற்குள் சென்றார்.

அது ஒரு அடர்ந்த காடாக இருந்தது. மிருகங்களை வேட்டையாட சென்றுக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஒரு வேங்கை அவர்களை எதிர் கொண்டது. அதனை சற்றும் எதிர்பாராததால் மூன்று பேரும் தலை தெரிக்க ஆளுக்கொரு புறமாக தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்று காட்டிற்குள் ஓடி மறைந்தனர்.

சற்று நேரமான பின்பு மன்னர் என்ன ஆனாரோ என்று படைவீரன் அவரைத் தேட ஆரம்பித்தான். அப்படி தேடும் போது ஒரு மரத்தடியில் எந்த விதமான சலனமுமின்றி பெரியவர் ஒருவர் கண்களை மூடியவாறு பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

படை வீரன் அவரைப் பார்த்து, " பெருசு, யாராவது இந்த வழியாக வந்தாங்களா?" என்று கேட்டான்.

பெரியவர், "இல்லையப்பா" என்று கூறி விட்டு மீண்டும் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

சற்று நேரத்திற்கு பின்பு அமைச்சர் மெதுவாக மரத்திலிருந்து இறங்கி அரசர் என்ன ஆனாரோ என்று அவரும் தேட ஆரம்பித்தார். முனிவரைக் கண்டு அவரிடம் "ஐயா பெரியவரே, இந்த வழியாக யாராவது வந்தார்களா?" என்றார்.

அவரோ, "ஆம் அப்பா, இப்பொழுது தான் ஒருவர் இந்த வழியாக செல்கிறார்" என்றார்.

தனக்கு எந்த விதமான மோசமும் வராது என்பதை உணர்ந்து அரசரும் மெதுவாக ஒரு மரத்திலிருந்து இறங்கி மற்ற இருவரையும் தேட ஆரம்பித்தார். வழியில் பெரியவர் பிரார்த்தனைச் செய்வதைக் கண்டு, "ஐயா பெரியவரே, உங்கள் பிரார்த்தனைக்கு இடையூறு செய்ததற்கு என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.   இந்த பக்கமாக யாராவது வந்தார்களா?" என்றார்.  

பெரியவர் கண்களை மூடிக் கொண்டே, "ஆம் அரசரே, முதலாவது ஒரு காவலரும், பின்பு அமைச்சரும் வந்து சென்றார்கள்' என்றார்.

அரசருக்கு ஒரே ஆச்சரியம்! தன் கண்களைத் திறக்காமலே எப்படி என்னை அரசர் என்று பெரியவர் கண்டுபிடித்தார் என்பதை அறிந்துக் கொள்ள ஆசைப்பட்டார். ஆகவே மீண்டுமாக ஐயா, தாங்கள் என்னை எப்படி அரசர் என்று பார்க்காமலே அறிந்துக் கொண்டீர்கள் என்று கேட்டார்.  

பெரியவர், "அரசே இது எளியது". மூவரும் என்னிடம் கேட்ட விதத்திலேயே வார்த்தையிலேயே புரிந்துக் கொண்டேன்!! என்று கூறி விட்டு தொடர்ந்து பிரார்த்தனையில் ஈடுபடலானார்.

ஒருவருடைய வார்த்தைகள் என்பது அவரவருடைய வளர்ச்சியை வெளிப்படுத்தக்கூடியது. ஒருவர் பேசப் பேச அவருடைய பண்புகள், குணநலன்கள், சிந்தனைகள் எல்லாம் வெளிப்பட ஆரம்பித்து விடும். ஒருவர் முட்டாளா? அல்லது அறிவு, தெளிவு உடையவரா என்பதை வெளிப்படுத்தி விடும். நம்முடைய பேச்சுகள், வார்த்தைகள் என்பது மெருகேற வேண்டும். குடும்ப வாழ்க்கையிலும், சமுதாய வாழ்க்கையிலும், பணிபுரியும் இடங்களிலேயும் இனிமையாகப் பேசிப் பழக வேண்டும். கடினமான, தடித்த வார்த்தைகள் பேசுகிறவர்களை மக்கள் வெறுக்கத் தான் செய்வார்கள். பல குடும்பங்களில் தேவையில்லாத வார்த்தைகளைப் பயன்படுத்துவதினாலேயே பிரிவினைகள் ஏற்பட்டு விடுகிறது. கோபம் வரும் போது பேசாமல் வாயை மூடிக் கொண்டு இருந்தாலே பிரச்சனைகளில் பாதி இல்லாமல் போய் விடும்.

இயேசுவிடம் பழகி பேசி வாழ்ந்த பேதுருவுக்கு அவனுடைய வார்த்தைகள் இயேசுவைப் போலவே மாற ஆரம்பித்தது. இயேசுவை சிலுவையில் அறைய யூதர்கள் துடித்துக் கொண்டு குற்றம் சாட்ட காரணங்களைத் தேடிக் கொண்டு பிரதான ஆசாரியன் வீட்டில் இருந்தனர். பேதுருவோ வாசல் அருகே என்ன நடக்குமோ என்று தெரிந்துக் கொள்ள நின்றுக் கொண்டு மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருந்தான். அவன் பேச்சை கவனித்தவர்கள் பேதுருவைப் பார்த்து "மெய்யாகவே நீயும் அவர்களில் ஒருவன்; உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது என்றார்கள்". (மத்தேயு 26:73). இயேசுவின் இனிமையான வார்த்தைகளைப் போலவே பேதுருவும் பேசியுள்ளார். நண்பரே நீங்கள் எப்படி?   

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

கலாச்சார நீரோடையில் அடித்துச் செல்லப்படும் திருச்சபை

நற்கிரியை செய்யும் பெண்

கவர்ச்சியா? கண்ணியமா?